அடித்து நொறுக்கப்பட்ட சாராயக் கடை: போலீஸ் அதிரடி!

public

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலைப் பயன்படுத்திக்கொண்டு புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்கள், சாராயம் ஆகியவற்றை தமிழகத்திற்கு கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்கதையாக இருந்துவந்தது. இதுதொடர்பாக புதுச்சேரி டூ தமிழகம்: மது, சாராயக் கடத்தல் அமோகம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

நமது செய்தியின் எதிரொலியாக விழுப்புரம், கடலூர், நாகை,புதுச்சேரியில் மதுக் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி மதுவிலக்கு பிரிவு போலீசார் ஏப்ரல் 2ஆம் தேதி அதிகாலையில் இருந்து மப்டியில் சாலையோரம் நின்று, மதுபாட்டில் மற்றும் சாராயம் கடத்தியவர்களை மடக்கிப் பிடித்து வருகின்றனர். அவர்களை கைது செய்தாலும் கொரோனா காரணமாக காவல் நிலைய ஜாமீனில் விடுவித்துவிடுகின்றனர்.

அதிகமான மதுவை பறிமுதல் செய்தால், அதற்கு கேபிடல்-ஏ செக்‌ஷனின் வழக்குப் பதிவு செய்ய வேண்டும், ரிமாண்ட் செய்ய நீதிபதியிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட பல நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் அதிகமான மதுவை பறிமுதல் செய்ததாக காண்பிக்க முடியவில்லை என்கிறார்கள் காவல் துறையில் உள்ள சிலர்.

தமிழ்நாடு-புதுச்சேரி எல்லையிலுள்ள மடுக்கரை பகுதியில் சாராயக் கடைக்கு ஊரடங்கு உத்தரவால் சீல் வைக்கப்பட்டிருந்தது. ஆனாலும், பின் வழியாக சாராய விற்பனை அமோகமாக நடந்துவந்துள்ளது. இதனைக் கண்டறிந்த உதவி ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான டீம், அதிரடியாக உள்ளே நுழைந்து சாராய பீப்பாய்களை அடித்து நொறுக்கினர். அத்தோடு, 171 லிட்டர் சாராயத்தையும், 1, 41,475 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். சாராயம் விற்பனை செய்த சீனு, முகந்தான், ஜனார்த்தனன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுபோலவே, சாராயம் கடத்துபவர்களை கண்டறிவதற்காக விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவின் பேரில், கடந்த சில நாட்களாக அதிரடி ரெய்டு நடத்தியுள்ளதாகச் சொல்கிறார்கள் விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர். காவல்துறையின் இதுபோன்ற நடவடிக்கைகள் காரணமாக புதுச்சேரியிலிருந்து தமிழகத்திற்கு மது கடத்துவது பெரும்பாலும் குறைந்துள்ளதாக கூறுகிறார்கள் பொதுமக்கள்.

**எம்.பி.காசி**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *