மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

புலம்பெயர் தொழிலாளர்கள் 9 பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை?

புலம்பெயர் தொழிலாளர்கள் 9 பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை?

மின்னம்பலம்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவால் புலம் பெயர் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வரும் நிலையில் தெலங்கானாவில் கிணறு ஒன்றிலிருந்து 9 புலம் பெயர் தொழிலாளர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தின் கோரெகுந்தா கிராமத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதிகளுக்கு அருகிலிருந்த கிணறு ஒன்றில் நேற்று 4 உடல்கள் மீட்கப்பட்டது. இந்நிலையில் இன்று (மே 22) மேலும் 5 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 9 பேரில் 6 பேர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர், இருவர் பிகாரைச் சேர்ந்தவர்கள், ஒருவர் உள்ளூரைச் சேர்ந்தவர் என போலீசார் கூறுகின்றனர்.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மக்ஸூத் ஆலம் (56) மற்றும் அவரது மனைவி நிஷா ஆகியோர் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொழிலாளர்களாக வேலை செய்வதற்காக வாரங்கலுக்கு குடிபெயர்ந்ததாகவும், சணல் மில் ஒன்றில் பணியாற்றி வந்ததாகவும், ஆலம், அவரது மனைவி, மகள், மூன்று வயது பேரன், மகன்கள் சோஹைல் மற்றும் ஷாபாத் ஆகியோரது உடல்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர். அதுபோன்று திரிபுராவைச் சேர்ந்த ஷகீல் அகமது, மற்றும் பீகாரைச் சேர்ந்த ஸ்ரீராம் மற்றும் ஷியாம் ஆகியோரது உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இது தற்கொலை அல்லது கொலையாகக் கூட இருக்கலாம், விசாரணைக்கு பிறகே முழு விவரங்கள் தெரியவரும் என்றும் வாரங்கல் போலீசார் தெரிவித்துள்ளனர். வாரங்கல் ஆணையர் ரவீந்தர் கூறுகையில், தனிக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 9 பேரின் உடல்களில் வேறு எந்த காயங்களும் இல்லை. இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்று கூறியுள்ளார்.

உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர். கரிமாபாத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளனர். ஊரடங்கிற்குப் பிறகு, மில் குடவுனில் தங்க உரிமையாளரிடம் அனுமதி கேட்டுத் தங்கியுள்ளனர். இவர்கள் குடவுனின் தரைதள பகுதியில் தங்கியிருந்த நிலையில், பிகாரைச் சேர்ந்த இருவரும் முதல் தளத்தில் தங்கியிருந்தனர். இந்நிலையில், மில் உரிமையாளர் பாஸ்கர் நேற்று மதியம் குடவுனுக்கு சென்ற போது அங்கு அவர்கள் இல்லை என்பதால், அனைவரையும் தேடிய நிலையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

-கவிபிரியா

வெள்ளி, 22 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon