உயிர் காக்கும் உதவிகள்: நெகிழ வைக்கும் நாமக்கல் கிழக்கு திமுக

public

கொரோனா ஊரடங்கு காலத்தில் வழக்கமாக மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் செல்லவில்லை, இறப்புகளும் பெருமளவு குறைந்துவிட்டன என்றொரு செய்தியை வாட்ஸ் அப்பில் நாமெல்லாம் பார்த்திருப்போம். ஒரு சிலர், ‘ஆமால்ல… யாரும் இப்ப ஆஸ்பத்திரிக்கும் போறதில்லயே’ என்று நமக்குள் நினைத்துக் கொண்டிருப்போம்.

ஆனால் இது உண்மையான நிலை இல்லை. இன்னும் பலர் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள் ஊரடங்கோடும், நோய்களோடும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கோடு இவர்களின் குமுறலும் அடங்கியிருந்த நிலையில், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுகவின் சேவை அரசியல் மாச்சரியங்களைத் தாண்டி பாராட்டி ஆச்சரியப்பட வைக்கிறது.

ஊரடங்கு தொடங்கிய சில நாட்களில் பொதுமக்கள் பலருக்கும் உணவு, மளிகைப் பொருட்களைக் கொடுத்து அனைவரும் உதவி வருகிறார்கள். அந்த வகையில் நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரான ராஜேஸ்குமாரும், அவரது கட்சி நிர்வாகிகளும் பலருக்கும் உணவுப் பொருட்களை அளித்தனர். கிருமி நாசினிகளை, முகக் கவசங்களை அளித்தனர். அதன் பின் ஒருபடி மேலாக, உணவை விட முக்கியமான உயிர் காக்கும் மருந்துகள் இல்லாமல், அத்தியாவசிய மருத்துவமனைப் பயணங்களை மேற்கொள்ள முடியாமல் பலர் கஷ்டப்படுகிறார்கள் என்பதை அறிந்து, உணவுப் பொருட்களோடு உயிர் காக்கும் மருந்துகள் கொடுப்பதிலும் தீவிரமாகியிருக்கிறது நாமக்கல் கிழக்கு திமுக.

நாமகிரிபேட்டை ஒன்றியம் காமராஜ் நகரை சார்ந்த இதய நோயால் பாதிக்கப்பட்ட சுந்தரராஜன் தனக்குத் தேவையான மருந்துகள் எல்லாம் தீர்ந்துவிட்டதாகவும், மருந்து வாங்க குறிப்பிட்ட மருந்தகங்களுக்கு செல்லமுடியவில்லை என்று தகவல் அனுப்ப… அவரது வீட்டுக்குச் சென்று ஒரு மாதத்திற்கு தேவையான மருந்துகளை வழங்கினார் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் எஸ்.எம்.ரமேஷ்குமார். மருந்து தீரும் நிலையில் மீண்டும் அழைக்குமாறும் அவர் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.

இதேபோல நாமக்கல் நகரம் 26வது வார்டை சார்ந்த புஷ்பவள்ளி, சிவகுமார், சரசு, பாக்கியம், ஜோதி, கண்ணம்மாள், கஜலட்சுமி ஆகியோர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள். ரெகுலராக சாப்பிட்டு வரும் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பதாகவும் தகவல் வர, அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மருந்துகளை கொடுத்திருக்கிறாகள் திமுகவினர்.

இதேபோல நாமக்கல் நகரம் 28வது வார்டை சார்ந்தவர்களுக்கு புற்று நோய், இதய நோய், மூட்டு வலி ரத்த அழுத்த நோய்க்கான மாத்திரைகள் ஒரு மாதத்திற்குத் தேவையான அளவு வழங்கப்பட்டது.

நாமக்கல் ஒன்றியம் திண்டமங்கலம் ஊராட்சி ஆதி திராவிடர் காலனியில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான மருந்து , மாத்திரைகளை மாவட்டப் பொறுப்பாளர் ராஜேஷ்குமாரிடம் இருந்து பெற்று, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அய்யாவு , நாமக்கல் ஒன்றிய துணை செயலாளர் இராமசாமி ஆகியோர் உடனடியாக அப்பகுதிக்கே சென்று வழங்கியிருக்கிறார்கள்.

வெண்ணந்தூர் ஒன்றியம் அத்தனூரில் இதய நோய் மற்றும் மூளை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட ஏ.குணாளன், துரைசாமி,கனகம் ஆகியோருக்கு லோக்கல் நிர்வாகிகள் மூலமாக மருந்து உதவிகள் கேட்டதற்கிணங்க நாமக்கல் உடனடியாக அவர்களுக்கு மருந்துகளை வழங்கினார் ராஜேஸ்குமார்.

உயிர்காக்கும் மருந்து மாத்திரைகளை வீட்டுக்கே சென்று வழங்கிவந்த நிலையில் சேந்தமங்கலத்தில் கூலித் தொழிலாளி மாதேஸ்வரனின் மகன் கண்ணனின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருந்தது. கண்ணனுக்கு ரத்த சிகப்பு அணுக்கள் குறைபாடு இருக்கிறது. இதற்காக மாதாமாதம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு கண்ணனை அழைத்துச் சென்று சிகிச்சையெடுத்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தார் மாதேஸ்வரன். ஊரடங்கு உத்தரவை அடுத்து மார்ச் மாதம் சென்னை போக முடியவில்லை. கூலித் தொழிலாளியான மாதேஸ்வரனுக்கு சென்னை செல்வதற்கு தனியார் வாகனம் அமர்த்துவது,. அதற்கான ஈ பாஸ் எடுப்பது என்பதெல்லாம் பெரும் பிரச்சினையாக இருந்தது. உதயநிதியின் டோல் ஃப்ரீ எண்ணுக்கு போன் செய்து இதை சொல்லியிருக்கிறார் மாதேஸ்வரன். சில நாட்களில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் மாதேஸ்வரனைத் தொடர்புகொண்டு கேட்டிருக்கிறார். முதலில் சென்னை அழைத்துச் செல்ல ஆலோசித்திருக்கிறார்கள். ஆனால் இந்த நேரத்தில் சென்னை சென்று அங்கே ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது கடினம் என தெரிந்தபின் நாமக்கல் நகரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையிலேயே கண்ணனுக்கு தேவையான இந்த மாத சிகிச்சையை செய்ய ஏற்பாடு செய்துள்ளார் ராஜேஸ்குமார். எங்கள் பிள்ளையைக் காப்பாத்திட்டீங்கய்யா என்று அந்த பெற்றோர் நெகிழ கண் கலங்கிவிட்டார் ராஜேஸ்குமார்.

இதுபற்றியெல்லாம் நாமக்கல் கிழக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளர் கே.ஆர்.என். ராஜேஸ்குமாரிடம் மின்னம்பலம் சார்பாகப் பேசினோம்.

“கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு உதவி செய்வதற்காகவே பல இடங்களுக்கு சென்றுவந்தேன். அப்போது தடை செய்யப்பட்ட ஒரு பகுதியில் ஒரு அம்மா, போலீஸாரிடம் மருந்துச் சீட்டை காட்டி, ‘முக்கியமான மருந்துங்க. வாங்கறதுக்கு ஆஸ்பத்திரி போகணும்’என கேட்க, போலீஸ்காரரரோ, ‘இங்கிருந்து வெளியே போகக் கூடாதும்மா…’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த பின் உடனடியாக அந்த அம்மாவிடம் விசாரித்து அவருக்குத் தேவையான மருந்துகளை வாங்கிவரச் சொல்லி கொடுத்தேன். இதேபோல பலரும் இருப்பார்களே என்ற எண்ணத்தில்தான் உடனடியாக மூன்று போன் நம்பர்களைக் கொடுத்து வாட்ஸ் அப்பில் தகவல் பரப்பி, செய்தித் தாள்கள் வழியாகவும் அறிவித்தேன். அதுமுதற்கொண்டு நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுகவின் டோல் ஃப்ரீ நம்பர், இளைஞரணிச் செயலாளர் அறிவித்த டோல் ஃப்ரீ எண்ணில் கூப்பிடுகிறவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரை, சிகிச்சைகளை ஏற்பாடு செய்து தருகிறோம். இதயநோய், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு தொடர்ந்து மருந்து சாப்பிடுகிறவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குகிறோம். இதுவரை இருநூறு பேருக்கு மேல் உயிர்காக்கும் மருந்துகள் வாங்கிக் கொடுத்துள்ளோம். தலைவரின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் அடிப்படையிலும் இதைத் தொடர்கிறோம்” என்றார் நெகிழ்ச்சியாய்.

உயிர் காக்கும் உதவிகள் செய்யும் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமாரையும், நிர்வாகிகளையும் மாற்றுக் கட்சியினரும் மக்களும் மனம் திறந்து பாராட்டுகிறார்கள். இந்த முயற்சியை அரசு மட்டுமல்ல மற்ற கட்சிகள், தன்னார்வ நிறுவனங்களும் முன்னெடுக்கலாம்.

**-ஆரா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *