H1949 காலரா…. கதறும் நினைவுகள்!

public

-பாட்டி பாப்புக்கனியம்மாள் பேட்டி

கொரோனா என்ற ஒற்றை சொல் இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கும் சொல்லாக மாறிப்போயுள்ளது. இந்த கொரோனா வைரசின் தாக்கம் என்பது கொரோனாவிற்கு முன்பு, கொரோனாவிற்கு பின்பு என்ற நிலையை மருத்துவ உலகில் ஏற்படுத்திவிட்டுச் செல்லும் என்று உலக மருத்துவத்துறை எச்சரிக்கின்றது.

சரியாக 1949 வாக்கில், இந்தியா சுதந்திரம் அடைந்த சமயம், காலரா என்னும் கொடிய தொற்று நோய் இன்றைய கொரோனாவைப் போலவே அன்று மக்களைத் தாக்கியது. குறிப்பாகத் தமிழகத்தின் பல பகுதிகளைத் தாக்கியது.

காலரா தாக்குதலிருந்து தப்பிப் பிழைத்த, தற்போது 90 வயதைக் கடந்துள்ள பாப்புகனியம்மாளின் அன்றைய அனுபவங்களை நமது மின்னம்பலம் மொபைல் பத்திரிகையுடன் பகிர்ந்து கொண்டார்.

“தூத்துக்குடி மாவட்டம் உசரத்துக் குடியிருப்பு என்பது எங்க கிராமம், 250 வீடுகள் இருந்திருக்கும். எல்லாம் பனையோலையால் வேயப்பட்ட வீடுகள். இப்போது மாதிரி எல்லாம், அப்போ ரோடு வசதி, தெரு விளக்கு எல்லாம் கிடையாது, எல்லாம் மண் சாலைகள்தான். பஸ் போக்குவரத்து எல்லாம் அப்போது கிடையாது, எங்க போனாலும் நடந்துதான் போகணும். வாரத்திற்கு ஒரு முறை மட்டும் மாட்டு வண்டியில் டவுனுக்கு போயி, வீட்டுக்குத் தேவையான மளிகை சாமான் வாங்கி வருவோம்.

அந்த சமயம் தான் எங்க ஊரைக் காலரா தாக்கியது. காலரா ஒருவரைத் தாக்கியது என்றால் வாந்தி, பேதி ஏற்படும் அதுதான் அதோட அறிகுறி. காலரா தாக்கியவர்கள் தன்னைத் தானே தனிமைப் படுத்திக் கொண்டு மாட்டுத் தொழுவத்தில் படுத்துக் கொள்வார்கள். குடும்பத்தில் உள்ள மற்றவர்களைப் பக்கத்தில் வரவேண்டாம் என்று எச்சரிக்கை செய்துவிடுவார்கள். இப்போது மாதிரி எல்லாம் அப்போது அரசாங்கம் இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எல்லாம் கிடையாது. மருத்துவமனை கிடையாது, டாக்டர் கிடையாது. யாருமே அப்போ கண்டுக்க மாட்டாங்க. அப்போ அரசாங்கமென்று ஒன்னு இருந்திச்சான்னு தெரியவில்லை… காலரா தாக்கினால் எங்க கோயில் பூசாரி.. செல்லையா பண்டாரம் வருவார். அவர் வந்து நாடி பிடித்து பார்த்துட்டு சொல்வார் தாங்கும் தாங்காதென்று. அவர் காப்பாற்றிடலாம் என்று சொன்னால் அவர் கொண்டுவந்திருக்கும் நாட்டு மருந்து சிவப்பா இருக்கும், அதை கற்பூரத்தில் கலந்து மருந்து கொடுப்பார். அவர் கொடுத்த மருந்தை குடித்து பொழச்சவங்க இருக்காங்க, செத்தவர்களும் இருக்காங்க.

காலரா வந்தவர்களுக்கு உணவாகக் கம்பு சோறும், கைகுத்தல் அரிசியை வறுத்து, அதைக் கடைசியாக வடித்து கஞ்சியைக் குடிக்கக் குடிப்போம், இதுதான் எங்க காலத்தில் சத்தான உணவு இதை இன்னிக்கு வரைக்கும் எங்க வீட்டில் குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லையென்றால் செஞ்சி கொடுக்கச் சொல்வேன். இது தவிர உமியை, வேப்பிலையையும் நல்லா வருத்து உடம்பு முழுசும் ஒத்தடம் கொடுப்போம். இதுதான் அப்போதைய மருத்துவம்.

அப்படி இருந்தும், எங்க பாட்டி பொன்னம்மாளை காலரா பாதித்தது. ரொம்ப வலுவா இருப்பாங்க. அன்னிக்குதான் 7படி அரிசியை, உலக்கையில் நெல் குத்தி அரிசி ஆக்கி வைச்சிட்டு படுக்க போனாங்க, அடுத்த நாளே அவரை காலரா தாக்கியது. செல்லையா பண்டாரத்தை வர வச்சி பார்த்தோம். அவர் நாடி பிடிச்சி பாத்துட்டு தாங்காதென்று சொல்லிவிட்டார் அடுத்த நாளே எங்க பாட்டியை காலராவிற்கு பறிகொடுத்துவிட்டோம்” என்று பெருமூச்சுவிட்ட பாப்புக் கனியம்மாள் ஒரு செம்பு தண்ணீரைக் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்.

“இப்படியே ஊர்ல 92பேர் காலராவிற்கு பலியானார்கள், அதுல இரண்டு குடும்பம் மொத்தமாக போயிட்டாங்க. ஒரு குடும்பத்தில் 7வயது சின்ன பொண்ணு மட்டும் தப்பிச்சா… பல பேர் தோட்டத்துக்கு போனவங்க அங்கேயே செத்து விழுந்து கிடந்தாங்க இவங்களை எல்லாம் எடுத்து புதைக்கவோ, எரிக்கவோ கூட ஆள் இல்லை. அப்போ சாராயம் குடிக்கும் அழகுவேல், வேல்மயில் இரண்டுபேர்தான் குடிக்கப் பணம் கொடுத்தா பிணங்களை எடுத்து புதைச்சாங்க. குடும்பத்தோடு இறந்தவர்களை எல்லாம் வீட்டோடு வச்சி கொளுத்தினாங்க.

ஆனா பாருங்க எங்க ஊருக்கு மேல் இருந்த பிராமணர் விளை என்ற ஊருக்கும் மட்டும் எதுவும் ஆகல, அந்த ஊரில் ஒருத்தரும் காலரா தாக்கி இறக்கல. நாட்டு வைத்தியர் செல்லையா பண்டாரத்திடம் கேட்டதற்கு அவங்க மாரியம்மன் திருவிழா வருசா வருசம் குறையில்லாமல் செஞ்சிடுறாங்கனு பதில் சொன்னார். அப்போ மருத்துவம் ஏது… எல்லாம் கடவுள் பக்திதான், கடவுளைத்தான் அதிகமாக நம்பினோம். இப்போது மாதிரி அறிவியல், மருத்துவம் எல்லாம் அந்த காலத்தில் ஏது?

அப்போ கூட இந்த வைரஸ் பாதிப்பு… நாய், கோழி, ஆடு, மாட்டுக்கு வரல, மனுசங்களை மட்டும்தான் தாக்கியது. ஊர் மக்கள் ஒன்னு கூட சாமி குத்தம்ன்னு சொன்னாங்க.. கழுதையைக் கொண்டு வந்து வீட்டுக்கு முன்னாடி கத்த வைத்தால் காலரா தாக்காதுன்னாங்க. சாமிக்குத் திருவிழா செய்து, கழுதையை பிடித்து வந்து வீட்டுக்கு முன்னாடி கத்த வைத்தோம். காலரா வந்திடக் கூடாதென்று சாலை அமைக்கப் பயன்படும் தாரை கொண்டு வந்து கிராமத்தைச் சுற்றி, தெருக்களில் நெருப்பு வைப்போம். எல்லாத்தையும் மீறி இன்னிக்கு உக்காந்திருக்கேன். என் கண்ணு முன்னாடி போன உசிரெல்லாம் இப்ப நினைச்சா கூட கண்ணு கலங்குது. இனி யாருக்கும் அப்படி நடக்கக் கூடாது சாமீ….” வானத்தை நோக்கிக் கையெடுத்துக் கும்பிட்டு வேண்டினார் பாப்புக்கனியம்மாள்.

**-எம். வடிவேல்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *