மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

வெளியே நடமாட நேரம் குறைப்பு: முதல்வர் எச்சரிக்கை!

வெளியே நடமாட நேரம் குறைப்பு: முதல்வர் எச்சரிக்கை!

கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில்... நேற்று (ஏப்ரல் 3)தலைமைச் செயலகத்தில் பல்வேறு மதத் தலைவர்களோடு தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

அந்த ஆலோசனைக் கூட்டம் பற்றி முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 4) முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

“கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசின் முயற்சிகளோடு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.

எனவே, பல்வேறு சமயத் தலைவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த இயக்கங்களின் ஒருமித்த ஆதரவினைக் கோர முடிவு செய்யப்பட்டு, எனது உத்தரவின்பேரில் பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில், சமயத் தலைவர்களுடனான கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாநில அளவிலும் அரசு சார்பில் தலைமைச் செயலாளர் தலைமையில் நேற்று (03/04) கிறித்தவ, இஸ்லாமிய, இந்து, ஜெயின் மற்றும் சீக்கிய மதத் தலைவர்களுடன் தனித்தனியே கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் பல்வேறு மதத் தலைவர்களும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பாராட்டி, கொரோனா தொற்றுநோயைத் தடுக்க எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவதாகத் தெரிவித்தார்கள். அவர்கள் எடுத்துரைத்த கருத்துகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட முடிவுகளை அரசு எடுத்துள்ளது.

* நோய்த்தொற்று பொதுமக்களுக்குப் பரவுவதைத் தவிர்க்க, பொதுமக்கள் எதிர்நோக்கும் பண்டிகைகள் காலத்தில், அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, மதம் சார்ந்த கூட்டங்களைத் தவிர்த்து சமூக விலகலைக் கடைப்பிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

* கொரோனா தொற்று நோய் சாதி, மத பேதமின்றி அனைவரையும் தாக்கக் கூடியதென்றும், இதற்கு மதச்சாயம் பூசுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும், நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும் மக்கள் வெறுப்புணர்வுடன் பார்ப்பதைத் தவிர்த்து, இதுபோன்ற தொற்று நோய் அனைவருக்கும் ஏற்படும் என்பதை உணர்ந்து அத்தகையவர்களை அனைவரும் அன்போடும், பரிவோடும் நடத்தவேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

* பல்வேறு மாவட்டங்களில் தனியார் மருத்துவமனைகள் திறக்கப்படுவதில்லை என்று தெரிய வருவதால், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அனைத்து மருத்துவமனைகளையும் அழைத்துப் பேசி, அவை திறப்பதற்கும் செயல்படுவதற்கும் தேவையான பணியாளர்களை அனுமதிக்க, உரிய வாகன வசதிகளை ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

* தனியார் மருத்துவமனைகள், நோய்த் தொற்று உள்ளவர்களை பாரபட்சமின்றி, பரிவோடும் அன்போடும் நடத்த வேண்டும்.

* கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும், சில நோய்த்தொற்று உள்ளவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால், இதற்காக அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் (Notified hospital for COVID-19 treatment) சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகிறது.

* தொற்று நோய் உள்ளதா எனக் கண்டறிந்து, சோதனைக்குப் பின்பு தொற்று நோய் அல்லாதவர்களை உடனுக்குடன் அவர்களது வீட்டுக்கோ அல்லது தனிமைப்படுத்தப்படும் மையங்களுக்கோ அனுப்பவேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

* இத்தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களையும், இத்தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபரோடு தொடர்பிலிருந்த நபர்களையும் தனிமைப்படுத்தும்போது, சமயத் தலைவர்கள் உதவியோடு அவர்களின் வீடுகளிலோ அல்லது இதற்கான தெரிவு செய்யப்பட்ட இடங்களிலோ அரசின் கண்காணிப்பில் தனிமைப்படுத்திக்கொள்ள, உரிய வசதிகளை செய்து கொள்ளலாம்.

* தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு மன அழுத்தத்தினால் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க சமுதாயத் தலைவர்கள் முன்நின்று ஒத்துழைக்கவேண்டுமென்றும், இதற்காக மாவட்டந்தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அமைத்துள்ள மனநல மருத்துவர்கள் அடங்கிய குழுக்கள் மூலம் செயலிகளைப் பயன்படுத்தி தனிமையில் உள்ளவர்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை வழங்க அரசோடு இணைந்து செயல்படலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

* அனைத்து மதத் தலைவர்களும் கோரியபடி, அவர்களின் ஆளுகையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கட்டிடங்களை தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக உரிய வசதிகளை அமைத்துப் பயன்படுத்திக்கொள்ள உதவும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுகுறித்த தகவலை சென்னையில் மாநகராட்சி ஆணையரிடமும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் தெரிவிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

*· பல்வேறு மதத் தலைவர்கள் கேட்டுக்கொண்டபடி, வயதானவர்கள், சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்களின் விவரங்கள் அறிந்து அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை வழங்குவதற்கு அரசுடன் சேர்ந்து தன்னார்வத் தொண்டர்கள் இப்பணியில் ஈடுபட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார் முதல்வர்.

மதத் தலைவர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி இன்று (ஏப்ரல் 4) காலை மின்னம்பலத்தில் வெளியான செய்தியில்,

“நாங்கள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குழு அமைத்து அந்தக் குழுவில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், இயக்கத் தோழர்கள் என இடம்பெறச் செய்கிறோம். எங்களின் இந்தக் குழு தனிமைப்படுத்தப்பட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு மன ரீதியான ஆலோசனைகள், உணவு உள்ளிட்ட பிற உதவிகள் செய்ய அனுமதிக்குமாறு வேண்டுகிறோம்” என்று இஸ்லாமிய தலைவர்கள் கேட்க.... தலைமைச் செயலாளர் சண்முகம் உடனடியாக, ‘ஏற்கனவே மாவட்ட ரீதியாக அமைக்கப்பட்டிருக்கும் குழுக்களுடன் உங்களது குழுவையும் ஒருங்கிணைந்து செயல்பட ஏற்பாடு செய்கிறேன்” என்று பதிலளித்தார் என்பதைப் பதிவு செய்திருந்தோம். இதையே தமிழக முதல்வரும் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

முதல்வர் மேலும், “அனைத்து மதத் தலைவர்களும், சமூகத் தொண்டர்களும், மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களுடனும், சென்னையில் மாநகராட்சி ஆணையருடனும் ஒருங்கிணைந்து செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மக்கள் நடமாட்டத்தை மேலும் கட்டுப்படுத்த, அத்தியாவசியப் பொருட்களை வாங்க காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்த கால அளவை நாளை ஞாயிற்றுக்கிழமை (5.4.2020) முதல் குறைத்து, காலை 6 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மட்டுமே அத்தியாவசியப் பொருட்களை வாங்க அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதை அனைத்து பொதுமக்களும் கடைப்பிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார் முதல்வர்.

-வேந்தன்

சனி, 4 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon