மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

நாளை விளக்கேற்றும்போது சானிட்டைசர் பயன்படுத்த வேண்டாம்: ராணுவம்!

நாளை  விளக்கேற்றும்போது சானிட்டைசர் பயன்படுத்த  வேண்டாம்:  ராணுவம்!

நாளை இரவு விளக்கு ஏற்றும் போது ஆல்கஹால் கலந்த சானிட்டைசர்களை பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனாவால் பெரும் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 2ஆம் தேதி காலை 9 மணிக்கு பொது மக்களிடம், உரையாற்றிய பிரதமர் மோடி, நாளை இரவு 9 மணிக்கு, மக்கள் அனைவரும் வீடுகளில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு, அகல் விளக்கு வைக்க வேண்டும். அல்லது மொபைல் டார்ச், டார்ச் லைட்டை 9 நிமிடங்களுக்கு ஒளிரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

எதற்காகப் பிரதமர் மோடி இவ்வாறு அறிவித்தார் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், ராணுவம் தரப்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில் நாளை மெழுகுவர்த்தி அல்லது அகல் விளக்கு ஏற்றும் போது ஆல்கஹால் கலந்த சானிட்டைசர்களை பயன்படுத்த வேண்டாம். சோப்பு போட்டு கை கழுவினால் மட்டும் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹரியானா மாநிலம் ரேவேரியில் வசிக்கும் 44 வயதான நபர் கைகளில் சானிட்டைசரை பயன்படுத்திவிட்டு பின்னர் கியாஸ் அடுப்பில் சமைத்துள்ளார். இதனால் அவரது கையில் 35 சதவிகித அளவுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.

எனவே ஆல்கஹால் கலந்த சானிட்டைசரை பயன்படுத்திய பிறகு விளக்கு ஏற்றினால் தீக்காயங்கள் ஏற்படலாம் என்பதால் சானிட்டைசரை பயன்படுத்த வேண்டாம் என்று ராணுவம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

-கவிபிரியா

சனி, 4 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon