மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

கொரோனா: குறிப்பிட்ட மருந்தை வழங்க உத்தரவிடமுடியாது - நீதிமன்றம்!

கொரோனா: குறிப்பிட்ட மருந்தை வழங்க உத்தரவிடமுடியாது - நீதிமன்றம்!

கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்ள அனைவருக்கும் கபசுர கசாயத்தை வழங்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதிவேகமாகப் பரவி வரும் வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், கொரோனாவால் அச்சமடைந்துள்ள பொதுமக்கள், நிலவேம்பு கசாயத்தையும், கபசுர கசாயத்தையும் குடித்து வருகின்றனர்.

கபசுரம் என்பது ஆடாதொடை, அக்ரஹாரம், கர்ப்பூரவள்ளி, திப்பிலி உள்ளிட்ட 15 மூலிகைகளால் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் சளி, இருமல் குணமடையும் என்பதால் இதனை வாங்க பொதுமக்களின் கூட்டம் நாட்டு மருந்து கடைகளில் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் அனைவருக்கும் அரசுத் தரப்பில் கபசுர கசாயம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜோசப் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது கொரோனா நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்க 'கபசுர நீரை' குடிக்க வேண்டும் என சித்த மருத்துவர்கள் கருத்து தெரிவித்து வருவதாகவும் இந்நோய்க்குச் சிகிச்சை பெற்று வருபவர்கள் மட்டுமல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாகப் பொதுமக்கள் அனைவருக்கும் கபசுர நீர் கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், கொரோனாவுக்கான மருந்தை ஆய்வு செய்ய சித்த மருத்துவர்கள் கொண்ட குழுவைத் தமிழக அரசு அமைத்துள்ளதால் குறிப்பிட்ட மருந்தை வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்து, மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக அரசே முடிவெடுக்க வேண்டும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.

-கவிபிரியா

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon