மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் மெஷினில் மாஸ்க் தயாரிக்கும் தொழிலதிபர்கள்!

சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் மெஷினில் மாஸ்க் தயாரிக்கும் தொழிலதிபர்கள்!

சுகானி மோகன் மற்றும் அவருடைய கூட்டாளி கார்த்திக் இருவரும் ஐஐடியில் படித்தவர்கள். இருவரும் இணைந்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கி சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் இயந்திரங்களை உருவாக்கி வருகின்றனர். 2015ஆம் ஆண்டு அவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கிய தானியங்கி இயந்திரத்தின் மூலம் தினம்தோறும் 50,000 சானிட்டரி நாப்கின்கள் உற்பத்தி செய்ய முடியும்.

தற்போது நாட்டில் கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்பு அதிகரித்து, மருத்துவ உபகரணங்கள் அதாவது மாஸ்க் உள்ளிட்ட பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சுகானியின் சகோதரர் மற்றும் அவரது மனைவி இருவரும் மருத்துவர்கள் என்பதால் இருவரும் தற்போதைய நிலையை நினைத்து கவலை அடைந்துள்ளனர். இரவு முழுவதும் தூங்காமல் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது உதயமானது சுகானிக்கு புது ஐடியா.

தங்களுடைய சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தைக் கொண்டு முக கவசம் எவ்வாறு செய்வது என்று யோசித்து இருக்கிறார்கள். சில தேடல்களுக்குப் பிறகு, இரண்டுக்குமான செய்முறை பல விதங்களில் ஒத்துப்போவதை அறிந்ததும், மாஸ்க் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அந்த முயற்சியில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்று விட்ட நிலையில் ஊரடங்கு உத்தரவால் மாஸ்க் தயாரிப்பதற்குக் கிடைக்க வேண்டிய மூலப்பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

அப்போது இருவரும் தனக்குத் தெரிந்த நபர்களிடம் உதவி கேட்க, இந்த செய்தி நண்பர் ஒருவர் மூலம் மகேந்திரா குரூப்ஸ் சேர்மன் ஆனந்த் மகேந்திரா காதுக்கு வந்துள்ளது. இதுகுறித்து, தகவல் தெரிந்த சில மணிநேரங்களிலேயே ஆனந்த் மகேந்திரா இவர்களுக்குப் பதிலளித்திருக்கிறார். மேலும் அவர்களுக்கு ஊக்கமும் அளித்து அவர்களுக்கு உதவ முன்வந்திருக்கிறார்.

ஆனந்த் மகேந்திராவின் இந்த உதவி குறித்து சுகானி கூறுகையில், ”ஆனந்த் மகேந்திரா மிகவும் மகிழ்ச்சியுடன் எங்களை வரவேற்று அவருடைய இடத்திலேயே எங்களுக்கு உற்பத்திக்கான இடமும் கொடுத்து உதவினார்” என்றார்.

ஆனந்த் மகேந்திரா,இவர்கள் இருவரையும் சானிட்டரி நாப்கின்கள் செய்யும் கதாபாத்திரமான அக்ஷய் குமாரின் பேட்மேன் திரைப்படத்தின் அடுத்த பகுதி எனவும், திறன் மிகுந்த இளம் தொழிலதிபர்கள் என ட்விட்டரில் இவர்கள் இருவரையும் புகழ்ந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை தங்களுடைய முதல் உற்பத்தியைத் துவக்கி இருக்கும் சுகானி, அறுவை சிகிச்சைகள் செய்யும்போது பயன்படுத்தக்கூடிய மாஸ்க்குகளை, ஒரு நாளுக்கு 3 ஆயிரம் என்ற ரீதியில் தயாரித்து வருகிறார். கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மக்களைக் காப்பாற்ற முதல் வரிசையில் போராடும், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்காக மாஸ்க்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

முதல் முயற்சியில் வெற்றி கிடைத்து விட்டதால் அடுத்து இன்னும் பல மெஷின்களை பயன்படுத்த சுகானி திட்டமிட்டிருக்கிறார். இவர்களுடைய சானிட்டரி நாப்கின்கள் உற்பத்தி மெஷின் இந்தியா முழுவதும் 30 இடங்களில் இருப்பதாகவும், இத்தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார். ஒருவரின் திறமை அடக்கப்படக் கூடாது எனவும் நாம் எதற்காகவும் மற்ற நாடுகளை எதிர்பார்த்து நிற்கக் கூடாது எனவும் பேசியுள்ளார் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் இளம் தொழிலதிபர் சுகானி.

தங்களுடைய முதல் இரண்டு வாடிக்கையாளர்களாக தன்னுடைய சகோதரரையும் அவரது மனைவியையும் கூறியுள்ளார் சுகானி. தங்களது வீட்டில் அனைவரும் பாதுகாப்பு உபகரணங்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பவித்ரா குமரேசன்

சனி, 4 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon