மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 22 மே 2020

சீன நிறுவனங்களைத் தாக்க அமெரிக்கா புதிய சட்டம்!

சீன நிறுவனங்களைத் தாக்க அமெரிக்கா புதிய சட்டம்!

அமெரிக்கா, சீனா ஆகிய உலகின் மிகப்பெரிய இரண்டு பொருளாதார நாடுகளுக்கு இடையே நிலவி வரும் அழுத்தமான சூழ்நிலையில், சீன நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு ஆகிய நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படாமல் இருக்க ஒரு புதிய சட்டத்தை அமெரிக்க செனட் சபை இயற்றியுள்ளது.

குடியரசுக் கட்சியின் ஜான் கென்னடி மற்றும் ஜனநாயகக் கட்சியின் க்ரிஸ் வான் இருவரும் இணைந்து சமர்ப்பித்துள்ள இந்த மசோதா அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டது. இந்த மசோதாவின்படி வெளிநாட்டு நிறுவனங்கள் தாங்கள் வேறு எந்த நாட்டு அரசாங்கத்தாலும் நிர்வகிக்கப்படவில்லை என்று சான்றிதழ் அளிக்க வேண்டும். அமெரிக்க நிறுவனங்களின் தணிக்கைகளை மேற்பார்வையிடும் அமைப்பான PCAOB–வின் விதிகளின்படி தொடர்ந்து தணிக்கை செய்யப்படவில்லை எனில் அமெரிக்கப் பங்கு சந்தையில் பட்டியலிடப்படுவதிலிருந்து தடை செய்யப்படும்.

அமெரிக்காவின் மில்லியன் கணக்கான டாலர்கள் சீன நிறுவனங்களில் புழங்குவதை அமெரிக்க சட்ட வல்லுநர்கள் நெடு நாட்களாகவே எதிர்த்து வந்தனர். இந்தப் புதிய சட்டத்தின் காரணமாக அமெரிக்காவில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்கள், குறிப்பாக பைடு மற்றும் அலிபாபா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன

நிறுவனங்கள் தாங்கள் எந்தவித வேறு ஓர் அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இயங்கவில்லை என்பதை நிரூபிக்கவில்லை எனில் பங்குச் சந்தைகளில் அவை பட்டியலிடப்படாது. “நான் ஒரு நெருக்கடியான நிலையை ஏற்படுத்த முயலவில்லை, சீனாவும் விதிகளின்படி செயல்பட வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கிறேன்” என்று செனட் சபையில் கென்னடி கூறியுள்ளார். மேலும் கென்னடி, ஏமாற்றுவதற்குப் பல மார்க்கெட்டுகள் உலகில் உள்ளன. அதில் ஒன்றாக இருக்க அமெரிக்காவுக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் அதிகரிக்க தொடங்கியபோது அதை சைனீஸ் வைரஸ் என்று அழைத்ததுடன், சீனா அரசாங்கத்தையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். மேலும் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் அடுத்து வரும் அதிபர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என மிகவும் ஆர்வத்துடன் சீன அரசாங்கம் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது சீன கம்பெனிகள் அமெரிக்க பங்குச் சந்தைகளில் பங்கேற்கிறது, ஆனால் அமெரிக்காவின் விதிகளை முறையாகக் கடைப்பிடிக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தப் புதிய சட்டம் அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கானது என்றாலும், குறிப்பாக சீனாவை மையப்படுத்தியே இது இயற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஓய்வூதிய திட்டத்தில் சீனா முதலீடு செய்வதைத் தடுத்ததைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் மூலம் பல சீன நிறுவனங்கள் பாதிப்படைவது உறுதியாகியுள்ளது.

- பவித்ரா குமரேசன்

தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

5 நிமிட வாசிப்பு

தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கிகள் இயங்காது!

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

3 நிமிட வாசிப்பு

மீண்டும் கொரோனா: சென்னையில் கட்டுப்பாடுகள்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி!

வெள்ளி 22 மே 2020