மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

சிறப்புக் கட்டுரை: கேரள முதல்வர் எழுப்பிய பாலின சமத்துவம்!  

சிறப்புக் கட்டுரை: கேரள முதல்வர் எழுப்பிய பாலின சமத்துவம்!  

டி.எஸ்.எஸ்.மணி

 

கேரள முதல்வர் பினராயி விஜயன், “ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் மட்டுமே வேலை செய்கிறார்கள். ஆண்கள் வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில், அவர்களும் பெண்களுடைய வேலைகளில் பங்கு கொள்ள வேண்டும்” என அறிவித்திருப்பது, இந்தக் காலகட்டத்துக்கான சரியான பாலின சமத்துவத்துக்கான ஆலோசனை. ஏனென்றால், ஆண்டாண்டுக் காலமாக, குடும்பங்களில் உலகமெங்கும் பெண்கள் மட்டுமே வீட்டு வேலைகளைச் செய்கிறார்கள். 24 மணி நேரமும் என்று கூறும் அளவுக்கு, ‘முந்தி எழுவாள் பெண். பிறர் உண்டபின் மீதமிருப்பதை உண்பாள் பெண். கடைசியில் உறங்குவாள் பெண்’ என்பதாக அனைத்து வீட்டு வேலைகளையும் செய்துவிட்டு தனது வயிற்றுக்கு, மீதமிருப்பதை உண்ணும் நிலையில்தான், உலகமெங்கும் அடிமைப்படுத்தப்படும் பெண் குலம் இருக்கிறது.

இந்தியாவில், பண்ணையாதிக்கப் பண்பாட்டின் (Feudal cultural background) கீழே, அடிமைகளாக வாழ்ந்து வருகிறார்கள் பெண்கள். அதாவது உழைப்புக்கேற்ற ஊதியமில்லாத அமைப்பு சாரா தொழிலாளியாகத்தான் ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் பவனி வருகிறார்கள். வீட்டுக்குள் பெண்கள் ஒவ்வொரு வேலைக்கும் நடந்து, நடந்து பல கிலோமீட்டர் தூரம் தினசரி வீட்டுக்குள்ளேயே, நெடுந்தூர நடைப்பயிற்சியும் எடுக்கிறார்கள் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. ஆனால் குடும்பப் பெண்களோ, ‘நான் வேலைக்குப் போகவில்லை. சும்மாத்தான் இருக்கிறேன்’ என்று அறியாமையில் கூறி வருகிறார்கள் 25 ஆண்டுகளுக்கு முன்னால், உலகப் பெண்கள் மாநாடு சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்தபோது, ‘வெளியே சென்று வேலை செய்து வரும் ஆண்கள் பெறுகின்ற ஊதியம், வீட்டிலுள்ள பெண்களுக்கான ஊதியத்தையும் சேர்த்தே தான் கொடுக்கப்படுகிறது. வீட்டில் அந்த ஆண் தொழிலாளர்களைப் பராமரிப்பதற்காக தங்களது உழைப்புச் சக்தியைச் செலவழிக்கும் பெண்கள், அதற்கேற்ப அந்த ஆண் தொழிலாளர்கள் பெற்று வரும் சம்பளத்தில் தங்களுக்குள்ள பங்கைப் பெற வேண்டும்’ என்று அந்த மாநாடு கூறியது.

அதற்குப் பொருள் என்னவென்றால், ஒரு தொழிலாளி ஒரு பொருளை உருவாக்க, தனது உழைப்புச் சக்தியை விற்கும்போது அவர் இழந்த சக்தியை, மீண்டும் பெறுவதற்கான மதிப்புதான் அந்தப் பொருளின் மதிப்பு. அதுவே கூலியாகக் கொடுக்கப்பட வேண்டும் (The Value of a Product is to get back the Energy wasted to produce that Product. Wage should be measured in that way) என்று காரல் மார்க்ஸ் எழுதுகிறார்.

ஒரு தொழிலாளி, தான் விற்ற உழைப்புச் சக்தியைத் திரும்பப் பெறுவதற்குத் தேவையான சத்தான உணவும் ஓய்வும் பொழுதுபோக்கும் அவசியம். அத்தகைய விஷயங்களை அந்தத் தொழிலாளிக்குக் கொடுக்கும் இடம்தான் அவர் குடும்பம். அத்தகைய குடும்பத்தில் அவற்றை தனது உழைப்புச் சக்தியை, செலவழித்து அவனுக்கு அளிப்பவர்தான் குடும்பத்தில் இருக்கும் பெண். அப்படியானால், அந்தப் பெண் ஒரு தொழிலாளியாக, தான் கொடுத்த உழைப்புச் சக்தியை, மீண்டும் பெற, வாங்க வேண்டிய கூலி... வெளியே சென்று வேலை செய்து கூலி பெற்று வரும் ஆண் தொழிலாளியின் சம்பளத்தில் சேர்ந்து வருகிறது.

மேற்காணும் லட்சியக் கோரிக்கையைப் புரிந்துகொண்டதால்தான் கேரள முதல்வர் பினராயி விஜயன், வீட்டிலேயே இருக்க வேண்டிய கொரானா கிருமிக்கான மக்கள் சுய ஊரடங்கு தருணத்திலாவது, ஆண்கள், குடும்பப் பணிகளில் பெண்களின் பளுவைக் குறைக்க, பெண்களுடன் சேர்ந்து வேலை செய்ய வேண்டுமெனக் கூறுகிறார்.

அதன்மூலம், வீட்டு வேலைகளைச் செய்யும்போது உணவு தயாரித்தல், குழந்தைகளைப் பராமரித்தல், துணி துவைத்தல், பாத்திரங்களைக் கழுவுதல், வீட்டைச் சுத்தம் செய்தல், ஒவ்வொருவரது ருசிக்கேற்ப சமைத்தல், மளிகைக் கடை, பால் கடை, பேப்பர் கடை, கணக்குகளை வைத்திருத்தல், வேலைக்குச் சென்று திரும்பும் ஆண்களின் உடல் வலு குறையாமலிருக்க அவர்களின் ஓய்வுக்கு வழி செய்தல், குழந்தைகளின் கல்விக்கு ஒத்தாசை செய்தல், குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்தல், பாலூட்டல் மற்றும் இத்யாதி, இத்யாதி வேலைகளையும் வீட்டிலிருக்கும் பெண்களே பொறுப்பேற்றுச் செய்கின்றனர்.

அதைப்புரிந்து கொண்டுள்ள தோழர் விஜயன், சரியான சந்தர்ப்பமாகப் பார்த்து, வீட்டில் ஆண்கள் முடங்கியிருக்கும் இந்த 'மக்கள் சுய ஊரடங்கு' காலத்தில், இத்தகைய கோரிக்கையைக் கூறினால்தான், 'பாலினச் சமத்துவம்' பற்றி, அக்கறை கொள்ளாமல் இருக்கும் ஆண்களுக்கும், இந்த நேரத்தில், அதைப் புரிய வைக்க முடியும் என்று எண்ணியுள்ளாரா?

கேரள அரசாங்கத்தை, நிர்வாகம் செய்து வரும் முதலமைச்சர், அதற்காக உழைத்து வரும் ஆண்கள், இதுவரை அலுவலகங்களிலும், ஆலைகளிலும், வயல்களிலும், காடுகளிலும், தெருக்களிலும், வேலை செய்து வந்தார்களே! அப்போதெல்லாம், அரசு நிர்வாகத்தில், இருந்து கொண்டு தோழர் விஜயன் இந்த லட்சியக் கோரிக்கையைச் சொல்ல வில்லையே என யாராவது கேட்கலாம். ஆனால், ’அப்படி செய்துவந்த, ஆண்களது நிர்வாகம் இப்போது, இந்த நெருக்கடிக் காலத்தில் வீடுகளுக்குள், குடும்பங்களுக்குள் முடங்கி விட்டதே... ஆகவே, அத்தகைய சூழலில், கேரள ஆண்களுக்கு, என்ன வேலை கொடுப்பது, என்ற சிந்தனையில், தனது, நிர்வாகப் பார்வையை ( Style of Governance ) குடும்பங்களுக்குள் செலுத்தியுள்ளார்’ என்று கேலி செய்வார்களோ என எனக்குத் தெரியாது.

ஆனால், சீரிய சிந்தனையுடன்தான் இத்தகைய ஆலோசனையைக் கூறியுள்ளார் என எண்ணுகிறேன். குறிப்பாக, கேரளத்து ஆண்கள், சிறிது, அதிகமாகவே, ஆண் மேலாதிக்க சுகத்தை விரும்பும் சுபாவம் உள்ளவர்கள் என்று புரிந்தேதான்... தோழர், முதல்வர் விஜயன் இதை எழுப்பியுள்ளார் என்று தெரிகிறது. வாழ்க, பாலினச் சமத்துவம்.

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon