{இந்தியா உறைந்திருக்கிறது… உறைத்திருக்கிறதா?

public

நரேஷ்

“கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறியதாக இருந்தாலும், இது இந்தியா மூன்றாம் கட்டத்தில் இருக்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும்” என்றார் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தின் முன்னாள் தலைவர் டி.சுந்தரராமன்.

இது எச்சரிக்கை அல்ல; யதார்த்தம். இந்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது தாமதமான நடவடிக்கை என்பதுதான் உரக்கச் சொல்லவேண்டிய சேதி. இந்தியாவில் முதன்முறையாக ஜனவரி மாதம் கேரளாவில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்போதே சிறிதளவிலாவது எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கியிருக்க வேண்டும். இரண்டு மாதங்கள் எந்தவித சலனமுமின்றி கழிந்தது. மார்ச் 13ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் கொரோனா தொற்றால் முதல் மரணம் நிகழ்ந்தது. அதன் பிறகாவது ஏதேனும் சீறிய நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். முதல் மரணம் ஏற்பட்டு 10 நாட்கள் கழிந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு என்னும் செயல் வடிவம் முன்னோட்டம் பெறுகிறது. இதை ஜனவரியில் அல்லவா செய்திருக்க வேண்டும். இப்போது என்ன நேர்ந்திருக்கிறது? போதுமான சுகாதார வசதி இல்லாமல், அடிப்படைத் தேவைகளை வழங்க முடியாமல், இந்தியா அரசு இப்போது கொரோனா வைரஸின் பிடியிலும், இந்திய கடைநிலை தொழிலாளர்கள் பட்டினியின் பிடியிலும் சிக்கிக்கொண்டனர். இங்கே இரட்டை பேரழிவு நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இந்தியாவின் மாபெரும் தொழில்நகரங்களில் உள்ள கடைநிலைத் தொழிலாளர்களுக்கு, கொரோனாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது அன்றாட வாழ்க்கை. டெல்லியின் நிலையை நாம் கண்டு கதறினோம். இங்கே இன்னொரு மிக முக்கியமான கடைநிலை தொழிலாளர்களின் தொழில்நகரத்தை உதாரணமாக்குகிறேன். அது, உலகின் இரண்டாவது அதிக நெரிசலான நகரம். அங்கே சோஷியல் டிஸ்டன்சிங் எனும் தத்துவம் யதார்த்தமற்றது. ஏனென்றால் அந்நகரமே தனிமைப்படுத்தலுக்கு எதிர்நிலையில் நின்று கட்டப்பட்டது. மும்பை எனும் அம்மாநகரம், உழைப்பு மற்றும் மூலதனம் ஆகிய இரண்டையும் முதன்மையாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டது. ஆதலாலே ஆங்கிலேயர்களின் நுழைவுவாயிலாகவும் திகழ்ந்தது. அந்த நுழைவுவாயில் எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி அடைக்கப்பட்டது. கழிவறையுடன் கூடிய வீடுகளில் இருக்கும் மக்கள் மட்டுமே தனிமைப்படுத்தலுக்குத் தகுதியானவர்களாக இருக்கிறார்கள். இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்கு முன்பே, மும்பை அதிகாரிகள் பணிநிறுத்தங்களைத் தொடங்கினர்.

பணிநிறுத்த நடவடிக்கை சரி, அன்றாட வாழ்வுக்கான பாதுகாப்பு? கொரோனா வைரஸானது செல்வந்த சர்வதேச பயணிகளிடையே கண்டறியப்பட்டதுவரை எந்த பதற்றமும் இல்லை. ஆனால், கடந்த வாரங்களில் மும்பையின் தொழிலாளர் குடியிருப்புகளில் முதன்முதலாகக் கண்டறியப்பட்டபோது, தவிர்க்கமுடியாத பேரழிவின் தொடக்கம் ஆரம்பித்துவிட்டது. இதன்பிறகு, அங்கிருக்கும் 13 லட்சம் மக்களைத் தனிமைப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவ்வளவு விவேகமான நடவடிக்கையாகத் தெரியவில்லை.

ஏனென்றால், கொரோனாவைவிட கொலைபசியைப் பார்த்து அனுபவித்தவர்கள் இத்தொழிலாளர்கள். கண்ணுக்குத் தெரியாது, இதற்குமுன் அனுபவித்திராத கொடுமையைவிட கண்முன் நிகழப்போகும் பசி கொடுமை அவர்களைப் பதற்றமடையச் செய்தது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரிய நகரங்களை விட்டு வெளியேறி, நீண்ட நடைப்பயணத்தைத் தொடங்கினர். தலைச்சுமடுகளுடன், பிள்ளைக் குட்டிகளுடன் வெறும் வயிற்றில் தகிக்கும் வெப்பத்தில், கிராமப்புற இந்தியாவில் இருக்கும் தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். தொழில்துறை மற்றும் கட்டுமானம் வேலைகள் நிறுத்தப்பட்ட நிலையில், தினசரி கூலிகள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். உடனடியான உணவுத் தேவைக்கே வழியில்லாத நிலையில், 21 நாட்களுக்குத் தொழில்நகரங்களில் தாக்குப்பிடிக்க முற்படுவது முட்டாள்தனம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். பொது போக்குவரத்து இல்லாமல், மும்பையிலிருந்து மேல் வடகிழக்குக்கும், டெல்லியிலிருந்து அண்டை மாநிலங்களான உத்தரப்பிரதேசத்துக்கும் கால்நடையாகத் திரும்பிச் சென்ற காட்சிகளைக் காணொலிகளாகப் பார்த்திருப்போம். இதே போன்ற காட்சிகள் இதற்கு முன்னரும் வரலாறு பார்த்திருக்கிறது. அப்போது நாம் சுதந்திர அடைந்திருக்கவில்லை. பஞ்ச காலம் பரந்துபட்டு பாதித்திருந்ததால், இதேபோன்ற இடப்பெயர்வு நிகழ்வொன்று பதிவானது. இன்றும் அதே பஞ்சத்துக்கு பயந்துதான் அவர்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

“டெல்லியில் கோவிட் -19 வேகமாகப் பரவவில்லை என்றாலும், இந்நோயின் சமூகப் பரவலைத் தொடர்ந்து மூன்றாம் நிலை நோய் பரவலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பரிந்துரைத்து டாக்டர் சாரீன் தலைமையிலான மருத்துவர்கள் குழுவிலிருந்து அறிக்கை எனக்கு வந்துள்ளது” என்று டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சொன்ன பிறகு நடந்த சோகம் இது. இந்த பசிப் பெயர்தலைவிட கொடுமையான விஷயம், வடமாநிலங்கள் இத்தொழிலாளர்களை அணுகும்முறை. உத்தரப்பிரதேசத்தில் நடைப்பயணமாக வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை எல்லையிலேயே நிறுத்தி, முறையான முதலுதவிகள் கூட செய்யாமல், மாடுகளின் மீது நீர் பீய்ச்சுவதைப்போன்று கிருமி நாசினிகளைத் தெளித்தனர்.

இந்தச் செயலை மனிதத்தால் ஏற்றுக்கொள்ளவே முடியாதுதான். அதையும் மீறி இச்செயலுக்கான காரணங்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால், வெளிநாடுகளிலிருந்து நோய் அறிகுறியுடன் ஓடிவந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் இதே போல் நிற்கவைத்து கிருமி நாசினி தெளித்திருக்க வேண்டுமல்லவா? அப்படிச் செய்திருந்தால் இவ்வளவு பெரிய பாதிப்பே வந்திருக்காதே. அந்த புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வேலைப் பார்த்து வந்த தொழிலாளர்களின் வாயிலாகத்தானே கொரோனா இந்திய வாயிலில் நுழைந்தது… அங்கே அவர்களை அவ்வளவு மரியாதையுடன் நடத்திவிட்டு, இங்கே இப்படியோர் ஈனச்செயலைச் செய்ததை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? யோகி ஆதித்யநாத் எனும் அருகதையில்லாத அரசியல்வாதி முதல்வராக இருக்கும் மாநிலத்தில் இதைத்தவிர வேறெதை எதிர்பார்க்க முடியும்?

இங்கே ’அருகதையில்லாத’ என்பது மரியாதைக்குறைவாகவோ, ஆதாரம் இல்லாத ஆத்திரத்திலோ வெளிப்பட்ட வார்த்தை அல்ல. உலகே தனிமைப்படுத்தலின் தேவையைத் தீவிரமாக உணர்த்திவரும் நிலையில், உயிரைப் பணயம் வைத்து சேவை செய்துகொண்டிருக்கும் மருத்துவர்கள் கையெடுத்துக் கும்பிட்டுத் தனிமைப்படுங்கள் என்று கெஞ்சிய நிலையில், ஒரு மாநில முதல்வர் என்ற பொறுப்பைக்கூட மறந்து, கூட்டத்தைக் கூட்டி கொரோனாவுக்கு எதிராக ஒரு யாகத்தை நடத்திய பகுத்தறிவை வேறு எந்த வார்த்தைகளில் வர்ணிக்க முடியும்? அரசியல் அமைப்புக்கு எதிரான மதக்கோட்பாட்டுகளின் அடிப்படையில் அரசு நடத்துவது சட்டத்துக்கே புறம்பான செயல் அல்லவா?

அந்த சட்டவிரோதச் செயலை செய்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களையும், அவரின் மாண்புமிகு கூட்டாளிகளையும் இதேபோல அமரவைத்து கிருமி நாசினி தெளித்திருக்க வேண்டுமல்லவா?

இந்த வேறுபாட்டைத்தான் இந்திய மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இங்கே நடப்பது கண்ணுக்குத் தெரியாத கிருமியினால் ஏற்படும் பேரழிவல்ல. கண்ணுக்குத் தெரிந்த பகுத்தறிவற்ற அரசியல்வாதிகளாலும் பணக்காரர்களாலும் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு. இதற்கு கனிகாகபூரில் ஆரம்பித்து யோகி ஆதித்யநாத் அவர்களின் வழியாக ஈரோட்டில் தனிமைப்படுத்தலின் விதிகளை மீறிய அரசியல்வாதியின் மகன் வரை எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்.

“படிப்பறிவில்லாதவர்கள் இந்தியாவின் பிரச்சினை அல்லர். படித்த முட்டாள்கள்தான் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினை” என்ற அமித் தாந்தனின் வார்த்தைகளில்தான் எவ்வளவு உண்மை உறைந்திருக்கிறது.

இந்தியாவும் உறைந்திருக்கிறது. ஆனால், உறைத்திருக்கிறதா என்பதுதான் தெரியவில்லை!

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *