மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

கொரோனாவால் 411 பேர் பாதிப்பு: அதிர்ச்சியில் தமிழகம்!

கொரோனாவால் 411 பேர் பாதிப்பு: அதிர்ச்சியில் தமிழகம்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411ஆக அதிகரித்துள்ளதாகச் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலில் 50 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்த பிறகு, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்று வரையில், 309ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 411ஆக அதிகரித்திருக்கிறது. “இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள 102 பேரில், 100 பேர் டெல்லி சென்று வந்தவர்கள். ஆனால் இன்னும் தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை” என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், ”வீடு, வீடாகச் சென்று கள ஆய்வாளர்கள் முழு வீச்சில் ஆய்வு நடத்தி வருகின்றனர். தமிழக மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். இதுவரை தமிழகத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்றவர்களின் நிலை சீராக இருக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார் பீலா ராஜேஷ்.

இந்தியாவில் தற்போது வரை மகாராஷ்டிராவில் 423 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு 21 பேர் உயிரிழந்துள்ளனர், 42 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு தற்போது பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 360ஆக இருக்கிறது. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை 6 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர், ஒருவர் உயிரிழந்துள்ளார். அதன்படி கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 404ஆக இருக்கிறது. இந்தவகையில் பார்த்தால் இந்தியாவில் கொரோனாவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்துக்கு நகர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-கவிபிரியா

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon