மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

சிறப்புச் செய்தி: 20 லட்சம் கோடி பொருளாதாரத் தொகுப்பும், மோடி சர்காரின் பேரியல் பொருளாதார அணுகுமுறையும்!

சிறப்புச் செய்தி: 20 லட்சம் கோடி பொருளாதாரத் தொகுப்பும், மோடி சர்காரின் பேரியல் பொருளாதார அணுகுமுறையும்!

மின்னம்பலம்

நா.ரகுநாத்

கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ஒன்றிய அரசு அமல்படுத்திய ஊரடங்கால் வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்குப் போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்ற விமர்சனம் தீவிரமடைந்து கொண்டிருந்தது. ஊரடங்கு போடப்பட்டு, கிட்டத்தட்ட ஐம்பது நாட்களுக்குப் பிறகு, சென்ற வாரம் மீண்டும் நாட்டு மக்களிடம் பேசிய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரத் தொகுப்பு ஒன்றை அறிவித்தார். இது நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (GDP) 10 விழுக்காட்டுக்கு சமம் என்பதால், தாமதமாக வந்தாலும் துணிச்சலான நடவடிக்கை என்று முதலில் பரவலாகப் பார்க்கப்பட்டது. அதன் உள்ளடக்கங்களை ஐந்து பாகங்களாக அடுத்த ஐந்து நாட்கள் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டபோதுதான் உண்மையான சங்கதி என்னவென்று தெரியவந்தது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ரூ.1.70 லட்சம் கோடி மதிப்பிலான முதல் பொருளாதாரத் தொகுப்பு, வணிக வங்கிகள் கூடுதல் கடன் வழங்குவதற்கு ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் விடுவிக்கப்பட்டிருந்த ரூ.8 லட்சம் கோடி பணம் ஆகிய இரண்டும் இந்த ரூ. 20 லட்சம் கோடி தொகுப்பில் அடங்கும். நிதியமைச்சரின் அறிவிப்புகளில் இருந்து தெளிவாகி இருப்பது என்னவென்றால், COVID-19 நெருக்கடியை எதிர்கொள்வதற்கும், ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், முடக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் அரசு நேரடியாக “பணமாக” செய்யப்போகும் செலவு உண்மையில் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டாது என்பதே. ஆக, 20 லட்சம் கோடி பொருளாதாரத் தொகுப்பில் அரசு செய்யப்போகும் செலவு வெறும் ரூ.2 லட்சம் என்றால், அது நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் வெறும் ஒரு விழுக்காடு (1%) மட்டுமே. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், பொருளாதாரத்தை முடுக்கிவிடவும் போதவே போதாது எனும் விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME) உட்பட அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் தொழில் நடத்துவதற்கு அவசர கால வங்கிக் கடன் வழங்க ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்திருந்தார். இந்தக் கடனை வாங்குவதற்கு ‘செக்யூரிட்டி’ வழங்கத் தேவையில்லை; அரசே இந்தக் கடன்களுக்குப் பொறுப்பேற்கும் என்ற உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது. இது முக்கியமான பேசுபொருளாகியுள்ளது. மேலும், சிறு வியாபாரிகள், சிறு விவசாயிகளுக்கும் கூடுதல் கடன் வசதிக்கான ஏற்பாடுகள் இந்தப் பொருளாதாரத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. 20 லட்சம் கோடி பொருளாதாரத் தொகுப்பில் கிட்டத்தட்ட 75 விழுக்காடு வங்கிக்கடன் தொடர்பான அறிவிப்புகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புச் சட்டம்/திட்டத்துக்கு (MGNREGA) கூடுதலாக ரூ.40,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஒரு மாதத்துக்கு தலா ஐந்து கிலோ உணவு தானியம் மற்றும் ஒரு குடும்பத்துக்கு ஒரு கிலோ பருப்பு இலவசமாக அடுத்த இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. “சீர்திருத்தம்” என்ற பெயரில் பல தனியார்மயமாக்கல் தொடர்பான அறிவிப்புகளும் இந்தத் தொகுப்பில் இருந்தன.

மக்களின் கைகளில் உடனடியாகப் பணத்தைக் கொண்டு சேர்ப்பதை விட்டுவிட்டு, வங்கிக் கடன் வழங்குவதன் வழியாக பொருளாதாரத்தை மீட்டெடுக்க நினைக்கும் மோடி அரசின் அணுகுமுறை, பொருளாதாரத்தில் நீண்டகாலமாக இருக்கும் கிராக்கிப் பிரச்சினையை (Demand Slowdown) சரிசெய்ய எந்த வகையிலும் உதவாது என்பதைப் பலதரப்பட்ட பொருளாதார அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதாவது, மக்களிடையே வாங்கும் சக்தியை (Purchasing Power) உயர்த்தி பொருட்களுக்கான கிராக்கியைத் தூக்கிவிடாமல், எவ்வளவு கடன் வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தாலும் தொழில் நிறுவனங்கள் மீண்டும் உற்பத்தியைத் தொடங்குவதற்கு முன்வரமாட்டார்கள் என்பதே இதன் சாராம்சம்.

நேற்று முன்தினம் CNN-News18 தொலைக்காட்சிக்கு நிதியமைச்சர் அளித்த பேட்டியில் உடனடியாக கிராக்கியைத் தூக்கிவிட எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் இதுவே: “நீங்கள் சொல்வதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். பொருளாதாரத்தை முடுக்கிவிடுவதற்கு கிராக்கி மிகவும் அவசியம்தான். ஆனால், மக்கள் நுகர்வுக்காகக் கடைகளுக்குச் சென்று நேரடியாக பொருட்களை வாங்குவது மட்டுமே கிராக்கி அல்ல. தொழில் நடத்துபவர்களுக்குக் கூடுதல் கடன் வசதிகளை அறிவித்துள்ளோம்; அவர்கள் தொழில் தொடங்கி உற்பத்திக்குத் தேவையான கச்சாப் பொருட்கள், இடைநிலைப் பொருட்கள் வாங்கும் போதும், தொழிலாளர்களுக்குக் கூலி/சம்பளம் கொடுக்கும்போதும் கிராக்கி உண்டாகும். மக்களிடம் நேரடியாகவே பணத்தைக் கொடுத்திருக்கலாமே என்ற வாதத்தைக் கடந்த சில நாட்களில் பலமுறைக் கேட்டுவிட்டேன். அரசுக்குப் பொருளாதார ஆலோசனை வழங்கும் பொருளாதார நிபுணர்கள் உட்பட நாங்கள் அனைவரும் ஆழமாகச் சிந்தித்து எடுத்த முடிவுதான் தொழில்களுக்குக் கடன் வழங்கும் திட்டங்கள். நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது, ஆனால் எங்களுடைய அணுகுமுறை மாறுபட்ட ஒன்று.” இந்தப் புரிதலும், அணுகுமுறையும் சரியானதா?

பேரியல் பொருளாதாரம் எப்படிச் செயல்படுகிறது?

பொருளியலில் நுண்ணியல் பொருளியல் (Microeconomics) மற்றும் பேரியல் பொருளியல் (Macroeconomics) என்று இரு பிரிவுகள் உள்ளன. நுண்ணியல் பொருளியல் என்பது ஒரு தனிநபர், ஒரு குடும்பம், ஒரு நிறுவனம், ஒரு சந்தையின் பொருளாதார செயல்பாடுகளைப் பற்றியது. பேரியல் பொருளியல் என்பது ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தின் செயல்பாடுகளைப் பற்றியது. Great Depression எனப்படும் பெரும் பொருளாதார வீழ்ச்சி 1930களில் உலகின் பல நாடுகளைக் கடுமையாக பாதித்தபோது, அந்த பொருளாதார வீழ்ச்சி எப்படி ஏற்பட்டது என்பதைப் பல பொருளாதார அறிஞர்கள் புரிந்துகொள்ள முயன்று தோல்வியைச் சந்தித்தனர். தனித்தனியாக இயங்கும் தனிநபர்கள், குடும்பங்கள், நிறுவனங்கள், சந்தைகளின் செயல்பாடுகளை ஒன்றுசேர்த்தால் அதுவே பேரியல் பொருளாதாரம் (Macroeconomy) என்ற அவர்களுடைய தவறான புரிதலே அதற்குக்காரணம்.

உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் நுகரப்படும்; மக்களின் சேமிப்புகள் அனைத்தும் முதலீடுகளாக மாற்றப்படும் என்ற புரிதலை அவர்கள் கொண்டிருந்தனர். உண்மையில் பேரியல் பொருளாதாரத்தின் இயக்க விதிகள் முற்றிலும் வேறு. மக்கள் தங்கள் வருமானத்தில் எவ்வளவு சேமிக்கிறார்களோ அந்த அளவுக்குப் பொருளாதாரத்தில் பொருட்களுக்கான கிராக்கி இருக்காது. ஒவ்வொரு தனிநபரும், குடும்பமும் எதிர்காலத் தேவைக்காக தங்களுடைய வருமானத்தில் கணிசமான பகுதியைச் சேமிக்க முடிவு செய்தால், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான கிராக்கி எங்கிருந்து வரும்? கிராக்கி இல்லாத காரணத்தால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களே விற்காமல் இருக்கும்போது மக்களின் சேமிப்புகளை வங்கிகளிடம் கடன் வாங்கி முதலீடு செய்ய யாரவது தயாராக இருப்பார்களா?

உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான கிராக்கி இல்லையென்றால், மேலும் முதலீடு செய்து உற்பத்தி மேற்கொள்வதை எந்தத் தொழிலதிபரும் விரும்ப மாட்டார்கள். பொருட்களே விற்காதபோது வருவாய் ஏது, லாபம் ஏது? தொழிலாளர்களுக்கு எப்படி ஊதியம் வழங்குவது? இவை சாத்தியம் இல்லை என்பதால் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். இது பொருளாதாரத்தின் பல துறைகள், பகுதிகளில் பரவலாக நடக்கும். வேலையிழந்த மக்களுக்கு வருமானம் இல்லாததால் அவர்களால் முன்புபோல் பொருட்களை நுகர முடியாது. ஏற்கனவே பொருட்களுக்கான கிராக்கி இல்லாத நிலையை இது தீவிரப்படுத்தி பொருளாதாரத்தை மந்தநிலைக்கு இட்டுச்செல்லும். பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும்போது எதிர்காலம் நிச்சயமற்றதாகிவிடும்; நிச்சயமற்ற எதிர்காலத்தில் கைகளில் பணம் வேண்டும் என்பதால் மக்கள் பணத்தை வெளியே எடுக்கத் தயங்குவார்கள். இதன் விளைவாக மந்தநிலை தொடரும், பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்கும்.

இந்த முடிச்சை எப்படி அவிழ்ப்பது? பொருளாதாரத்தின் செயல்பாட்டின்மீது மீண்டும் “நம்பிக்கை” பிறந்தால் மட்டுமே இந்த முடிச்சை அவிழ்க்க முடியும். அந்த நம்பிக்கை எங்கிருந்து வரும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. பரந்துபட்ட மக்கள் மீண்டும் பொருட்களை வாங்கத் தொடங்கும்போது அந்த நம்பிக்கை பிறக்கும். வேலையிழந்த மக்களுக்கு வேலை கிடைக்கும்போது, அவர்கள் கைகளில் மீண்டும் பணம் இருக்கும்; அதை வைத்து அவர்கள் சந்தையில் பொருட்களுக்கான கிராக்கியை உருவாக்குவார்கள். அதுசரி, வேலையிழந்தவர்களுக்கு வேலை கொடுத்து, சம்பளமும் கொடுக்கப்போவது யார்? அந்த மாபெரும் பொறுப்பை அரசாங்கம்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். கடன் வாங்கியாவது அரசு மக்களுக்காக செலவு செய்ய வேண்டும் என்ற புரட்சிகரமான வாதத்தை முன்வைத்தார் பிரிட்டிஷ் பொருளாதார அறிஞர் ஜான் மேனார்ட் கீன்ஸ்.

மக்களின் சேமிப்புகளை அரசு கடனாகப் பெறுவதில் எந்தத் தவறுமில்லை, ஏனென்றால் தனியார் துறையினர் கடன் வாங்கி முதலீடு செய்யத் தயங்குகிறார்களே... அரசு கடன் வாங்கி முதலீடுகளும், செலவுகளும் மேற்கொள்வதால் மந்தமாக இருக்கும் பொருளாதாரம் முடுக்கிவிடப்படும்; அரசு மக்களுக்கு வேலை கொடுத்து சம்பளமும் கொடுப்பதால் அவர்கள் அந்தப் பணத்தைப் பொருட்கள் வாங்க செலவு செய்வார்கள். ‘பொருட்களுக்கான கிராக்கி மீண்டும் உருவாகத் தொடங்கிவிட்டது; அதனால் உற்பத்தியைத் தொடங்கினால் பொருட்களை விற்று மீண்டும் லாபம் சம்பாதிக்கலாம்’ என்று தொழில் நடத்துபவர்களுக்கு நம்பிக்கை வரும். இது நடந்துகொண்டிருக்கும்போதே மக்களின் சேமிப்பு அதிகரிப்பதால் தனியார் முதலீடு செய்வதற்குத் தேவையான பணத்தை வங்கிகளிலிருந்து பெற முடியும்; பொருளாதாரப் பரிவர்த்தனைகள் இயல்புநிலைக்குத் திரும்புவதால் அரசுக்கு வரிவருவாய் அதிகரிக்கும். அதை வைத்து மக்களிடம் வாங்கிய கடனை அடைத்துவிடலாம்.

பொருட்களுக்கு கிராக்கி இல்லாதபோது எவ்வளவுதான் வட்டி விகதத்தைக் குறைத்தாலும் தனியார் கடன் வாங்க முன்வரமாட்டார்கள். ரிசர்வ் வங்கி போல் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மத்திய வங்கி monetary policy எனப்படும் பணக்கொள்கை வழியே வணிக வங்கிகளுக்கு கூடுதலாகப் பணத்தை விடுவித்தாலும் அது எதிர்பார்த்த பலனைத் தராது என்பது நூறாண்டுகால அனுபவம்; உலகப் பொருளாதாரம் வழங்கும் வரலாற்றுப் படிப்பினை. மந்தநிலை காலத்தில் அரசின் கைகளில் இருக்கும் fiscal policy எனும் நிதிக்கொள்கையே பொருளாதார வீழ்ச்சியை நிறுத்தி, அதை இயல்புநிலைக்கு திருப்ப முடியும். அதாவது, அரசு கணிசமாக செலவு செய்தால் மட்டுமே பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்.

ஆக, ஊரடங்கால் வேலையையும் வருமானத்தையும் பலகோடி மக்கள் இழந்திருக்கும் நிலையில், நிதியமைச்சர் அறிவிப்பைக் கேட்டதும் முடக்கப்பட்டுள்ள தொழில்கள் போட்டி போட்டுக்கொண்டு வங்கிக்கடன் வாங்கி மீண்டும் தொழில்களைத் தொடங்குவார்களா என்பது பெரிய கேள்விக்குறிதான். பெரும்பான்மைத் தொழில்கள் கடன் வாங்கி உற்பத்தியைத் தொடங்கவில்லை என்றால் நிதியமைச்சர் விளக்கிய “மாறுபட்ட அணுகுமுறை” செயல்படவில்லை என்று நாம் புரிந்துகொள்ளலாம்.

மோடி அரசின் பேரியல் பொருளாதார அணுகுமுறை

சந்தை அல்லது ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கி செலவுகளை மேற்கொள்ளும் நிதிக்கொள்கையைப் பயன்படுத்த மோடி அரசுக்கு துணிச்சலும், திராணியும் இல்லையா என்ற சந்தேகம் எழாமல் இல்லை. ஆனால், கடந்த ஆறாண்டுகளாக மோடி ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்டுள்ள பணக்கொள்கை மற்றும் நிதிக்கொள்கையை உன்னிப்பாக ஆராய்ந்துபார்த்தால், பேரியல் பொருளியல் பற்றிய இவர்களுடைய புரிதலே தவறாக இருந்துள்ளது தெளிவாகிவிடும்.

எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கையும், அரசின் நிதிக்கொள்கையும்தான் பேரியல் பொருளாதாரத்தை இயக்குவதற்குப் பயன்படும் இரு கருவிகள். பணக்கொள்கை தாராளமாக இருக்கும்போது, அதாவது வட்டி விகிதம் குறைவாக இருக்கும்போது, நிதிக்கொள்கை சற்று இறுக்கமாக இருக்க வேண்டும். இதன் பொருள், அரசு கடன் வாங்கி தாராளமாகச் செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதே. அதேபோல், நிதிக்கொள்கை தாராளமாக இருக்கும்போது, பணக்கொள்கை கொஞ்சம் இறுக்கமாக இருக்க வேண்டும் (வட்டி விகிதம் சற்று அதிகமாக இருக்க வேண்டும்). இரண்டுமே இறுக்கமாகவோ, அல்லது, இரண்டுமே தாராளமாகவோ இருந்தால் பொருளாதாரத்திற்கு கேடுதான்.

கடந்த ஆறாண்டுகளாக இந்தியாவில் இவ்விரண்டும் இறுக்கமாகவே இருந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே பணவீக்கம் ரிசர்வ் வங்கியால் வரையறுக்கப்பட்ட எல்லைக்கு உட்பட்டு இருந்துள்ளபோதும் வட்டி விகிதத்தை அது உயர்த்தியே வைத்துள்ளது. இதற்கு அரசும் தன்னுடைய முழு ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. மறுபுறம், நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் ஒன்றிய அரசு செய்யும் செலவின் பங்கு (Expenditure to GDP ratio) தொடர்ந்து குறைந்துகொண்டே வந்துள்ளது. இதன் காரணமாக, அரசின் வருவாய்க்கும் செலவுக்கும் இடையே உள்ள இடைவெளியான நிதிப்பற்றாக்குறையும் (Fiscal Deficit) குறைந்து வந்துள்ளது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது நல்லதுதானே என்ற கேள்வி எழலாம். பொருட்களின் உற்பத்தி மற்றும் அளிப்பை அதிகரித்து பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்; வட்டி விகிதத்தை உயர்த்தி அல்ல. வட்டி விகிதம் அதிகமாக இருந்தால், முதலீடு செய்வதற்காக கடன் வாங்கும் ஊக்கம் குறைந்துவிடும். இதனால் பொருளாதாரத்தில் புதிய உற்பத்தித் திறன் (Production Capacity) மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாவது பாதிக்கப்படும்; இவ்விரண்டும் பாதிக்கப்பட்டால் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் குறையும். கடந்த பத்தாண்டுகளாக தனியார் துறை முதலீடுகள் தொடர்ந்து சரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பணவீக்கமும் நிதிப்பற்றாக்குறையும் குறைவாக இருந்தால் தனியார் முதலீடுகள் மேற்கொள்ள ஏதுவான பொருளாதாரச் சூழல் அமையும் எனும் வாதம் இங்கு தவிடுபொடியாகிறது.

ஆதாரம்: பொருளாதார ஆய்வறிக்கை, நிதிநிலை அறிக்கை ஆவணங்கள்

ஒருபுறம் வாங்கிய கடனுக்கு அதிகமாக வட்டி செலுத்த வேண்டிய நிலை; மறுபுறம் பொருளாதாரம் வேகமிழப்பதால் மக்களிடையே பொருட்களுக்கான கிராக்கி குறைந்து நிறுவனங்களுக்குக் கிடைக்கும் வருவாயின் அளவு குறையும். இத்தகைய சூழலில் அரசும் தன்னுடைய முதலீடுகள் மற்றும் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் பொருளாதார வளர்ச்சியின் வேகம் மேலும் குறையத்தான் செய்யும்.

இப்படிப்பட்ட இறுக்கமான பணக்கொள்கை, நிதிக்கொள்கையைத் தழுவியதால்தான் முதலீடுகள் குறைந்து பொருளாதார வளர்ச்சி குன்றியுள்ளது; நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. இவை இனியும் தொடர்ந்தால் ஆபத்துதான்.

வெள்ளி, 22 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon