மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

கொரோனா சோதனை: மாவட்ட விவரங்கள் மறைக்கப்படுவது ஏன்?

கொரோனா சோதனை: மாவட்ட விவரங்கள் மறைக்கப்படுவது ஏன்?வெற்றிநடை போடும் தமிழகம்

கொரோனா தொடர்பாக தமிழக அரசு அறிவிக்கும் புள்ளி விவரங்களில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று ஏற்கனவே எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில்... ஒவ்வொரு நாளும் அரசு சார்பில் வெளியிடப்படும் குறிப்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தினந்தோறும் எவ்வளவு சோதனைகள் செய்யப்பட்டன என்பது குறித்தான விவரம் இடம்பெறவில்லை. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், துறைச் செயலாளர் பீலா ராஜேஷுக்கும் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மே 21 ஆம் தேதி ஒரு கடிதம் எழுதியுள்ளது. அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் எழுதிய அந்தக் கடிதத்தில்,

“ கொரோனா தொற்று சோதனை செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்ற நிலையை அடைவதற்கு பாடுபட்ட உங்களுக்கும் ஒட்டுமொத்த சுகாதார துறைக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். கொரோனா சோதனை குறித்தான பல விவரங்கள். தினந்தோறும் தரப்படும் செய்திக்குறிப்பில் வெளியாகின்றன. ஆனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் தினந்தோறும் எவ்வளவு சோதனைகள் செய்யப்படுகின்றன என்ற விவரம் அந்த அறிவிப்பில் இல்லை. அதிக சோதனைகள் செய்யப்படுகிறது என்று சொல்லப்படும் சென்னையில் கூட தினந்தோறும் எவ்வளவு சோதனைகள் செய்யப்பட்டது என்ற விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதில்லை.

கடந்த 3 வாரங்களாக இது குறித்தான கருத்தை ஊடக விவாதங்களில் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்பதை விவாதங்களில் கலந்துகொள்ளும் ஆளுங்கட்சி பிரதிநிதிகள் மூலம் தங்களுக்கு தெரியப் படுத்தப் பட்டிருக்கும் என்று நம்புகிறோம். பல ஊடகங்களும் இது குறித்து தங்களிடம் ஏற்கனவே கேள்வி எழுப்பியுள்ளார்கள். இருந்தபோதும் 20/5/20 வரை மாவட்ட வாரியாக சோதனை விவரங்கள் செய்திக்குறிப்பில் இடம்பெறவில்லை. ஒட்டுமொத்தமாக இதுவரை எத்தனை சோதனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் மட்டும்தான் உள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 4ன்படி(Voluntary disclosure of information) ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பொதுமக்களுக்கும் தங்கள் மாவட்டத்தில் எத்தனை கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள உரிமை உள்ளது. தங்கள் துறையால் இவ்விவரங்கள் வெளியிடப்படாததால் மக்களுக்கு அந்த உரிமை மறுக்கப்படுகிறது. தமிழகஅரசானது தானே முன்வந்து தகவல் தர வேண்டும் என்ற கடமையை(section 4) செய்யத் தவறியது ஆகிறது. மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசானது முழுமையான வெளிப்படைத் தன்மையோடு இயங்கவேண்டும் என்ற கருத்தில் தங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்காது என்று நம்புகிறோம்.

இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் தினந்தோறும் செய்யப்படும் கொரோனா சோதனை எண்ணிக்கை விவரங்களை, ஒவ்வொரு நாளும் வெளியாகும் பத்திரிக்கை குறிப்பில் வெளியிட உடனடியாக வழிவகை செய்ய வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார் செந்தில் ஆறுமுகம்.

-வேந்தன்

வெள்ளி, 22 மே 2020

அடுத்ததுchevronRight icon