மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

தமிழகம்: கொரோனாவால் 485 பேர் பாதிப்பு- மூவர் பலி!

தமிழகம்: கொரோனாவால்  485 பேர் பாதிப்பு- மூவர் பலி!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் மனைவிக்கும், தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்கனவே, மதுரையில் ஒருவரும், விழுப்புரத்தில் ஒருவரும் உயிரிழந்த நிலையில், தேனியில் மூன்றாவது நபர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத் துறை தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தேனியைச் சேர்ந்த கோவிட்-19 பாசிட்டிவ் நபரின் மனைவி (53), தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று (04.04.2020) மூச்சுத்திணறல் அதிகமாகி பிற்பகல் 2.25 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், “தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 90,451 பேர் வீட்டு கண்காணிப்பில் இருக்கின்றனர். 28 நாள் கண்காணிப்பில் இருந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5,315. இதுவரை 4248 பேருக்குச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இன்று மட்டும் 74 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 73 பேர் டெல்லி சென்று வந்தவர்கள். வெளிநாட்டினருடன் தொடர்புடைய ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டது. மொத்தமாக 485 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

மக்கள் சமூக இடைவெளியைக் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், “சென்னையில் உள்ள தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்திடம் கொரோனா பரவல் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்த அறிவுறுத்தியுள்ளோம். இந்த ஆய்வு இன்று முதல் தொடங்குகிறது” என்று குறிப்பிட்டார்.

தேனியில் கொரோனாவால் ஒருவர் இன்று உயிரிழந்தது குறித்துத் தெரிவித்த பீலா ராஜேஷ், “இன்று உயிரிழந்தவரின் கணவரும், மகனும் டெல்லி சென்று வந்துள்ளனர். இருவரும் கொரோனாவால் பாதித்திருந்த நிலையில், டெல்லி சென்று வந்தவரின் மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் உயிரிழந்தார். மருத்துவ அறிக்கையில், அவருக்கு கோவிட்-19 பாசிட்டிவ் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று கூறினார்.

1200 பேர் டெல்லி சென்று வந்துள்ளனர், அங்கிருந்து வந்தவர்களை சந்தித்தவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்படுகிறது. எனவே அவர்கள் யார்யாரை சந்தித்தார்கள் என்ற விவரங்களையும் ஆராய்ந்து வருகிறோம் என்று குறிப்பிட்டார்.

மகாராஷ்டிராவில் 537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 485 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-கவிபிரியா

சனி, 4 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon