~அதிகரிக்கும் குடும்ப வன்முறை: தீர்வுதான் என்ன?

public

கொரோனா ஊரடங்கால் நாடெங்கும் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் கவலை தெரிவிக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், குடும்ப வன்முறைக்கான தீர்வென்ன என்பதை குறித்த ஆலோசனைகளை உளவியலாளர்கள் வழங்கியுள்ளார்கள்.

சர்வதேச வணிக நாளிதழான ‘பைனான்சியல் டைம்ஸ்’ நாளிதழ், கடந்த வாரம் வெளியிட்ட ஆராய்ச்சி கட்டுரையில், கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய காலந்தொட்டு பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை பெருகி உள்ளது என வெளியிட்டது. வுஹானில் தொடங்கிய இந்த கொரோனா உலகெங்கும் பரவி வைரஸ் நோய்தொற்றாக மட்டும் இல்லாமல், அதன் விளைவாக பல்வேறு மோசமான சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸைத் தடுப்பதற்கு ஊரடங்கும், தனிமைப்படுத்தலும் அவசியமாகும். ஆனால் இந்தக் காலகட்டத்தில் பெண்களும், பெண் பிள்ளைகளும் வீடுகளில் இருப்பவர்களால் வன்முறைக்கு ஆளாவதாக பல பெண்ணிய அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களாக, பொருளாதார மற்றும் சமூக அழுத்தங்கள் நாடெங்கும் அதிகரித்த வண்ணமுள்ளன. இதனால் நிகழ்காலத்தை எப்படி கடப்பதென்றும், எதிர்காலம் குறித்த பயமும் வளர்ந்து இருக்கிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதென்பதால் யாரும் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பெண்களுக்கு மிகுந்த பாதுகாப்பானதாக இருக்க வேண்டிய அவர்களது சொந்த வீடுகளிலேயே அவர்கள் வன்முறையை எதிர்கொள்கிறார்கள். இதில் உச்சகட்டமாக, ஊரடங்கின்போது வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஈஸ்டர் பெருநாளில் போப் ஆண்டவர் பிரார்த்தனை செய்யும் அளவுக்கு உலகெங்கும் குடும்ப வன்முறை அதிகரித்திருக்கிறது. இதிலிருந்தே நிலைமையின் தீவிரத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை, வாட்டிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்குள் ஈஸ்டர் சண்டே மாஸின்போது போப் பிரான்சிஸ் தனது செய்தியை இவ்வாறு வழங்கினார்: “பெண்கள் இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய அறிவிப்பை சீடர்களுக்குக் கொடுத்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். மருத்துவ அவசர காலங்களில்கூட, மற்றவர்களைக் கவனித்துக்கொள்வதற்கு எத்தனை பெண்கள் அர்ப்பணிப்போடு பணிபுரிகிறார்கள் என்பதை இன்று நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோரை கவனித்துக்கொள்வதன் மூலம், பல தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் முழு குடும்பத்தினருடனும் வீட்டிலேயே இருப்பதைக் காண்கிறோம். வாழ்வை பகிர்ந்து வாழ்வதன் காரணமாக வன்முறைக்கு ஆளாக நேரிடும் அவர்கள் அதிக சுமையைச் சுமக்கிறார்கள்” என்று போப் கூறியது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கொரோனாவின் தீவிர காலத்தில் முடங்கியுள்ள பொருளாதாரம் குறித்து ஆலோசிப்பது போல, அதிகரிக்கும் குடும்ப வன்முறையின் மீது கவனம் செலுத்தத் துவங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

COVID-19 பெருந்தொற்றின்போது உணர்ச்சிகளும் மன அழுத்தமும் அதிகமாக இயங்குவதோடு, தனிமைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக வீட்டை விட்டு பெண்கள் வெளியேற வாய்ப்பில்லை. இதனால், ஏற்கனவே வீட்டு வன்முறைக்கு ஆபத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் இன்னும் பாதிக்கப்படக்கூடியவர்களாக மாறியுள்ளனர்.

ஐ.நா பெண்களின் துணை நிர்வாக இயக்குநர் அனிதா பாட்டியா (பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை) கூறும்போது, “வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாக்க நாம் பயன்படுத்தும் அதே நுட்பம், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை மோசமாக பாதிக்கிறது” என்ற கசப்பான உண்மையை போர்ப்ஸ் பத்திரிகையிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

**உளவியலாளர்கள் கூறும் தீர்வுகளும் பாதுகாப்புக்கான வழிகளும்**

நிச்சயம் எந்த பிரச்சினைக்கும் தீர்வு இல்லாமல் இல்லை. அதே நேரம், தீர்வை எட்டுவதற்கு முன்பே வன்முறைகள் நடக்குமாயின், அதிலிருந்து தப்பிப்பதும் விலகுவதும் முக்கியமாகும். சில முக்கியமான உளவியலாளர்கள் தங்கள் கட்டுரைகளில் குறிப்பிட்ட தீர்வுகளையும், வன்முறை நடக்கும்போது பாதுகாப்பதற்கான வழிகளையும் கீழே கொடுத்துள்ளோம்.

1. உரையாடத் தொடங்குங்கள்: பெரும்பாலும் குடும்ப வன்முறையில் பாதிக்கப்படுவது பெண்களும், குழந்தைகளுமே. வீட்டில் உள்ள கணவர், மாமியார், மாமனார் என உங்கள் மீது யார் வன்முறையை பிரயோகிப்பவராக இருந்தாலும் அவரிடம் இது குறித்த ஆரோக்கியமான உரையாடலை தொடங்குங்கள். கசப்பான வார்த்தைகளோ, வசவுச் சொற்களோ இன்றி பேசுவது மிக முக்கியமானது. இச்சமயம், வீட்டை விட்டு வெளியேற முடியாது என்பதால் அவர்களது குறைகளை அவர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துரைப்பது தீர்வுகளுக்கு இட்டுச் செல்லலாம். உங்கள் கணவராக இருக்கும்பட்சத்தில் உங்கள் பரஸ்பர உறவை மேம்படுத்த இச்சமயம் மிகப் பொன்னான காலமாகும். கடந்த காலத்தின் அழகிய நினைவுகள், அவரது தனித்தன்மை, உங்கள் உறவின் முக்கியத்துவம் என ஆரோக்கியமான உரையாடலைத் தொடங்குங்கள். தவறு யார் மீது இருப்பினும், அதைப் பெரிதாக்காமல் ‘ரீஃப்ரெஷ்’ பட்டனை அழுத்துங்கள்.

2. உதவிக்கு அழைக்க தயங்காதீர்கள்: நீங்கள் துன்பத்துக்குள்ளாகும்போது, உடனடியாக அதனை உங்களுக்குள்ளேயே (உறவுக்குள்) சரிகட்ட முடியாத பட்சத்தில், மற்றவர்களை உதவிக்கு அழைக்க தயங்காதீர்கள். உங்கள் குடும்பத்தினரிடமோ, அக்கம் பக்கத்தினரிடமோ, அக்கறை செலுத்துபவரிடமோ கூறுவதின் மூலம் ஆறுதலும், தீர்வுகளும் கிடைக்கலாம். எல்லைகள் மீறும்போது ஹெல்ப் லைன் அல்லது காவல் துறையை அழைக்க தயங்க வேண்டாம்.

3. அறிகுறிகளை அறிந்து கொள்ளுங்கள்: குடும்ப வன்முறை என்பது உடல் ரீதியாகத் தாக்கப்படுவது மட்டுமல்ல. மனரீதியாக, வார்த்தைகள் ரீதியாக, பாலியல்ரீதியாக என இது பல கட்டங்களில் செயல்படும். எனவே, முதலில் எது வன்முறை என அடையாளப்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்.

4. உதவுவதற்குத் தயங்காதீர்கள்: நீங்கள் குடும்ப வன்முறையை அனுபவிக்கும் ஒரு குடும்பத்தின் அண்டை வீட்டாராக இருந்தால், வன்முறை சூழ்நிலை நடப்பதைக் கேட்கும்போது தயவுசெய்து அவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள். ஒரு கப் சர்க்கரை அல்லது சிறிது பால் கடன் வாங்கக் கேட்கும் பழைய ‘டெக்னிக்கை’ (சினிமாத்தனமாக இருப்பினும்) நீங்கள் பயன்படுத்தலாம். இது ஆபத்தானது என்று நீங்கள் நினைத்தால், மற்றொரு நபரை உங்களுடன் அழைத்து வாருங்கள். எனவே ஒன்றுக்கு மேற்பட்ட சாட்சிகள் இருப்பார்கள்.

5. உதவுவதற்கு தயார்படுத்திக் கொள்ளுங்கள்: குடும்ப வன்முறை சூழ்நிலைகளில் தலையிடுவது ஆபத்தானது, கூடவே சிக்கலானதும்கூட. சம்பந்தப்பட்டவர் நண்பராக இருப்பினும் தயக்கம் வேண்டாம், பாதிப்படைபவரின் பக்கம் நிற்பதே எப்போதும் அறம். குறிப்பாக துஷ்பிரயோகம் செய்பவருக்கு ஆயுதம் இருந்தால் (கத்தி அல்லது கூர்மையான ஆயுதம்) உடனடியாக காவல் துறையினரின் உதவியைப் பெற முடியாவிட்டால், பாதிக்கப்பட்டவரின் அழைப்புக்கு நீங்கள் நேரில் பதிலளிக்கும்போது மற்றொரு நண்பர் அல்லது குடும்ப உறுப்பினரை உங்களுடன் அழைத்து வருவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

6. பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்குங்கள்: யாருமே இல்லை. நீங்கள் மட்டும் தான் உங்களைப் பாதுகாக்க முடியும் என்றிருக்கும்போது என்ன செய்வீர்கள் என்பதைத் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். வன்முறை நிகழும்போது, அவசர நிலை அல்லது நெருக்கடியைச் சமாளிக்க ஒரு திட்டம் இருப்பது உதவியாக இருக்கும். தனிநபர்கள் தமக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான சூழலை வழங்குவதற்கான வழிகளைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். உங்கள் அறை சாவியை எங்கே வைத்திருக்கிறீர்கள், மொபைல்போன் எங்கே, வாசல் கதவுக்கு உடனடியாக விரைவது எப்படி என எல்லாவற்றையும் அறிந்து கொள்வது வரை இது அடங்கும்.

7. வன்முறை சூழ்நிலையின்போது பாதுகாப்பு: பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் வன்முறையைத் தவிர்க்க முடியாது என்பதே பல வழக்குகளில் கசப்பான உண்மையாக இருக்கிறது. பாதுகாப்பை அதிகரிக்க, வன்முறை சூழ்நிலையில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைத் திட்டமிடுவது முக்கியம். பூட்டப்பட்ட அறைக்குள்ளோ, சமையலறை, படிக்கட்டு என காயங்கள் அதிகம் ஏற்படும் இடங்களிலோ, பாதுகாப்புக்கு யாரையும் அழைக்க முடியாத இடங்களிலோ வாக்குவாதம் முற்றும் பட்சத்தில் அதை தவிர்ப்பதே புத்திசாலித்தனம்.

குடும்ப வன்முறையில் நீங்கள் நேரடியாக பாதிக்கப்பட்டாலோ அல்லது உங்கள் கண்முன் நடந்தாலோ உடனடியாக 1091 அல்லது 181-ஐ அழைக்கவும். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்கு இலவச தொலைபேசி எண் 181-ஐ செயல்பட்டு வருகிறது. 181 இலவச தொலைபேசிக்கு என ஒரு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மையத்தினை நிர்வகிக்க ஐந்து வழக்கறிஞர்கள், ஐந்து மனநல ஆலோசகர்கள், ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பெண்களின் பாதுகாப்பிற்காக 181 இலவச தொலைபேசி எண் மையத்துடன் காவல்துறை, மருத்துவம், சட்ட உதவி, கவுன்சலிங் உள்ளிட்ட சேவைகள் இணைக்கப்பட்டு, பெண்களிடம் இருந்து வரும் அழைப்புகள் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும். பெண்களுக்கான பாதுகாப்புக்கு இலவச உதவி எண் 181 ஆனது 24 மணி நேரமும் சேவையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தையும் (All India Democratic Women’s Association) தொடர்பு கொள்ளலாம்.

**முகேஷ் சுப்ரமணியம்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *