சிறப்புக் கட்டுரை: கிருமிக்கு முன் அனைவரும் சமம்!

public

முத்துராசா குமார்

கொரோனா நோய்க்கிருமி தொற்றால் நாடெங்கும் ஊரடங்கு அமலில் உள்ளது. பெரும் நிறுவனத் தொழில்கள் முதல் சிறு குறு தொழில்கள்வரை அனைத்தும் முடங்கியுள்ளன. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வீடுகளிலும் தனிமைகளிலும் மக்கள் ஒளிந்துள்ளனர். இந்திய தமிழக அரசியல் சூழல்களில் முறையற்ற, அறமற்ற அரசியல் செயல்பாடுகளால் வாழ்வாதாரங்களும் அடிப்படை உரிமைகளும் சிதைந்து மக்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் மக்களின் உயிரைக் கூடுதலாகக் குடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஊரடங்கால் கடைத்தட்டு மக்கள் வறுமை, பசி, பொருளாதார பஞ்சங்களால் நோய்த்தொற்று இல்லாமலே இறந்து வருகின்றனர்.

வீடு, வாகனங்கள், தொழில், விவசாயம், நகை என்று தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிக் கடன்களின் மாதத் தவணைகள், மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் மற்றும் தவணைகளை வசூலிக்க அரசு மூன்று மாத கால அவகாசம் அளித்துள்ளது. மேலும் குடிநீர், வீட்டு வரிக் கட்டணம், வீட்டு வாடகையை வசூலிக்க கால நிர்ணயம் கொடுத்துள்ளது. இவற்றை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. நோய்மை கால பேரிடரில் இம்மாதிரியான அறிவிப்பு நடவடிக்கைகள் EMI சமூகத்தை ஓரளவு சமநிலையில் வைத்திருக்கும். இல்லையென்றால் பெரும் கலவரங்கள் நடந்துகொண்டிருக்கும்.

மேற்கண்ட நிறுவனக் கட்டமைப்புகளில் தங்களது அடையாளங்களையும், ஆவணங்களையும் சமர்ப்பித்து கடன்கள் வாங்கியவர்களுக்கு இது தற்காலிக ஆசுவாசத்தை அளிக்கும். இது எதுவுமே இல்லாமல் தனிநபர்களிடம் வார வட்டிக்கும், மாத வட்டிக்கும் வாங்கியவர்களின் நிலை இந்த கொரோனா காலத்தில் கடுந்துயரமாக இருக்கிறது. குறிப்பாக, விமர்சனங்களற்று அதீதப் புனிதங்கள் ஏற்றப்படும் கிராம வாழ்வியலில்.

கட்டட வேலைகள், குழி தோண்டுதல், வெள்ளையடித்தல், சுமைத் தூக்குவோர், சந்தைகளில் கடைகளில்லாமல் சில்லறை வியாபாரம் செய்பவர்கள் (பிய்ந்த குடைகளை சரிசெய்தல், பூட்டு சாவி வியாபாரம், கூறுகட்டி காய்கறி பழ வியாபாரம்…), பேருந்துகள், ரயில்களில், டோல் கேட்டுகளில் பேனா, புத்தகம், தின்பண்டங்கள் விற்பவர்கள், பதநீர், இளநீர் விற்பவர்கள், உடம்புகளிலும், தள்ளுவண்டிகளிலும் அலங்காரப் பொருட்களை வைத்து விற்றுவருபவர்கள் என்று தினக்கூலி வேலைகள் எல்லாமே கடந்த சில நாட்களில் முற்றிலும் முடங்கிவிட்டன. அவற்றைச் சார்ந்திருக்கும் குடும்பங்களின் மிக அடிப்படையான அன்றாடங்கள் சீரழிந்துள்ளன.

இவர்கள் குடும்பத் தேவைகளின் அவசரகதிக்கு வார வட்டிக்கும், மாத வட்டிக்கும் வாங்கிய கடன்களை தினப்படியாக சேகரித்துத்தான் அடைக்க முடியும். நான் நேரடியாகப் பார்த்த வரையிலும், நண்பர்களிடம் பேசிய வரையிலும் வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் தங்களது கணக்கு நோட்டுகளில் இந்த ஊரடங்கு காலத்தில் கிடப்பில் விழுந்த வட்டித் தொகையினையும், கடனையும் பன்மடங்குப் பெருக்கி குறித்து வைக்கத் தொடங்கியுள்ளனர். சிலர் விதிவிலக்காக இருக்கலாம்.

கொரோனா கிருமி, பயங்கள், மருத்துவம், உயிர் பலிகள், முகம் தெரியாத மனிதர்களின் உதவிகள், கண்ணீர்கள், அனுதாபங்கள், பதைபதைப்புகள், நெகிழ்ச்சிகள், களத்தில் மக்களுக்காக பணிபுரிபவர்கள் என்று 2020இல் கொரோனா இந்த உலகை என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதெல்லாம் கந்துவட்டிக்குக் கொடுத்தவர்களுக்குத் தெரியாது. தெரிந்துகொள்ளவும் அவர்களுக்கு விருப்பமில்லை. எதற்கும் நிலையற்ற இந்த நேரத்தில் அதிக வட்டிகள் வேண்டாமென்று சொல்லும் அருஞ்செயலையெல்லாம் அவர்கள் செய்ய வேண்டாம். வசூலுக்கு வரும் நேரங்களையும், கொடுஞ்சொற்களையும் நுண்ணியளவிலாவது குறைக்கலாம்.

இயல்புநிலை எப்போது வருமென்று தெரியவில்லை. இயல்பானாலும் சமூகத் தளங்கள் எதை எதைச் செய்து தன்னிலைக்கு வர முயலப்போகிறது என்பதும் தெரியவில்லை. கண்களுக்குத் தெரியாத ஒன்றால் நொடிதோறும் மனித உயிர்கள் மரிக்கும் இந்த நூற்றாண்டுப் பொழுதிலும், மறுப்பேதும் சொல்லாமல் ‘எப்படியாவது வட்டிப் பணத்தைத் தந்துவிடுகிறோம்’ என கடன்பட்டவர்கள் நிர்கதி நிலையில் உதிர்க்கும் சொற்கள் இப்பிரபஞ்சத்தை என்னவெல்லாம் செய்யப் போகிறதோ? சமூகத்தில் இயல்பைவிட ஒவ்வொரு பேரிடர்களிலும்தான் மனித அகத்தின் அசல்முகங்கள் தோலுரிந்தபடியே இருக்கின்றன.

‘பணபலம், படைபலம், பதவிபலம், அதிகாரபலம் இது எதுவும் கொரோனா கிருமிக்குத் தெரியாது. கிருமிக்கு முன் அனைவரும் சமம்தான்’ என்று தூரத்தில் விழிப்புணர்வு குரலொன்று,

கைவண்டி ஒலிபெருக்கியில் அழுத்திச் சொல்லியபடியே கடந்து செல்கிறது. அந்த வாசகத்தை எழுதியவரின் கைகளையும், சொல்லும் குரலையும் வைத்து இத்தனிமையில் அவர்களது உருவத்தைக் கற்பனையிலெழுப்பி கட்டிக்கொள்ளத் தோன்றுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *