மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

சிறப்புச் செய்தி: ஊரடங்கால் ஏற்படும் பொருளாதார சுமையைச் சுமப்பது யார்?

சிறப்புச் செய்தி: ஊரடங்கால் ஏற்படும் பொருளாதார சுமையைச் சுமப்பது யார்?

ந.ரகுநாத்

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தின்மீது பெரிய எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அந்த சுமையைச் சுமக்கப்போகும் மக்கள் யார் என்ற கேள்வியை நாம் கேட்டால், எவ்வகைப் பணிப்பாதுகாப்பும் (Job Security), சமூகப் பாதுகாப்பும் (Social Security) இன்றி பணிபுரியும் முறைசாராத் தொழிலாளர்கள் (Informal Workers) என்பதே அதற்கான பதில். இந்தியாவின் உழைப்புப் படையில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு மக்கள் முறைசாராத் தொழிலாளர்களே.

‘இது அனைவரும் அறிந்த சேதிதானே, எதற்கு மீண்டும் மீண்டும் இதைக் குறிப்பிட வேண்டும்?’ என்ற கேள்வி எழலாம். ஆனால், இத்தனை காலமாக இந்த நிலை மாறாமல் இருப்பதால்தான் நாட்டின் உழைப்பாளி மக்களில் பெரும்பகுதியினர் பொருளாதார நெருக்கடி ஏற்படும் நேரங்களில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கின்றனர்.

பொருளாதார வளர்ச்சி 3 விழுக்காடாக இருந்தாலும் சரி, 8 விழுக்காடாக இருந்தாலும் சரி, ஏழைகளுக்கான பொருளாதார வாய்ப்புகள் குறிப்பிடும்படியாகப் பெருகவில்லை. இதில் ஒரே ஆறுதல் என்னவென்றால், புதிய பொருளாதார வாய்ப்புகளைத் தேடி மக்கள் கிராமங்களை விட்டு நகரங்களுக்கும், ஒரு மாநிலத்தைவிட்டு இன்னொரு மாநிலத்துக்கும் புலம்பெயர்வதற்கு எவ்வகைத் தடைகளையும் அரசு விதித்ததில்லை என்பதுதான். கடந்த அரை நூற்றாண்டில், கிழக்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பல நாடுகள் நாட்டுக்குள் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் கொள்கை முடிவுகளை அமல்படுத்தியுள்ளன. இந்த விஷயத்தில் இந்தியா ஒரு விதிவிலக்கு என்றே தெரிகிறது.

ஒருவேளை கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டால், அதன் பலன்கள் பரவலாகப் பகிரப்படும்; தொற்றைக் கட்டுப்படுத்தப் போடப்பட்ட ஊரடங்கு பொருளாதாரத்துக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் சமூக - பொருளாதாரப் படிநிலையில் அடிமட்டத்தில் இருப்பவர்களால் சுமக்கப்படும். கடந்த ஒரு வாரமாகவே விளிம்புநிலையில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களின் பணிப்பாதுகாப்பும், உணவுப் பாதுகாப்பும் நூலிழையில் தொங்கும் நிதர்சனத்தை ஊடகங்களில் பார்த்தும் படித்தும் வருகிறோம். நிர்கதியாய் நிற்கும் மக்களை மனிதநேயத்தோடு நடத்த வேண்டும் என்பதைக்கூட அரசு இயந்திரத்துக்கு நினைவூட்டும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

தொற்று பரவாமல் இருக்க மக்கள் சமூக விலகலைக் (Social Distancing) கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதார, மருத்துவ நிபுணர்களும் அரசும் சொல்லிவந்தபோது, ‘சமூகப் பாதுகாப்பு என்பது இல்லாமல், சமூக விலகல் என்பது சாத்தியமற்றது’ என்று அருணா ராய் மற்றும் நிக்கில் டே ‘தி இந்து’வில் சென்ற வாரம் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார்கள். வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலை செய்வது என்பது வெகு சிலரால் மட்டுமே முடியும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தக் கட்டுரை அமைந்தது.

இதுபோன்ற நெருக்கடியின்போதுதான் சமுதாயத்தில் புரையோடிப்போயுள்ள ஏற்றத்தாழ்வுகள் நம்மில் பலருடைய கண்ணுக்குப் புலப்படுகின்றன. பெரும்பான்மை மக்களின் நலன் மீது அக்கறை கொள்ளாத ஒரு சமுதாயமாகவே நாம் இருந்துவிடுவோமோ என்ற கேள்விதான் எழுகிறது.

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon