மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

சிறப்புச் செய்தி: கைதட்டினால் தூய்மைத் தொழிலாளர்களின் நிலை மாறுமா?

சிறப்புச் செய்தி: கைதட்டினால் தூய்மைத் தொழிலாளர்களின் நிலை மாறுமா?

ரகுநாத்

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பொது சுகாதார அவசரநிலை தீவிரமடைந்து வரும் நிலையில், மார்ச் 25 தொடங்கி அடுத்த மூன்று வாரங்களுக்கு இந்தியா முழுவதும் லாக்டவுனில் இருந்து வருகிறது. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கும் என்ற நிலையில் இதுவரை கண்டிராத ஒரு சூழலுக்கு நாடே தள்ளப்பட்டுள்ளது. இந்த அத்தியாவசிய சேவைகளில் ஒன்று தூய்மைத் தொழிலாளர்களின் சேவை.

தூய்மைத் தொழிலாளர்களுக்குச் சாப்பாடு வழங்கும் ஏற்பாட்டை அரசு செய்துள்ளதா என்று எங்கள் தெருவில் வீடுவீடாகச் சென்று குப்பை எடுக்க வரும் தூய்மைத் தொழிலாளரிடம் கேட்டபோது அவர் சொன்னது: “அந்த மாதிரி எந்த ஏற்பாடும் இல்ல தம்பி. டீ குடிக்கக் கூட எந்த வழியும் இல்ல. பக்கத்து தெருல ‘நீ வரவே வேணாம், நாங்க எங்கயாவது கொண்டுபோய் குப்பையை போட்டுக்குறோம்’ அப்டின்னு சொல்றாங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு. எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கு? எங்கள பத்தி யாரு கவலைப் படறாங்க?”

புகைப்படம்: ரகுநாத்

தங்கள் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள நினைப்பவர்கள், சுகாதாரமற்ற சுற்றுப்புறத்தைப் பற்றி ஏன் கவலைப்படுவதில்லை?

தூய்மைத் தொழிலாளர்கள் எத்தகைய சூழலில் பணிபுரிகின்றனர் என்பதைப் பற்றிய கட்டுரைகள் மூத்த பத்திரிக்கையாளர் சாய்நாத் நடத்தும் People’s Archive of Rural India வின் இணையப் பக்கத்தில் இடம்பெற்று வருகின்றன. அவற்றைப் படிக்கும்போது மனம் குமுறுகிறது. நாம் சுகாதாரமான சூழலில் வாழ வேண்டும் என்பதற்காக சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைக்கும் தூய்மைத் தொழிலாளர்கள் பெரும்பாலும் எவ்வகைப் பாதுகாப்பும் இல்லாமல்தான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்படுவதில்லை; அப்படியே கொடுக்கப்பட்டாலும் அவை தரமற்றவையாக இருக்கின்றன. விதிவிலக்கின்றி அவர்கள் அனைவரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள். ஊரடங்கு நாட்களில் ஒரேயொரு நாள் வேலைக்கு வரவில்லை என்றாலும் வேலை போய்விடும் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டுள்ளது.

போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாத இந்த ஊரடங்கு காலத்தில் குப்பை வண்டிகளில் பயணம் செய்து அவர்கள் வேலைக்கு வரவேண்டிய அவலநிலை நிலவுகிறது. இல்லையென்றால் வெகுதூரம் நடந்து வேலைக்கு வர வேண்டியிருக்கிறது. குப்பை எடுக்கப்போகும் வீடுகளில் தண்ணீர் கேட்டால்கூட மக்கள் அதைக் கொடுக்கத் தயாராக இல்லை என்று தங்களுடைய கஷ்டங்களை நேர்காணல் செய்பவர்களிடம் அவர்கள் பகிர்ந்துகொள்கின்றனர். பல தலைமுறைகளாகத் தூய்மைத் தொழிலாளர்களாகவே இருந்துவரும் அவர்கள், தங்களை இந்த சமுதாயம் மனிதர்களாக மதிக்க வேண்டும் என்பதற்கு பலகாலமாக போராடி வருகின்றனர்.

‘ஒவ்வொரு நாளும் குப்பையைக் கையாளும் எங்களுக்கு ஏதாவது தொற்று வந்துகொண்டேயிருக்கும். இந்த கொரோனா இன்னொரு தொற்று. அவ்வளவுதான்’ என்ற தொனியில் அவர்கள் பேசுகின்றனர். தூய்மைத் தொழிலாளர்கள் குப்பையை ‘மக்கும் குப்பை’, ‘மக்காத குப்பை’ என பிரித்துப் போடுங்கள் என்றோ, தேநீர் குடிப்பதற்கு பத்து இருபது ரூபாய் காசு கேட்டாலோ முகம் சுழித்துக் கொள்ளும் பலர் நம்மிடையே இருக்கின்றனர். ஆனால், பிரதமர் மோடி இவர்களுக்குக் கைதட்டச் சொன்னால் மட்டும், ஏதோ நன்றியுணர்வை வெளிப்படுத்தும் பாணியில் அதைச் செய்பவர்கள், உண்மையில் என்ன செய்தால் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வில் ஒருசில நேர்மறை மாற்றங்களாவது ஏற்படும் என்று சற்று நேர்மையாக, மனிதநேயத்தோடு சிந்திக்க வேண்டும்.

சகமனிதர்களைச் சமமாகப் பார்க்காத சமுதாயம் எவ்வளவு பிற்போக்கானது என்பதைத் தூய்மைப் பணியாளர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதிலிருந்து நாம் உணரலாம்.

சனி, 4 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon