tதமிழகம்: ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதி!

public

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மட்டும் 110 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று (ஏப்ரல் 1), செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “சுகாதாரத் துறையின் வேண்டுகோளை ஏற்று டெல்லி சென்றவர்கள் தாங்களாகவே முன்வந்து சிகிச்சைக்கு ஒத்துழைத்துள்ளனர்.  தமிழகத்தில் மொத்தம் 77,330 பேர்  வீட்டு கண்காணிப்பில்  இருக்கின்றனர்.  14 அரசு சோதனை மையங்கள் உட்படத் தமிழகத்தில் 17 கொரோனா சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்  6 மையங்கள் அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை, 2726 பேருக்குச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 234 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  குறிப்பாக இன்று மட்டும் 110 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். அதன்படி, இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களில் 190 பேருக்கு இதுவரை கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி சென்று வந்த 1000க்கும் மேற்பட்டோர், சோதனைக்காகத் தாமாக முன்வந்துள்ளனர். இதில் 658 பேருக்கு  டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்குத் தொடர்ந்து டெஸ்ட் எடுக்கப்பட்டு வருகிறது.  டெல்லி சென்று வந்தவர்களின் பயண விவரங்களையும், அவர்கள் யார் யாரைச் சந்தித்துள்ளார்கள் என்ற விவரங்களையும் ஆராய்ந்து வருகிறோம்” என்றார்.

மேலும் இன்று புதிதாக  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தெந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற  பட்டியலையும் வெளியிட்டார் பீலா ராஜேஷ். அதன்படி, திருநெல்வேலியில், 6 பேர், கோவையில் 28 பேர், ஈரோட்டில் 2 பேர், தேனியில் 20 பேர், திண்டுக்கல்லில் 17 பேர், மதுரையில் 9 பேர், திருப்பத்தூரில் 7 பேர், செங்கல்பட்டில் 7 பேர், சிவகங்கையில் 5 பேர், தூத்துக்குடியில் 2 பேர், திருவாரூரில் 2 பேர், கரூரில் ஒருவர், காஞ்சிபுரத்தில் 2 பேர், சென்னையில் ஒருவர், திருவண்ணாமலையில் ஒருவர் என 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில்  கொரோனாவால் மார்ச் 7ஆம் தேதி நிலவரப்படி ஒருவரே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234ஆக அதிகரித்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் பின் தங்கியிருந்த தமிழகம் தற்போது மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளது.  மகாராஷ்டிராவும், கேரளாவும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

**-கவிபிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *