மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 9 ஆக 2020

கொரோனா: முதல்வர் மாவட்டத்தின் நிலை!

கொரோனா: முதல்வர் மாவட்டத்தின் நிலை!

சேலம் அரசு மருத்துவமனையில் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் தற்போது 32 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் இந்தோனேசியா நாட்டிலிருந்து சேலத்தில் மதப்பிரச்சாரம் செய்ய வந்த 5 மத போதகர்கள் “கொரோனா” தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குச் சுற்றுலா வழிகாட்டியாக வந்த சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கும் “கொரோனா” தொற்று இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. இவர்கள் ஆறு பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், “டெல்லியில் நடந்த மத வழிபாட்டு நிகழ்வுக்கு நாங்களும் சென்றிருந்தோம். எங்களுக்கு “கொரோனோ” தொற்று உள்ளதா..? என்பதைப் பரிசோதிக்க விரும்புகிறோம்” என இருவர் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.

முதற்கட்ட ஆய்வுக்குப் பின்னர் அந்த இருவரும் உயர் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் மாற்றப்பட்டனர். அந்த இருவருக்கும் “கொரோனா” தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

அதேபோல கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த இருவர் டெல்லி சென்று வந்துள்ளனர். அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதனை செய்து பின் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இருவரில் ஒருவருக்கு “கொரோனா” தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இது குறித்து சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனை டீன் பாலாஜி நாதன் செய்தியாளரிடம் பேசும்போது, “சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் இருக்கும் 32, பேரில் ஒருவருக்கு தற்போது கொரோனோ தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. “கொரோனா” சிகிச்சை பெற்று வரும் ஒன்பது பேரில் இந்தோனேசியாவைச் சேர்ந்த மூன்று பேர் தற்போது கொரானா தொற்றிலிருந்து மீண்டு விட்டனர். இருப்பினும், அவர்களுக்கு மேலும் 14 நாட்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். “கொரோனா” தொற்று கண்டறியப்பட்ட ஒன்பது பேர் மட்டுமல்லாமல் டெல்லியிலிருந்து வந்த 31 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் உள்ளனர். இவர்களைத் தொடர் கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-சுப்பிரமணி

சனி, 4 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon