மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 மே 2020

கூடங்குளம்: மீண்டும் தொழிலாளர்கள் போராட்டம்! ரஷ்ய விஞ்ஞானிகள் அவசர வருகை!

கூடங்குளம்: மீண்டும் தொழிலாளர்கள் போராட்டம்! ரஷ்ய விஞ்ஞானிகள் அவசர வருகை!

டி.எஸ்.எஸ்.மணி

கூடங்குளம் அணு உலை, 33 ஆண்டுகளாக பல்வேறு மக்கள் போராட்ட எதிர்ப்புகளுக்கு மத்தியில், தள்ளாடிக் கொண்டு இயங்கி வருகிறது. ரஷ்ய நாட்டு அரசாங்க உதவியுடன் 1 & 2 உலைகளை கட்டி முடித்து, மின் உற்பத்தியை 2013 ம் ஆண்டு ஜூலையில், முதல் உலை மூலம் 1000 மெகா வாட் எனத் தொடங்கியது. ஆனாலும், 2 வது உலை எதிர்பார்த்த அதிகபட்ச மின் உற்பத்தியைத் தருவதில், சிக்கல் தொடர்ந்தது.

அதனாலேயே அவ்வப்போது உலைகளை மாறிமாறி மூடுவதும் திறப்பதும் என NPCIL எனும் இந்திய அணுசக்தி மின்னுற்பத்தி கார்ப்பரேஷன் லிமிடட் படம் காட்டி வந்தது. “கட்டிடக் கட்டுமானத்தையே, ‘கடல் மணல்’ வைத்துக் கட்டிவிட்டான். அது நிற்காது’’ என் ராதாபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு கூறி வருவார். தவிரவும், அருகே, நிலத்தில், தாதுமணல் சுரங்கங்களும், குவாரிகளும் இயங்குவதே, AERB என்ற அணுசக்தி ஒழுங்காற்றுக் கழக விதிகளுக்கு முரணானது. ஆகவே, எந்த பாதுகாப்பு உத்திரவாதமும் இல்லாமல், கவனக் குறைவாகவே, K.K.N.P.P. என்ற கூடங்குளம் அணுசக்தி மின் நிலையம் NPCIL மற்றும் அதன் பாகாசுர கட்டுமான ஒப்பந்த நிறுவனம் எல் & டி நிறுவனங்களால் நடத்தப்படாமல், கடத்தப்பட்டு வருகிறது என்பதை, செயற்பாட்டாளர்கள் பல ஆண்டுகளாக எச்சரித்து வருகிறார்கள்.

இப்போது, முதல் உலையில் 30-04-2020 அன்று எரிபொருள் மாற்ற என்று பழைய யுரேனியம் தடியை ( Uranium Rod) எடுத்து விட்டு புதியதை போட முயன்றது வெற்றி பெறவில்லை. ஆகவே, மின் உற்பத்தி நடக்க வில்லை. 2 வது அணு உலையில், உலை நெருக்கடியை சந்திக்கும் போது, குளிர்விப்பதற்காக உபயோகப்படுத்தப்படும், ஜெனரேட்டர் வேலை செய்யவில்லை. அதை வைத்துத்தான், அந்த ஜெனரேட்டர் பிரிவில் ஏற்பட்டுள்ள, வழக்கத்திற்கு மாறான அதிர்வுகளை( Unusual Vibrations) சரி செய்ய முடியும். அதை, இந்திய அணுசக்தி மின் உற்பத்தி கார்ப்பரேஷன் அறிவி யலாளர்களால், கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த நேரத்தில்தான், 5000 புலம் பெயர்ந்த கட்டுமான ஒப்பந்தத் தொழிலாளர்கள், மே மாதத்தின் முதலிரண்டு வாரங்களில், போராடி சொந்த ஊர்களுக்குத் தப்பிச் சென்று விட்டனர். 3 & 4 உலைகளின் கட்டுமானப் பணிகள் நின்று விட்டன. ஆனாலும், கட்டுமான ஒப்பந்தக்காரர் எல்& டி யுடன் சேர்ந்து, பல உள்ளூர் ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து, கட்டுமானப் பணி நடப்பதாக காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் நிர்வாகத்திற்கு வந்தது.

2வது உலையில் ஏற்பட்ட வழக்கத்திற்கு மாறான அதிர்வுகளை (Unusual Vibrations) நிறுத்த, ரஷ்ய அணு சக்தி அறிவியலாளர்களின் உதவியைக் கேட்டனர். ரூ.39,647 கோடிக்கு 3 & 4 உலைகளைக் கட்ட என்றும், 5 & 6 உலைகளை கட்டியெழுப்ப ரூ. 50,000 கோடிக்கு என்றும், இந்தியாவும், ரஷ்யாவும், ஒப்பந்தக் கையெழுத்து ஏற்கனவே போட்டுள்ளனர். அந்த ஒப்பந்தப்படி, சிக்கல் வருமானால், கை நீட்டி காசு வாங்கிய ரஷ்யா, நேரில் வந்து சரி செய்து தர வேண்டும். ஆகவே, NPCIL ரஷ்யாகாரர்களை அழைத்தது. அணு உலைகள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன என்றும் செய்தி அனுப்பியதாகத் தெரிகிறது. ரூ.13000 கோடி செலவழித்து, முதல் இரண்டு அணு உலைகளைக் கட்டி விட்டோம். எப்படி நிறுத்த முடியும்? என்று நியாயம் கேட்ட முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போன்றவர்கள், ரூ. 39,747 கோடி, ரூ.50,000 கோடி ஆகியவற்றுக்கு அடுத்தடுத்த உலைகளுக்கு, ஒப்பந்தம் போட, ஒப்புக்கொண்ட வரலாறு, இப்போது கை,கால்களை போட்டு இழுக்கிறது.

கடந்த புதன்கிழமை,மே- 20 ம் தேதி, ரஷ்யாவிலிருந்து ஏழு விஞ்ஞானிகள், அகமதாபாத்திற்கு சிறப்பு விமானத்தில் வந்திறங்கி, அங்கிருந்து தனி விமானத்தில் ( Charted Flight) மதுரை வந்து, சாலை வழியாக, கூடங்குளம் வந்தனர். அரசாங்கங்கள் ஒன்று நினைக்க, இயற்கை இன்னொன்று நினைத்தது போலும். ரஷ்யாவில், கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருப்பதால், வந்த ஏழு பேரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தனித்து செட்டிகுளம் NPCIL விருந்தினர் மாளிகையில், விடப்பட்டுள்ளதாக, தெரிகிறது.

இந்த நேரத்தில், கட்டுமானப் படம் காட்டும் எல் & டி நிர்வாகம், தன்னிடம் நேரடியாக, டோக்கன் பெற்று ஒப்பந்தப் பணி செய்பவர்களுக்கும், துணை ஒப்பந்தக்காரர்களிடம் பணியாற்றும் சில துறை ஊழியர்களுக்கும், முழுச் சம்பளத்தைக் கொடுத்து விட்டு.... எல்&. டி. யிடம், துணை ஒப்பந்தம் எடுத்துள்ள 50 ஒப்பந்தக்காரர்கள் மூலம் வேலைக்கு வந்த 1000 உள்ளூர் ( அருகிலுள்ள மூன்று மாவட்டக்காரர்கள்) தொழிலாளர்களுக்கு, இரண்டு மாதங்களாகச் சம்பளம் போடவில்லை. கேட்டால், ஓடிப்போய்விட்ட 5000 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் கடைசி மாதச் சம்பளம் போடாமல்தான் அனுப்பினோம் என்கிறார்களாம். இதைக் கேட்டு,பட்டினியில் பணிசெய்ய வந்த உள்ளூர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1000 பேர், வெகுண்டெழுந்து, மே 22 ஆம் தேதி உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தினார்கள். அவர்களை அழைத்து வந்த துணை ஒப்பந்தக்காரர்களின் இடைத்தரகர்கள் பேசி சமாதானம் செய்து, " இரண்டு நாட்களில்,்சம்பளம் போட்டு விடுகிறோம்" எனக்கூறி, கடைசி ஒரு மணி நேரம் வேலை பார்க்க வைத்துள்ளனர். ஆகவே மீண்டும் உலைகள் இயங்குமா என்பது கேள்விக்குறியே என்று 33 ஆண்டாக அணு உலை எதிர்த்துப் போராடும் செயற்பாட்டாளர்கள் சொல்கிறார்கள்.

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

சனி 23 மே 2020