மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

ஊரடங்கு செப்டம்பர் வரை: ஆய்வில் அதிர்ச்சி!

ஊரடங்கு செப்டம்பர் வரை: ஆய்வில் அதிர்ச்சி!

இந்தியாவில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் செப்டம்பர் வரை நீடிக்கப்படலாம் என்று அமெரிக்க ஆலோசனை நிறுவனமான பாஸ்டன் கன்சல்டிங் குழுவின் ஆய்வு கூறுகிறது.

கொரோனா வைரசால் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 2,902 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 14ஆம் தேதியோடு ஊரடங்கு தளர்த்தப்படுமா? அல்லது நீட்டிக்கப்படுமா? என்பது தான் அனைவரது கேள்வியாக இருக்கிறது. இந்நிலையில் நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று பாஸ்டன் கன்சல்டிங் குழுவின் ஆய்வு கூறுகிறது.

“இந்தியாவில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் மாத இறுதி மற்றும் செப்டம்பர் மாத இரண்டாவது வாரத்துக்கு இடைப்பட்ட காலத்தில் நீக்கப்படலாம். சுகாதாரத் துறை மற்றும் அரசின் திட்டங்களின் செயல்பாட்டால் ஏற்படும் முன்னேற்றங்களைப் பொறுத்தே ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதற்கான வாய்ப்பு உருவாகும்” என்று பாஸ்டன் கன்சல்டிங் குழு தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டில், ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என்ற அதிர்ச்சித் தகவலையும் தெரிவித்துள்ளது.

-கவிபிரியா

சனி, 4 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon