‘கவலை வேண்டாம்’: இளைஞருக்கு உதவிய முதல்வர்!

கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள உதவும்படி வேண்டுகோள் விடுத்த இளைஞருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதவி செய்துள்ளார்.
கொரோனா பாதிப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரது கணக்கை டேக் செய்து உதவி கேட்பவர்களுக்கு அரசு அதிகாரிகள் மூலம் உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று (மே 22) அவரது ட்விட்டர் கணக்கை டேக் செய்து பாலா என்ற இளைஞர், “என் அப்பா கேரளா சென்று வந்தார். எனக்கு வைரஸ் அறிகுறி உள்ளது. நெஞ்சு வலியால் கஷ்டப்படுகிறேன். மருத்துவரிடம் சென்றால் திட்டி அனுப்புகிறார்கள், வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள உதவுங்கள் ஐயா. இல்லையெனில் தற்கொலை தான் முடிவு” என்று தனது செல்லிடைப்பேசி எண்ணையும் பகிர்ந்துள்ளார்.
கவலை வேண்டாம் @ThantapaniBala தம்பி. @Vijayabaskarofl @DrBeelaIAS அவருக்கு உடனடியாக பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். https://t.co/A11ycTyiVk
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 22, 2020
இதற்குப் பதிலளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கவலைப்பட வேண்டாம் தம்பி” என்று பதிவிட்டதுடன், உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோரை டேக் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில், “சம்பந்தப்பட்ட நபரிடம் பேசிவிட்டோம். அவர் கடலூரைச் சேர்ந்தவர். உடனடியாக அவருக்குச் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ட்விட்டரில் உதவி கேட்ட இளைஞருக்கு உதவியதை அடுத்து முதல்வருக்கும், சுகாதாரத் துறை செயலாளருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.