மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 16 மே 2020

சனிக்கிழமை இரவு மதுக்கூடங்கள்...!

சனிக்கிழமை இரவு மதுக்கூடங்கள்...!

சத்குரு

சனிக்கிழமை இரவுகளில் பிரபலமாகி வரும் மதுக்கூடங்கள், டிஸ்கோத்தே நடனம், கிளப்புகள் - இவையெல்லாம் மக்கள் நாடும் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களா? இவற்றின் பின்விளைவுகள் என்ன? இதை சரி செய்ய என்ன வழி? தெரிந்துகொள்வோம் இக்கட்டுரையில்...

இன்று உலகமே, முன் எப்பொழுதும் பார்த்திராத ஒருவித நரம்புத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. நவீன மனிதன் இன்று தன் உடலை உபயோகப்படுத்துவதை நிறுத்தி விட்டான். கடந்த காலத்தில், கடுமையான உடல் உழைப்பால் நரம்புகள் தானே சரியாக ஆயின. நீங்கள் வெளியில் சென்று ஒரு நாள் முழுவதும் விறகு வெட்டினால், உங்கள் சக்தியின் வெளிப்பாடு அதிகமாக இருக்கும், வாழ்க்கை அமைதியாக இருக்கும். ஆனால் இன்று அப்படி இல்லை. முன்பு இருந்தது போன்ற உடல் உழைப்பே இல்லை, அதனால் வெவ்வேறு விதமான நோய்கள் தாக்கி, நாளடைவில் பெரும் வியாதியாக மாறுகிறது.

இப்படித்தான் மதுபானக்கடைகள், டிஸ்கோத்தே, கிளப்புகள் போன்றவையெல்லாம் உருவாகின. மக்கள் தங்களின் நரம்புகளை எங்கேயாவது எப்படியாவது இயக்க வேண்டும். இந்த டிஸ்கோவைப் பார்க்க ஒரு பைத்தியக்கார இடம் போல இருக்கும், மூச்சு விடக்கூட இடம் இருக்காது. உங்களால் நடனமாடவே முடியாது. ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். ஆனால் அது ஒரு பொருட்டே இல்லை, நீங்கள் எப்படியாவது அதை செய்தாக வேண்டும், அவ்வளவுதான். இல்லையென்றால் பைத்தியம் பிடித்தார்போல் இருக்கும். ஆதலால் சனிக்கிழமைகளில் இந்த மாதிரி இடங்களுக்குச் சென்று நரம்புகளை செயல் படுத்தவேண்டும். அது ஒரு வாரத்திற்கு தாக்கு பிடிக்கும். பிறகு மறுபடியும் சனிக்கிழமை இரவு வேகம் தொடரும்.

இந்த பைத்தியக்காரதனத்திலிருந்து விடுபட வேறு வழியும் உள்ளது. இதைவிடுத்து நீங்கள் முன்னேற முடியும். அது தியானத்தின் மூலம்தான் சாத்தியம். அதன் பின்பு நீங்கள் நடனம் ஆடினால், அதனால் உண்டாகும் மகிழ்சிக்காக ஆடுவீர்களே தவிர, ஏதோ ஒன்றை சரி செய்வதற்காக ஆடமாட்டீர்கள். எதையோ சரி செய்வதற்காக நீங்கள் ஆடினீர்கள் என்றால் அது ஒரு சிகிச்சை முறையாக இருக்கலாம், ஆனால் அது அருவருப்பான ஒரு செயலாகத்தான் இருக்கும். அதில் காமம்தான் அடங்கியிருக்கும். அங்கு காதலால் ஆட முடியாது, காமத்திற்காகவே ஆட முடியும்.

காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வேறுபாடு உங்களுக்குத் தெரியுமா? காமம் என்பது ஒரு அதீதமான தேவை. காதல் ஒரு தேவை அல்ல. நீங்கள் காதலித்தால் அதில் வேறு தேவை எதுவும் இருக்காது. இப்படியே வாழ்நாள் முழுவதும் இருக்கலாம். ஆனால் காமம் இருந்தால் அமைதியாக எங்கேயும் உட்கார முடியாது. ஏதோ ஒரு பைத்தியக்காரமான செயலில் இறங்குவீர்கள் அல்லது பைத்தியமாக மாற வாய்ப்பும் உண்டு. உங்கள் நரம்புகளில் தளர்ச்சி இருந்தால் சிற்றின்பத்தை தேடுவீர்கள். உங்கள் சிற்றின்பம் எதைத்தேடி வேண்டுமானாலும் இருக்கலாம் - பாலியல் உறவு, சாப்பாடு, ஏதோ ஒருவகை செயல் அல்லது ஒரு பொழுதுபோக்கு - இதுதான் என்று இல்லை, எதுவாகவும் இருக்கலாம். சிற்றின்பம் இல்லாமல் உங்களால் வாழ முடியாது. உங்கள் வேலையே சிற்றின்பத்தின் வெளிப்பாடுதான். ஒரே வித்தியாசம் என்னவென்றால் அது சமூகரீதியாக அங்கீகாரம் பெற்றதாக இருக்கிறது அல்லது புகழ்பெற்றதாக உள்ளது. இன்று மக்கள் ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டே இருக்கிறார்கள். அது ஏதோ ஒரு அற்புதமான வேலை என்பதால் அல்ல, வெறுமனே ஏதோ செய்ய வேண்டும் என்பதற்காக செய்கிறார்கள் அவ்வளவுதான். என்ன செய்வது என்று தெரியாது என்பதால்தான் ஏதோ ஒன்றை செய்து கொண்டிருக்கிறார்கள்.

மனிதனுக்கு தனது பைத்தியக்காரத்தனத்தை மறைக்க ஒரு பொழுதுபோக்கு அம்சம் தேவையாக உள்ளது. அவன் முழுவதும் நிதானமாக இருந்தால், பொழுதுபோக்க வேறு எதுவும் தேவை இல்லை. வெறுமனே உட்கார்ந்து கொண்டு மூங்கில் வளர்வதை ரசித்துக்கொண்டிருக்கலாம்.

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்….

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் ...

6 நிமிட வாசிப்பு

'மன்னிப்பு கேட்க வேண்டும்': தலைமை நீதிபதிக்கு எதிராக வலுக்கும் குரல்கள்!

சனி 16 மே 2020