மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு தேடி வரும் ரூ.1,000

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு தேடி வரும் ரூ.1,000

வரும் 7ஆம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் பணத்தை வீட்டிலேயே சென்று வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அன்றாடப் பணியாளர்கள் உட்பட பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.1,000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அத்துடன் இலவச அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் பொருட்கள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் 1,000 மற்றும் இலவச பொருட்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றது. சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள் என்பதால், கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டது. இதனால் வீடு தேடிச் சென்று பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு அனுப்பிய சுற்றறிக்கையில், வரும் 7ஆம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் பணத்தை பயனாளிகளின் வீட்டுக்கே கொண்டுபோய் சேர்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. பணத்துடன் இலவச பொருட்களைப் பெறுவதற்கான டோக்கனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

7ஆம் தேதி முதல் எக்காரணத்தைக் கொண்டும் ரேஷன் கடையில் பணம் விநியோகிக்கக் கூடாது என்றும், இலவச பொருட்களை மட்டுமே ரேஷன் கடையில் விநியோகிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு நாளை ரேஷன் கடையிலேயே பணம் மற்றும் பொருட்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எழில்

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon