மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

ஊரடங்கை மீறி வெள்ளிக் கிழமை தொழுகை: போலீஸ் தடியடி!

ஊரடங்கை மீறி வெள்ளிக் கிழமை தொழுகை: போலீஸ் தடியடி!

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களைக் காப்பதற்காக இந்தியா முழுதும் ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமலில் இருக்கிறது.

இன்றியமையாத அடிப்படைத் தேவைகளுக்கான  அலுவல்கள் தவிர மற்ற அனைத்து அலுவலகங்களும், அனைத்து தரப்பு சமுதாய  வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருக்கின்றன.அனைத்து மத தலைமைகளும்  வழிபாட்டுத் தலங்களை மூடுமாறு உத்தரவிட்டிருக்கின்றன. தமிழ்நாடு  ஜமாத் உலமா அமைப்பு, ‘வெள்ளிக் கிழமை தொழுகை உட்பட எவ்விதத் தொழுகைக்காகவும் வழிபாட்டுத் தலங்களில் ஒன்று கூட வேண்டாம். அவரவர் வீட்டில் இருந்தபடியே இறைவனைத் தொழலாம்’ என்று உத்தரவிட்டிருக்கிறது. 

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 3) தென்காசி மாவட்டம் தென்காசியில் நடுப்பேட்டை தெருவில் இருக்கும்  ஜும்மா பள்ளிவாசலில்  மதியம் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுள்ளது. மசூதியைப் பூட்டிக் கொண்டு உள்ளே சுமார் 200க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்தியதாக தகவல்கள்  காவல்துறையினருக்குத் தெரியவர, அவர்கள் மசூதிக்கு விரைந்தனர்.

 “ஒன்று கூடல்களால் வைரஸ் பரவலாம் என்பதால்தானே அரசு  எல்லாவிதமான ஒன்று கூடல்களுக்கும் தடை விதித்திருக்கிறது?  அரசு தடை விதித்தும் , மதத் தலைமை  அறிவுறுத்தியும் ஏன் இப்படி கூட்டமாய் கூடுகிறீர்கள்,  உடனே கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் கூற அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்...போலீசார் தடியடி நடத்தினார்கள். இதில் தொழுகை நடத்தியவர்கள் மசூதியில்  இருந்து அவசரமாக தப்பித்து ஓடினார்கள்.  போலீசாரின் தடியடியில் சிலருக்கு  மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. இந்தக் காட்சி சமூகதளங்களில் வெளியாகியிருக்கிறது. 

-வேந்தன்

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon