வரும் 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்தை படிப்படியாகத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளைத் தொடங்க விமான நிலையத்துக்கும், விமான நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் தற்போதைக்கு விமானச் சேவையைத் தொடங்க வேண்டாம் என்று பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, நிறுத்தி வைக்கப்பட்ட விமானச் சேவை 25 ஆம் தேதி முதல் உள்நாட்டில் மட்டும் சென்னை, கோவை உட்பட பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளது.
இதுபோன்று டெல்லி மும்பை போன்ற நகரங்களில் பயண நேரம் 90 முதல் 120 நிமிடங்கள் ஆக இருக்கும். குறைந்தபட்ச கட்டணமாக 3,500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 10,000 ரூபாய் வரை இருக்கும் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்துக்கு விமானச் சேவையை தற்போது தொடங்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் அதிகமாக இருப்பதால், மே 25ஆம் தேதி அல்லாமல், ஜூன் மாதத்திற்குப் பிறகு விமானச் சேவையைத் தொடங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அசாம் மாநில அரசு, தங்கள் மாநிலத்துக்கு விமானம் மூலம் யார் வந்தாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-கவிபிரியா