ஆன்மீகத்தில் இருந்து பிறந்ததுதான் மதச்சார்பின்மை!

public

சத்குரு

“ஆன்மீகத்தில் இருந்து தான் மதச்சார்பின்மையே பிறந்தது. ஆன்மீக தன்மை இல்லாத மனிதர்கள் கையில் அதிகாரம் கிடைத்தால் பேரழிவுதான் விளையும்” என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

காவல்துறையில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாக, கர்நாடகாவின் ’சிங்கம்’ என அழைக்கப்படுபவர் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை. இவர் சத்குரு அவர்களுடன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார்.

அப்போது, அவர் காவல்துறை தொடர்பாக சில கேள்விகளை சத்குருவிடம் கேட்டார்.

அதில் முக்கியமாக “பொதுவாக ஆன்மீகத்துக்கும் காவல்துறைக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. காரணம், காவல்துறை என்பது மதச்சார்பற்று இருக்க வேண்டும் என்ற விதியின்படி, நாங்கள் இருக்கிறோம். ஆனால், மதத்துக்கும், மதச்சார்பின்மைக்கும், அத்தியாவசியமான மத நடைமுறைகளுக்கும் இடையே பெரிய குழப்பங்கள் உள்ளது. ஆன்மீகத்தையும் மதத்தையும் வித்தியாசப்படுத்தி பார்க்காத காரணத்தால் எங்கள் இதயத்தில் இருக்கும் ஈரம் சற்று குறைந்துவிட்டது என நினைக்கிறேன். அது குறித்து உங்கள் கருத்து என்ன?’ என்ற ஒரு கேள்வியை முன்வைத்தார்.

இதற்கு சத்குரு அளித்த வித்தியாசமான பதில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த பதிலில் சத்குரு கூறியிருப்பதாவது:

ஆன்மீகமென்றால் உடலுடன் இருக்கும் அடையாளத்தை விட்டுவிட்டு உள்ளத்துடன் (உயிர் தன்மையுடன்) அடையாளம் எடுத்து கொள்வது. நமக்கு எப்போது உள்ளத்துடன் (உயிர் தன்மையுடன்) அடையாளம் வந்துவிட்டதோ, அப்போது சாதி, மத வேறுபாடு கிடையாது. தேசம், குலம் என்ற வேறுபாடு கிடையாது. ஆண், பெண் என்ற வித்தியாசம் கூட கிடையாது. இதற்கு மேல் என்ன மதச்சார்பின்மை இருக்க முடியும்?

ஆன்மீகம் என்பது எல்லாவற்றுக்கும் உயர்ந்த மதச்சார்பின்மை. அதில் இருந்து தான் மதச்சார்பின்மை கொள்கையே பிறந்தது. நீங்கள் ஏதோ ஒரு கருத்தை வைத்து கொண்டு அதை மதச்சார்பின்மை என நினைத்தால்?

ஏதோ ஒன்றை எதிர்ப்பது மதச்சார்பின்மை அல்ல. எல்லாவற்றையும் சேர்த்து கொள்வது தான் மதச்சார்பின்மை.

அதிலும் அதிகாரத்தில் இருப்பவர்களிடம் ஆன்மீகம் இல்லையென்றால்… அவர்களுக்குள் குற்ற உணர்வு இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. நல்ல உணர்வுடனேயே குற்றம் செய்வார்கள்.

உலகில் நடக்கும் நிறைய குற்றங்கள் நல்ல உணர்வுகளுடன் தான் நடக்கிறது. ஒரு தரப்பினர் தங்கள் தேசத்திற்காக போராடுவதாக நினைத்து கொண்டு இன்னொரு தேசத்தினரை கொல்கிறார்கள். இன்னொரு தரப்பினர், எங்கள் மதத்துக்காக போராடுகிறோம் என கூறிக் கொண்டு பிற மதத்தினரை கொல்கிறார்கள். மற்றொரு தரப்பினர், ஜாதிக்காக செய்கிறேன் என சொல்லிக் கொண்டு பிற ஜாதியினரை கொல்கிறார்கள்.

இவர்கள் எல்லோருமே, அவர்களுடைய மனதளவில் நல்ல உணர்வுடன்தான் செயல் செய்கிறார்கள். ஆனால், துருதிர்ஷ்டவசமாக, அவர்கள் சின்னச்சின்ன அடையாளத்தை வைத்துக் கொண்டு இருப்பதால், அவர்களுக்கு எந்த உணர்வு வந்தாலும் அது வேறு யாருக்கோ எதிர்மறையாக இருக்கிறது.

இந்த சின்னச்சின்ன அடையாளங்களைத் தாண்டி நம் உயிருடன் எப்போது நமக்கு அடையாளம் வருகிறதோ அது தான் ஆன்மீகம். இது வராமல் எப்படி ஒரு மனிதருக்கு அதிகாரம் கொடுக்க முடியும். ஒருவருக்குள் ஆன்மீக தன்மை என்பது இருந்தால் தான் அதிகாரம் என்பது அவர் கையில் வர வேண்டும். ஆன்மீகம் இல்லாமல் அதிகாரம் மட்டும் வந்தால் உலகில் பேரழிவு தான் நடக்கும்.

இவ்வாறு சத்குரு பதில் அளித்துள்ளார்.

அண்ணாமலை ஐ.பி.எஸ் மட்டுமின்றி, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி ரவி மற்றும் எழுத்தாளர் பர்வீன் சுல்தானா ஆகியோர் பங்கேற்ற இந்த நேர்காணலை பார்க்க [இந்த லிங்க்கை](https://www.youtube.com/watch?v=j8BDpnDoAas) க்ளிக் செய்யவும்.

**

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்….

**

[சனிக்கிழமை இரவு மதுக்கூடங்கள்…!](https://minnambalam.com/public/2020/05/16/8/saturday0night-clubs-discotheque-dance)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *