மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

அதிமுகவின் பொருளாளர்: அமைச்சர் வேலுமணியின் அதிரடி வியூகம்!

அதிமுகவின் பொருளாளர்: அமைச்சர் வேலுமணியின் அதிரடி வியூகம்!

கொரோனா வைரஸ் தொற்று தமிழகம் முழுதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அரசியல்வாதி என்பதைத் தாண்டி ஒவ்வோர் அமைச்சரும் தன்னால் முடிந்த அளவு மக்கள் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்கள்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர்தான் இப்போது சென்னையில் இருக்கிறார்கள். மற்ற அமைச்சர்கள் எல்லாம் தத்தமது மாவட்டங்களுக்குச் சென்று அங்கே கொரோனா பணிகளை முடுக்கிவிடுவதில் தீவிரமாக இருக்கிறார்கள்.

இந்த வகையில்தான் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழகம் முழுக்க இருக்கும் மாநகராட்சி, நகராட்சி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளை கொரோனா தடுப்புப் பணிகளில் தீவிரம் காட்டுவதைக் கண்காணித்துக்கொண்டே மாவட்ட அமைச்சர் என்ற முறையில் கோவை மாவட்டத்தையும் சிறப்பு கவனமெடுத்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறார். ஆய்வுக் கூட்டங்கள், அதிகாரிகளுடனான உரையாடல்கள் என்று மட்டுமில்லாமல்... மாவட்டத்தின் பல பகுதிகளில் என்ன நிலைமை என்று நேரடியாகச் சென்று கண்காணித்து, அதுவும் கேரளாவுடன் ஒட்டிய மாவட்டம் என்பதால் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் வேலுமணி.

இத்தகைய தீவிரமான பணிகளுக்கு இடையேயும் அரசியல் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் அமைச்சர்களுக்கு நேரம் இருக்கிறது. இதுகுறித்து அதிமுகவின் சீனியர் கொங்கு நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

“கொரோனா நேரத்தில் அரசியல் பற்றி பெரிதாகச் சிந்திக்காமல் அமைச்சர்கள் பலரும் மக்கள் பணியாற்றியபடிதான் இருந்தார்கள். ஆனால் விஜயபாஸ்கருக்கும் முதல்வருக்குமான மோதல்தான் பல அமைச்சர்களையும் அதிமுகவின் அடுத்த கட்ட அரசியல் பற்றி விவாதிக்க வைத்திருக்கிறது. இப்போது தமிழக அமைச்சரவையில் விஜயபாஸ்கர், எடப்பாடி இடையிலான மோதல் பற்றி அமைச்சர்கள் தங்களது நெருக்கமான வட்டாரத்துக்குள் தீவிரமாக விவாதித்து வருகிறார்கள். இதில் சில அமைச்சர்கள் விஜயபாஸ்கருக்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இருப்பதாக வாட்ஸ்அப் கால் செய்து சொல்லியிருக்கிறார்கள். மற்ற அமைச்சர்கள் எடப்பாடி ஆதரவு நிலையில்தான் இருக்கிறார்கள். ஏனென்றால் எடப்பாடி முதல்வராக இருப்பதால் அவரது ஆதரவு நிலையில் இருக்கிறார்கள். வேறு ஒன்றும் காரணமில்லை.

இந்த பின்னணியில்தான் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான வட்டாரங்களில் அவரது அடுத்தகட்ட செயல் திட்டங்கள் பற்றிய ஆலோசனைகள் இப்போது முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. ஏற்கனவே சில மாதங்களாகவே இந்த ஆலோசனைகள் நடந்து வந்தாலும் இப்போது விஜயபாஸ்கர் - எடப்பாடி மோதலுக்குப் பிறகு மீண்டும் பல அமைச்சர்கள் தங்களது நிலைப்பாடு பற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

வேலுமணியைப் பொறுத்தவரை அவர் இப்போது கிட்டத்தட்ட நிழல் முதல்வராக இருக்கிறார். எடப்பாடிக்காக அனைத்து அதிமுக எம்.எல்.ஏ.க்களிடமும் ரெகுலராக டச்சில் இருப்பது வேலுமணிதான். இனிமையாகப் பழகுவார், இவரிடம் சொன்னால் முதல்வரிடம் சொன்ன மாதிரி என்று பல அதிமுக எம்.எல்.ஏ.க்களே பேசும் அளவுக்கு ரோஜா இல்லத்தில்தான் கூட்டமாக இருக்கும். இந்தப் பின்னணியில் வரவிருக்கும் அதிமுகவின் கட்சித் தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடலாமா என்று வேலுமணியின் தனிப்பட்ட வட்டாரத்தில் விவாதம் நடந்திருக்கிறது. வேலுமணியின் இலக்கு அதிமுகவின் பொருளாளர் பதவிதான். எனவே பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவதற்காக முயற்சிகள் மேற்கொண்டால்தான்... பொதுச் செயலாளர் பதவியை இலக்கு வைக்கும் எடப்பாடியின் மூலமாகவே வேலுமணிக்கு பொருளாளர் பதவிக்கான வாசல் திறக்கப்படும் என்பதுதான் இப்போது வேலுமணி வட்டாரத்தில் நிலைபெற்றிருக்கும் வியூகம்.

இன்னும் சில மாதங்களில் அதிமுக என்ற கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் பதவிப் போட்டிகள் வெளிப்படையாக நடக்கும். பார்க்கத்தானே போகிறீர்கள்?” என்று பொடி வைத்துப் பேசுகிறார்கள் அந்த சீனியர் கொங்கு நிர்வாகிகள்.

-வேந்தன்

 

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon