மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

ஏப்ரல் 15 விமானச் சேவை தொடங்குமா?: அமைச்சர் பதில்!

ஏப்ரல் 15 விமானச் சேவை தொடங்குமா?: அமைச்சர் பதில்!

கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்தவொரு சரியான தகவலையும் அரசு வெளியிடவில்லை.

இந்நிலையில் சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “21 நாள் ஊரடங்கு முடிந்ததும் விமானப் போக்குவரத்தைத் தொடங்கலாமா என்பது குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை” என்று நேற்று (ஏப்ரல் 2) தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் விமானங்கள் இயங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் ஹர்தீப் சிங் புரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

“மீண்டும் விமானங்கள் இயக்குவது குறித்து முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை எனவும் தேவைப்பட்டால் அப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்படும். விமான டிக்கெட் முன்பதிவை அவரவர் விருப்பத்தின் பேரில் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் அரசு தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை” என ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தாங்கள் தற்போது வழக்கமாகச் செய்யவேண்டிய எதிர்காலத்துக்கான நடைமுறைகளைத் தொடங்கி இருப்பதாகவும் மற்றபடி அனைத்தும் அரசின் கைகளில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள அவர் ஏப்ரல் 15 முதல் விமான போக்குவரத்து சேவை மீண்டும் துவங்கும் என நம்பிக்கை இருப்பதாகவும், முழுவதுமாக அனைத்து சேவைகளும் ஒரே நாளில் தொடங்கப்பட்டாலும் குறைந்த அளவிலான சேவைகளையாவது துவங்கப்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

சிவில் விமான போக்குவரத்து செயலாளர் பிரதீப் கரோலா இதுகுறித்து கூறும்போது, “விமானத்தை இயக்க தொடங்குவதற்கு முன்பாக ஆராய வேண்டிய விஷயங்கள் இன்னும் இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் இரண்டும் வைரஸ் பாதிப்படைந்த மற்ற நாடுகளில் தற்போது நிலைமை கட்டுக்குள் அடங்கி விட்டதா என்பதை ஆராய்ந்த பிறகே வெளிநாட்டு விமானச் சேவையைத் தொடங்க முடிவெடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

-பவித்ரா குமரேசன்

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon