yசேவைக்கு ஈடான ஊதியம் இல்லை: நீதிமன்றம் வேதனை!

public

தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் வழங்கப்படும் ஊதியம் அவர்களின் சேவைக்கு ஈடானதாக இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் என்பவர் இரு வழக்குகள் தொடர்ந்திருந்தார். அதில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சையை வழங்க வேண்டும் என்றும், இந்த வைரஸ் தொற்றை கட்டுபடுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திருந்தார்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும், மருத்துவர்கள் செவிலியர்களுக்கு முழு உடல் கவசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார் .

இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 10) நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், அரசிடம் 37,748 முழு உடல் கவசங்களும், ஒரு லட்சத்து 17 ஆயிரம் என் 95 முகக் கவசங்களும், 7 லட்சத்துக்கும் அதிகமான மூன்று மடிப்பு முகக் கவசங்களும் , 14000 மருத்துவ பரிசோதனை கருவிகளும் இருப்பு உள்ளதாக தெரிவித்தார்.

அரசுத் தரப்பு வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கொரோனாவுக்கு எதிரான போரில் போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

மேலும் மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் இந்த வைரஸ் தொற்றுக்கு எதிராக நாள்முழுதும் போராடும் இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் என்பது இவர்களின் சேவைக்கு ஈடாக இல்லை என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரின் சேவையைப் பாராட்டி மத்திய மாநில அரசுகள் அவர்களுக்கு ஊதிய உயர்வை வழங்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.

**கவிபிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *