மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

சிறப்புச் செய்தி: ஊரகப் பொருளாதார நெருக்கடியைத் தீவிரப்படுத்தும் கொரோனா!

சிறப்புச் செய்தி: ஊரகப் பொருளாதார நெருக்கடியைத் தீவிரப்படுத்தும் கொரோனா!

ரகுநாத்

ஜூலை 2017 - ஜூன் 2018 காலத்தில் நுகர்வோர் செலவீட்டு ஆய்வை தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) நடத்தியது. இந்தியாவில் ஒரு தனிநபர், நுகர்வுக்காக ஒரு மாதத்தில் செய்யும் செலவு (monthly per capita expenditure) 2011-12 - 2017-18 காலத்தில் 3.7 விழுக்காடு சரிந்துள்ளது; நகர்ப்புறங்களில் வெறும் 2 விழுக்காடு மட்டுமே வளர்ந்த இந்த நுகர்வுச் செலவு, ஊரகப் பகுதிகளில் 8.8 விழுக்காடு சரிந்துள்ளது என்பது தெரியவந்தது. கடந்த நாற்பதாண்டுகளில் நுகர்வுக்கான தனிநபர் செலவு இதுபோல் சரிந்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரகக் கூலி பற்றி ஒன்றிய அரசின் தொழிலாளர் பணியகம் (Labour Bureau) வழங்கும் தரவுகள் ஊரக இந்தியாவில் நுகர்வுச் சரிவு எனும் போக்கோடு ஒத்துப்போகிறது. 2004-05 – 2011-12 காலத்தில் வேகமாக வளர்ந்த ஊரக நிஜக்கூலியின் மட்டம், 2011-12 க்கு பிறகு சில ஆண்டுகள் தேக்கத்தையும், சில ஆண்டுகள் சரிவையும் சந்தித்தது. அரசின் புள்ளிவிவரங்களின்படி, 2017 ஜூலை மாதம் தொடங்கி, விவசாயக் கூலித்தொழில் செய்பவர்கள் பெறும் நிஜக்கூலி, ஆண்டுக்கு 0.5 விழுக்காடு குறைந்துள்ளது; விவசாயமற்ற மற்ற கிராமப்புற கூலித்தொழிலாளர்கள் பெறும் நிஜக்கூலி தேக்கம் கண்டுள்ளது.

மேலும், வேளாண் அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களை எடுத்துப்பார்த்தால், விவசாயமும் விவசாயமற்ற துறைகளும் தங்கள் பொருட்களை எந்த விகிதத்தில் வாங்கி விற்கின்றன என்பதைக் குறிக்கும் “பொருள் மாற்று விகிதம்” (Terms of Trade), கடந்த பத்தாண்டுகளில் தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி கடந்த ஆறு காலாண்டுகளாக இறங்குமுகத்தில் இருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளதன் விளைவாகவே இந்தத் தொய்வு ஏற்பட்டுள்ளது என்று பொருளியல் அறிஞர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வாங்கும் சக்தியானது கடந்த சில வருடங்களுக்கு முன்பிருந்தே சரியத் தொடங்கியது என்பதையே இந்த 2017-18 நுகர்வோர் செலவீட்டு ஆய்வின் முடிவுகள் நமக்குத் தெரிவிக்கின்றன. குறிப்பாக, ஊரக இந்தியாவில் வாழும் மக்கள் பெரும் நெருக்கடியில் இருக்கின்றனர் என்பதே இந்த ஆய்வு மட்டுமின்றி, அனைத்து பொருளாதாரக் குறியீடுகளும், கள ஆய்வுகளும் நமக்கு சொல்லும் சேதி.

அரசின் புள்ளிவிவரங்கள், தனியார் துறையின் மதிப்பீடுகள் மற்றும் கள ஆய்வுகள் என அனைத்தும் ஊரகப் பகுதிகளில் உள்ள கிராக்கிப் பிரச்சனையைத் தெள்ளத்தெளிவாக படம்பிடித்துக் காட்டின. இதைத் தொடர்ந்து, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக பட்ஜெட் 2020-21 இல் முக்கியமான அறிவிப்புகள் இடம்பெறும் என்று பரவாலக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படியொரு பிரச்சனை இருப்பதையே அங்கீகரிக்க மறுத்துவிட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கப் போடப்பட்டுள்ள ஊரடங்கு, விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித்தொழிலாளர்களின் நெருக்கடியை தீவிரப்படுத்தும் என்றே தெரிகிறது. உணவுப்பொருட்கள் அத்தியாவசியம் என்பதால் அவற்றைக் கொள்முதல் செய்வதற்கும், நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதற்கும் எந்தத் தடையும் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது.

ஆனால் கள நிதர்சனம் என்ன? விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ‘மண்டி’களுக்கு எடுத்துச்செல்ல முடியாத நிலையே நிலவுகிறது. மண்டிகளில் வேலைசெய்யும் கூலித்தொழிலாளர்கள், உணவுப்பொருட்களை லாரிகளில் எடுத்துச்செல்லும் லாரி ஓட்டுபவர்களில் புலம்பெயர்ந்து பணிபுரியும் மக்களின் பங்கு கணிசமாக இருக்கிறது. ஊரடங்கு நடவடிக்கையை அடுத்து அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதாலும், மண்டிகளில் மக்கள் கூட்டம் சேர்ந்தால் தொற்று பரவிவிடுமோ என்ற அச்சத்தாலும் உணவுப் பொருட்களுக்கான அளிப்பு சங்கிலித்தொடர் முடக்கப்பட்டுள்ளது.

அடுத்து, சம்பா பயிர்களின் அறுவடை காலம் நெருங்கிவரும் இந்நேரத்தில் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதால் விவசாயிகள் அறுவடை செய்த விளைபொருட்களை எங்கு தேக்கி வைப்பது என்று தெரியாமல் தவிக்கின்றனர் என்ற செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அறுவடையைத் தள்ளிப்போட முடியுமா, குறைந்தபட்ச ஆதரவு விலையைக் கொடுத்து விவசாயிகளிடமிருந்து அரசு விளைபொருட்களைக் கொள்முதல் செய்யுமா, அறுவடை பாதிக்கப்பட்டால் விவசாயக் கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்ற கேள்விகளோடு, ஊரடங்கு முடிந்த அடுத்த சில வாரங்களில் உணவுப்பொருட்களுக்கான கிராக்கி அதிகரித்தால் அதை எப்படி சமாளிபப்து என்ற பெருங்கவலையும் எழுந்துள்ளது. இந்த நிச்சயமற்ற நிலையை நாம் எப்படிக் கையாளப் போகிறோம் என்பதில் இதுவரை எந்தத் தெளிவும் இல்லை.

சனி, 4 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon