மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 11 ஆக 2020

மருத்துவர்களுக்காகத் திறக்கப்பட்ட தாஜ் ஹோட்டல்கள்!

மருத்துவர்களுக்காகத் திறக்கப்பட்ட தாஜ் ஹோட்டல்கள்!

உலகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோர் தினசரி போராடி வருகின்றனர். அவ்வாறு தன்னலம் கருதாமல் இரவு பகலாக வேலை செய்யும் மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் ஒரு சில வீட்டு உரிமையாளர்கள் தங்க இடம் கொடுப்பதில்லை என்று அண்மைக் காலமாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் நாட்டின் ஆடம்பர ஹோட்டலான தாஜ் ஹோட்டல், மருத்துவர்கள் தங்குவதற்காகத் திறக்கப்பட்டுள்ளது. ரத்தன் டாடா குழுமத்துக்கு சொந்தமான ஹோட்டல்கள் தற்போது, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இருக்கும் புகழ்பெற்ற நட்சத்திர ஹோட்டல்களான தாஜ் குழுமத்தின், கொலபாவில் உள்ள தாஜ் பேலஸ் , பாந்த்ராவில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்ட், தாஜ் சாண்டாக்ரூஸ் உள்ளிட்ட 7 ஹோட்டல்கள் பிரிஹன் மும்பை மாநகராட்சி மருத்துவர்களுக்காக இலவசமாக திறக்கப்படுவதாக இந்தியன் ஓட்டல் குழுமம்(ஐ.எச்.சி.எல்) தெரிவித்துள்ளது. இங்கு மருத்துவர்களுக்குத் தங்கும் வசதி உட்பட அனைத்து சேவைகளும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் கடினமான பணிகளுக்கு எங்களது சிறிய சேவை என்று தாஜ் ஹோட்டல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரசை எதிர்த்துப் போராட ஏற்கனவே ரூ.1500 கோடி நிதியளித்த டாடா குழுமம் தற்போது தங்களுக்குச் சொந்தமான ஹோட்டல்களை மருத்துவர்களுக்கு இலவசமாக வழங்கியதற்கு வரவேற்பும், பாராட்டும் குவிந்து வருகின்றன.

-கவிபிரியா

சனி, 4 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon