மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 25 அக் 2020

100 நாள் ஊதிய உயர்வு: நிதியமைச்சரின் அறிவிப்பு பலனளிக்காது - ஏன்?

100 நாள் ஊதிய உயர்வு: நிதியமைச்சரின் அறிவிப்பு பலனளிக்காது - ஏன்?

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் (100 நாள் வேலைத் திட்டம்) கீழ் வேலை செய்யும் பணியாளர்களுக்கு வருடத்துக்கு ரூ.2,000 வரை கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி பார்த்தால், 100 நாள் வேலை அட்டை வைத்திருக்கும் 13.62 கோடி கிராமப்புற குடும்பத்தினருக்கு 2020-21ஆம் நிதியாண்டில் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் வரை மத்திய அரசு ஊதியத்துக்கே செலவிட வேண்டும்.

இந்தத் தொகை 2020-21ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.61,500 கோடியை விட ஐந்து மடங்கு அதிகம் ஆகும். மேலும், விவசாயம் மற்றும் அது தொடர்புடைய பணிகள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்காக எதிர்பார்க்கப்பட்ட மொத்த செலவுத் தொகைக்கு சமமாக உள்ளது.

உத்தரப்பிரதேசம், பிகார் ஆகிய இரு மாநிலங்களிலும் 1.65 கோடி குடும்பங்கள் 100 நாள் வேலை அட்டை வைத்திருக்கின்றன. இவர்கள் அனைவருக்கும் அனைத்து நாட்களும் வேலை வழங்கப்பட்டால், அவர்களுக்கான ஊதியமே 65,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். இது அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தொகையைவிட அதிகமாக உள்ளது.

2020-21ஆம் நிதியாண்டில் பிகாரில் ஒரு தனிநபரின் தினசரி ஊதியம் 194 ரூபாயாகவும், உத்தரப்பிரதேசத்தில் 201 ரூபாயாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 2014 மே மாதம் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு முதன்முறையாக இவ்வளவு அதிகமான ஊதிய உயர்வை அளித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் வழங்கப்படும் ஊதியம் 25,000 கோடி ரூபாயாக இருக்கலாம். மகாராஷ்டிரம், ஆந்திரம், தமிழகம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டால் 20,000-23,000 கோடி ரூபாய் வரை ஊதியத்துக்காகச் செலவிட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட மாநிலங்களிலும் அட்டை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 8.14 கோடி ஆகும். அதாவது இந்தியா முழுவதும் உள்ள மொத்த அட்டைதாரர்களில் 70 சதவிகிதம். 100 நாள் வேலை திட்ட அட்டை வைத்திருக்கும் அனைத்து வீடுகளுக்கும் 100 நாட்கள் முழுமையாக வேலை வழங்கப்பட்டால், பட்ஜெட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 59 சதவிகிதத்தை ஊதியமாக வழங்க வேண்டி வரும்.

அனைவரும் வேலை செய்வார்களா?

100 நாள் வேலை அட்டை வைத்திருக்கும் அனைவரும் வேலை கேட்கும் நிலைமை ஏற்படாது. விவசாயத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தில், ஊரக வேலை திட்டத்தின் ஊதியம் பாதியளவே என்பது அதற்கு ஒரு காரணம். கிராமப்புறங்களில் வங்கி மற்றும் அரசாங்கத்தால் வழங்கப்படும் சில சேவைகள் மற்றும் சலுகைகளுக்கு இது ஓர் அடையாள அட்டையாக இருப்பதால் பல குடும்பங்கள் 100 நாள் வேலை அட்டைக்குப் பதிவு செய்கின்றன.

உதாரணமாக 2019-20ஆம் நிதியாண்டில் வேலை அட்டை வைத்திருப்பவர்களில் சுமார் 45 சதவிகிதம் பேர் மட்டுமே வேலை கேட்டனர். கிட்டத்தட்ட அனைவருக்கும் சில வேலைகள் வழங்கப்பட்டன. ஒரு சில பகுதியினர் வேலை கொடுத்தாலும் வருவதில்லை.

.முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்னவென்றால், 100 நாள் வேலைத் திட்டத்தில் போதுமான வேலைவாய்ப்புகளை வழங்குவது மாநில அரசுகளின் கைகளில் இருக்கிறது. வேலை கேட்பவர்கள் தங்களுக்கு 100 நாட்களும் வேலை வேண்டும் என்கிறார்கள். 2015-16 முதல் ஒவ்வொரு வருடமும் வழங்கப்பட்ட வேலை நாட்களின் எண்ணிக்கை 2018-19ஆம் ஆண்டில் மட்டும்தான் ஒரு குடும்பத்துக்குச் சராசரியாக 50 நாட்களைத் தாண்டியுள்ளது. இது நாட்டின் பெரும்பாலான பகுதிகள் வறட்சியை அனுபவித்த ஆண்டு.

வேலை கேட்கும் குடும்பங்களின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் வேலை மற்றும் வேலை நாட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 100 நாள் வேலைத் திட்டத்தின் ஊதியம் பயனாளர்களுக்குச் சென்றடைகிறது.

எனினும், 100 நாட்களும் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இதனால் 100 நாள் வேலை திட்டத்துக்கான ஊதியம் 3 லட்சம் கோடி ரூபாயாக உயராது அல்லது 13.62 கோடி குடும்பங்களுக்கு 2,000 ரூபாய் ஊதிய உயர்வால் பயன் கிடைக்காது என்று மதிப்பிட்டு நிதியமைச்சர் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் அறிவித்துள்ளார்.

ஆனால், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். இது 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். பிரதான் மந்திரி அவாஸ் யோஜ்னா - கிராமின் போன்ற கிராமப்புறங்களுக்கான பிற திட்டங்களுடன் 100 நாள் வேலைத் திட்டத்தை இணைப்பது, வேலைக்கான தேவையை உருவாக்குகிறது. ஆகவே ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை மக்களிடையே எழுந்துள்ளது.

த.எழிலரசன்

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon