மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 11 ஆக 2020

கொரோனா நிதி: அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம்!

கொரோனா நிதி: அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம்!

கொரோனா நிவாரண நிதியாக அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தை விருப்பம் உள்ளவர்கள் முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கலாம் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காகத் தமிழக அரசு நிதியுதவி பெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்களின் ஊதியத்தில் எவ்வளவு பணம் பிடித்தம் செய்யலாம் என்று கடந்த 5 நாட்களாக முதல்வருக்கு நெருக்கமான அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகச் செய்திகள் வெளியானது. இதுகுறித்து மின்னம்பலத்தில் ஏப்ரல் 2ஆம் தேதி, கொரோனா நிவாரண நிதி: அரசு ஊழியர்கள் ஊதியத்தில் ரூ 1500 கோடி பிடித்தமா? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் (ஏப்ரல் 2) அவரவர் வங்கிக் கணக்கில் மார்ச் மாதத்துக்கான ஊதியம் போடப்பட்டது. எனவே, ஐபிஎஸ் அசோசியேஷன் சார்பில் ஒரு நாள் சம்பளம் கொரோனா நிவாரண நிதிக்கு சேகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.10 லட்சம் சேகரிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அதேபோல் ஐ.ஏ.எஸ் அசோசியேஷனும் ஒரு நாள் ஊதியத்திலிருந்து நிதி வசூலித்து வருவதாகச் சொல்கிறார்கள்.இந்நிலையில் நேற்று தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “கொரோனா வைரஸ் தாக்கத்தால் நிதி நெருக்கடி உருவாகியுள்ளது. மருத்துவ உபகரணங்கள் வாங்கவேண்டும் என்பதால் அரசு ஊழியர்கள் விருப்பம் உள்ளவர்கள் ஒரு நாள் ஊதியத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கலாம்” என குறிப்பிட்டிருந்தது.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து இன்று, ஒவ்வொரு துறைவாரியாக அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதம் ஊதியத்தை வங்கிக் கணக்கில் போட்டு வருவதாகவும், மின்னம்பலம்.காம் செய்தியின் எதிரொலியாக ஒரு நாள் சம்பளம் மட்டுமே பிடித்தம் செய்யப்படுவதாகவும் ஜாக்டோ ஜியோ வட்டாரங்கள் கூறுகின்றன.

-வணங்காமுடி

சனி, 4 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon