மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

சலூன்களில் பதிவேடு அவசியம்!

சலூன்களில் பதிவேடு அவசியம்!

மின்னம்பலம்

திண்டுக்கல் மாவட்டத்தில் சலூன் கடைகளில் வாடிக்கையாளர் பதிவேட்டை அவசியம் பராமரிக்க வேண்டும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கால் 50 நாட்களாக சலூன் கடைகள் பூட்டி கிடந்தன. இதற்கிடையே மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை தவிர இதர பகுதிகளில் சலூன்கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கிராமங்களில் சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே சலூன் கடைகளுக்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், “சலூன் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் கொரோனா தொற்று ஏற்படாமல் தவிர்க்க, சொந்தமாக துண்டு கொண்டு வர வேண்டும். அதேபோல் முடிதிருத்தம் செய்பவர்கள் கையுறை மற்றும் முகக் கவசம் அணிந்து இருக்க வேண்டும். சலூன் கடைகளில் தினமும் ஐந்து முறை கிருமிநாசினி மருந்து தெளிக்க வேண்டும். அடிக்கடி சோப்புப் போட்டு கைகளைக் கழுவ வேண்டும்.

மேலும், ஒருவருக்கு முடி திருத்தம் செய்து முடித்ததும் உபகரணங்களை கிருமிநாசினி மருந்தால் கண்டிப்பாகச் சுத்தம் செய்ய வேண்டும். இதுதவிர வாடிக்கையாளர்களை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில், ஒவ்வொரு சலூன் கடையிலும் பதிவேடு அவசியம் பராமரிக்க வேண்டும். இந்த விதிகளை கடைப்பிடிக்க தவறினால் சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

-ராஜ்

வெள்ளி, 22 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon