மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

கொரோனா: ரூ.7600 கோடி இந்தியாவுக்கு ஒதுக்கிய உலக வங்கி!

கொரோனா: ரூ.7600  கோடி இந்தியாவுக்கு ஒதுக்கிய உலக வங்கி!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரவலைக் கண்டறிந்து தடுக்கவும், சுகாதாரத்தை மேம்படுத்தவும் உலக வங்கி இந்தியாவுக்கு ஒரு பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 7600 கோடி ரூபாய் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. சுகாதாரத் துறைக்குப் பன்முக கடன் வழங்கும் நிறுவனத்திலிருந்து இந்தியாவுக்கு இதுவரை கிடைத்த மிகப்பெரிய நிதி ஆதரவு இதுவாகும்.

இந்த நிதி சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சுகாதார மிஷன் (என்.எச்.எம்), தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (என்.சி.டி.சி) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் (ஐ.சி.எம்.ஆர்) நிர்வகிக்கப்படவுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்கள், ஆபத்தில் உள்ள மக்கள், மருத்துவ , அவசரகால பணியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள், மருத்துவ மற்றும் சோதனை வசதிகள் ஆகிய தேவைகளை இந்தநிதி நிவர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா சோதனை கருவிகளை கொள்முதல் செய்வதற்கும், புதிய தனிமை வார்டுகளை அமைப்பதற்கும் , மருத்துவமனை படுக்கைகளைத் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளாக மாற்றுவது உட்பட - தொற்று நோய் தடுப்பு , கட்டுப்பாடு மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், வென்டிலேட்டர்கள், மருந்துகளை வாங்குதல், குறிப்பாக மாவட்ட மருத்துவமனைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவும், சமூக பரவலைக் குறைக்கவும் இந்த திட்டம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை எதிர்த்து போராடும் இந்திய அரசுக்கு மிகவும் நெருக்கமான ஆதரவை உலக வங்கி கொடுக்கும் என்று உலக வங்கியின் இந்தியாவுக்கான இயக்குநர் ஜுனைத் அகமது தெரிவித்துள்ளார்.

கொரோனா தாக்கத்தின் தீவிரத்தைக் குறைக்க அடுத்த 15 மாதங்களில், அனைத்து நாடுகளுக்கும் 160 பில்லியன் டாலர்கள் உதவித்தொகையை உலக வங்கி அறிவிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-கவிபிரியா

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon