கொரோனா – கிருமிச் சுனாமி !

public

-விநாயக் வே ஸ்ரீராம்

ஆரம்பத்தில் பெரும் பீதியைக் கிளப்பிவிட்டிருந்தாலும் இன்றிப்போது இரண்டாம் கட்டத்தில் இறுக்கிப் பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது ‘கொரோனா வைரஸ்’.

மூன்றாம் கட்டம்தான் ஆபத்தான கட்டம் என்கிறார்கள்.

“சமூகத் தொற்று” எனப்படும் அந்த அபாயக் கட்டத்துக்குள் கொரோனா வைரஸ் நுழைந்து விடாமல் இரண்டாம் கட்டத்திலேயே அதனை அழித்துவிட இந்தியா போன்ற மக்கள்தொகை நிறைந்த – சுமார் வளர்ச்சி கொண்டதொரு நாடு வைராக்கியத்தோடு போராடிக் கொண்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் வழி வழியாக வந்த இந்த மண்ணின் ஆன்மபலம் என்றே சொல்ல வேண்டும்.

உலக நாடுகள் இன்று இந்தியர்களைக் கண்டு ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறது. VIGOR OF THE POOR என்பார்கள். அதுபோல, காலத்தின் அவசியம் கருதி சமயோசிதமாகத் தங்களைச் சுருக்கிக் கொண்டு – அதே சமயத்தில் கூர்மையாக்கிக் கொண்டு செயல்படும் இந்தியர்களைப் பார்த்து வளர்ச்சியடைந்து விட்டதாகச் சொல்லப்படும் நாடுகள் எல்லாம் வாய் பிளந்து நிற்கின்றன.

பாரதப் பிரதமரின் ஒரே அறிவிப்பில் 130 கோடி மக்களையும் ஒருங்கிணைத்து விட முடியும் என்றால் அதில் கணிசமான பங்கு சுய சிந்தனைமிக்க இந்த மக்களுக்கு உண்டு!

ஆங்காங்கே விரும்பத்தகாத சிறு சிறு சம்பவங்கள் நடந்தாலும், போலீஸாரின் தடியடி உட்பட சில விமர்சனங்கள் எழுந்தாலும் அவை மொத்தத்தில் 1% கூட இல்லை என்பதே உலகத்தின் ஆச்சர்யத்துக்குக் காரணமாகியிருக்கிறது.

இன்று கொரோனாவில் மனித பலிகள் கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்காக ஊணுறக்கம் மறந்து சுற்றிச் சுழலும் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் தனித்து வாழ்த்தியே தீர வேண்டும்.

கொரோனா என்னும் கண்காணாத கொடூர எதிரியிடமிருந்து மக்களை எப்படியேனும் காத்துவிட வேண்டுமே என்னும் கடமை உணர்வோடு களத்தில் நெஞ்சு காட்டி முன்னணியில் நின்று போராடும் மருத்துவர்களையும் காவல் துறையினரையும் தொழுது வாழ்த்தியாக வேண்டும்.

பேராபத்தான சூழலில் மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் அதிதீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதைப் பாராட்டியே ஆக வேண்டும்.

ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கொரானா தாக்குதல் என்பது முன்னுதாரணமற்ற அட்டாக்!

எதிரி யார்? அவன் குணம் என்ன? வீரியம் என்ன? அவன் வீக் பாயின்ட் எது என்பதையெல்லாம் ‘ட்ரையல் அண்டு எர்ரர்’ முறையில்தான் புரிந்து கொண்டாக வேண்டும். புரியப் புரிய வியூகங்களை மாற்றிக் கொண்டும் விஸ்தரித்துக் கொண்டும் போக வேண்டும். சமயத்தில் ‘யூ டர்ன்’ அடிக்க வேண்டியதிருந்தாலும் செய்தாக வேண்டும். காரணம், எதிரி கண்காணாதவன். முன்னுதாரணமற்றவன்.

குறி ஒன்றே! அது, மக்களின் உயிரைக் காப்பது!

ஆய்வும் செயலாக்கமும் ஒரே சமயத்தில் நடந்தாக வேண்டும் என்றால் அதற்கு அசாத்திய நெஞ்சுறுதியும் மக்களின் அனுசரணையும் அவசியம். அதை இந்தியா சாதித்துக் கொண்டிருக்கிறது.

போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறதுதான். முக்கியக் கட்டங்களைக் கடக்க வேண்டியதிருக்கிறதுதான் என்றாலும் கடந்து நிற்போம் என்னும் நம்பிக்கையும் இருக்கிறது.

இந்த நேரத்திலும்கூட விமர்சகர்கள் என்ற பெயரில் தாறுமாறாகப் பேசி தடாலடி செய்து கொண்டிருப்பவர்களைக் கண்டுதான் ஆயாசம் மேலிடுகிறது.

இந்த அரசாங்கம் தோற்றுவிட்டது. அரசாங்கம் செயலிழந்துவிட்டது. மக்களை ஏமாற்றுகிறது என்றெல்லாம் மனம்போன போக்கில் விடாமல் சொல்லிக் கொண்டிருப்பதால் என்ன பயன் விளைந்துவிடப் போகிறது ?

மக்களைக் காப்பாற்றும் இடத்தில் இன்று அரசாங்கம்தானே இருக்கிறது.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்… ஒரு புறம் வாட்ஸ்அப், முகநூலில் கொரோனா குறித்த வீடியோக்களும் செய்திகளும் விடாமல் பரப்பப்பட்டு மக்கள் பீதியில் ஆழ்த்தப்படுகிறார்கள்.

மறுபுறம், தங்களைக் காக்க வேண்டிய இடத்தில் இருக்கும் அரசாங்கம் செயலிழந்து விட்டதாகச் சொல்லப்படும் பரப்புரைகளையும் கேட்கிறார்கள்.

மக்களோ சுய ஊரடங்கில் வீட்டுக்குள் அடைந்து இருக்கிறார்கள். என்னதான் செய்வார்கள் அந்த அப்பாவிகள்? அவர்களுக்குண்டான மாற்று வழிதான் என்ன? அவர்களுக்கு மனக்குழப்பத்தைக் கொடுத்தால் அதை எங்கு போய் தீர்த்துக் கொள்வார்கள்? சிந்திக்க வேண்டாமா?

விமர்சகர்கள் எனப்படுவோர் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக மாற்று வழியினைக் கண்டடைந்து சொல்வார்கள் என்றால் அவர்களைக் கொண்டாடலாம்.

மாறாக, இந்த நேரத்திலும் இப்படிக் ‘கிலி’ கிளப்பிக் கொண்டிருப்பவர்கள் மேல் மக்களுக்கு வெறுப்பும் விரக்தியும்தான் ஏற்படும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வது நல்லது. அப்பாவி சமூகத்தை பீதிக்குள் தள்ளுவது நியாயமாகாது.

ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி என்பதெல்லாம் இப்போது இரண்டாம் பட்சம். மக்களின் மனநலமும் – உயிரும்தான் முக்கியம்!

வன்மத்தோடு அணுக வேண்டிய நேரமல்ல இது. எடுத்ததற்கெல்லாம் அரசாங்கத்தை அடிவயிற்றில் அடித்துக்கொண்டிருப்பது சரியில்லை என்றே தோன்றுகிறது. இதை சொல்வதற்கு ஒருவர் வலதுசாரியாகவோம் இடதுசாரியாகவோ இருந்தாக வேண்டிய அவசியமில்லை. சராசரியான மனசாட்சியே போதுமானது.

புரிந்து கொள்ளுங்கள்… கொரோனாவுக்கும் நமக்கும் இடையேயான போரில் நாம் ஆடிக் கொண்டிருப்பது எதிராட்டம் அல்ல. தடுப்பாட்டம்தான்.

எதிராட்டம் ஆடக் கூடிய வன்மையும் வலிமையும் எந்த நாட்டுக்கும் இன்று இல்லை என்பதே உண்மை நிலை.

தடுப்பாட்டம் ஆடக் கூடிய மனப்பக்குவம் இந்தியர்களுக்கு உண்டு என்பதால்தான் உயிர்பலியின் விகிதாச்சாரத்தை ஆனவரைக்கும் மட்டுப்படுத்தி கொரோனாவை ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.

கண்ணுக்குத் தெரியாத எதிரியுடனான இந்தப் போரில் எந்த அரசாங்கத்தாலும் இயல்பான வாழ்க்கை முறையை மக்களுக்கு அளித்துவிட முடியாது என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். விமர்சகர்கள் என்பவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே எனது எளிய வேண்டுகோள்!

இது, கொடுங்கிருமிச் சுனாமி! இதுபோன்ற எதிர்பாராத தாக்குதலில், அவசர காலத்தில் எந்த அரசாங்கத்தாலும் இயன்ற வரைதான் செய்ய முடியும். அது நடந்து கொண்டுதான் இருக்கிறது என்ற அளவில் இந்தப் போரில் எல்லோரும் ஒன்றிணைந்து பங்கெடுத்துக் கொண்டாக வேண்டும்.

கோவையில் சில நூறு வட மாநிலப் பணியாளர்கள் ஓரிடத்தில் கூடி தர்ணா செய்ததை பெரிதுபடுத்தி இந்த அரசாங்கம் முடங்கிவிட்டது என்ற அளவுக்குச் சாட்டை வீசுகிறார்கள் சிலர். அது தவறு.

உண்மை நிலை என்ன? கோவையில் கட்டுமானத் தொழிலும் – மில்களிலும் – லோக்கல் தறிகளிலும் வேலை செய்ய வடநாட்டு வேலையாட்கள் லட்சக்கணக்கில் வந்து குவிந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தங்குவதற்குச் சிறு சிறு வரிசை வீடுகளைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே கட்டிக் கொடுத்திருக்கிறது.

தன்னூரடங்கு அறிவிக்கப்பட்ட கணமே சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் தங்கள் வேலையாட்களுக்கு மனிதாபிமானத்தோடு பருப்பு – கோதுமை உட்பட அடுத்த ஒரு மாதத்துக்குத் தேவையான அத்தியாவசிய பண்டங்களை வாங்கிக் கொடுத்து விட்டார்கள். அவர்களின் வருங்காலத் தொழிலுக்கு அந்தப் பணியாளர்கள் அவசியம் என்பதை அவர்கள் அறிவார்கள். ஆகவே, அதில் பிரச்சினை இல்லை.

ஆனால், கோவையைச் சுற்றியுள்ள கிராமங்களில் சிறு சிறு தறிகள் இருக்கின்றன. ஈரோடு, பல்லடம், கருமத்தம்பட்டி, திருப்பூர் சுற்றி இருக்கும் கிராமங்களில் இருக்கும் தறிகளில் மூன்று அல்லது நான்கு வடமாநிலத்தவர் மட்டுமே வேலை செய்யும் சிறு குறு தறித்தொழில்களும் நடக்கின்றன. அதன் உரிமையாளர்களே பாவப்பட்டவர்கள்தான் என்னும்போது வடமாநிலப் பணியாளர்களை வைத்துப் போஷிக்க அவர்களால் எப்படி முடியும்?

அப்படி சிக்கிக் கொண்டவர்கள்தான் அன்று ரோட்டுக்கு வந்து போராடி இருக்கின்றனர். அவர்களுக்கும் கலெக்டர் ஆவன செய்து கொடுத்து விட்டார். ஓர் அவசரக் கால சூழலில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க முடியாது. இதை ஊதிப் பெரிதாக்கி அரசாங்கத்தை மட்டம் தட்டுவதில் அர்த்தமில்லை.

சொல்லப்போனால் இதற்கு ஆதி காரணம் நூறு நாள் வேலை திட்டமும் அதன் நிழலில் ஒதுங்கி அன்றாட வேலைக்கு வர மறுத்த தமிழர்களின் மனப்பான்மையும்தான். அதன் பின்னால் இருக்கும் பாழரசியலை விரித்துப் பிரஸ்தாபித்துக் கொண்டிருக்கும் நேரம் இதுவல்ல.

இன்று நாம் ஒன்றிணைந்து கொரோனாவை வென்றெடுத்தாக வேண்டும். மற்ற பிரச்சினைகள் அப்புறம். ஒவ்வோர் உயிரும் முக்கியம்.

அது ஒரு பரந்த ஏரி !

அந்த ஏரியின் நடுவே குன்று ஒன்று இருந்தது. ஏரிக்கரையில் அமர்ந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தாராம் அந்த சூஃபி ஞானி !

திடீரெனப் பெருங்காற்று வீசி அடிக்க, அந்தக் காற்றால் தாக்கப்பட்ட அந்தக் குன்றிலிருந்த வலிமை குன்றிய சிறு துகள் ஒன்று மெல்லப் பெயர்ந்து, உருண்டு, புரண்டு, ஏரிக்குள் விழுந்து, அமிழ்ந்து, மறைந்து போனதாம்.

விருட்டென்று எழுந்து நின்ற அந்த சூஃபி ஞானி, முகம் வெளிறிப் போனவராய்…

“ஐயகோ, குன்றைக் காணவில்லையே… குன்றைக் காணவில்லையே…” என்று ஏரிக்கரை எங்கும் புலம்பியபடியே வானத்தைப் பார்த்து முறையிட்டாராம்.

ஆம், ஏரிக்குள் அமிழ்ந்து போன அந்த சிறு துகளையும் உள்ளடக்கியதுதான் அந்தக் குன்று. சிறு துகள் ஒன்று அகன்றாலும் குன்று என்ற அந்தஸ்தை அது இழந்து விடுகிறது. ஆக, குன்றே காணாமல் போனதாகத்தான் கணக்கு !

அப்படித்தான் ஒவ்வொரு மனித உயிரும் இந்த சமூகத்தின் பூரணத்துக்கு இன்றியமையாதது. அதைக் காக்கும் கடமையில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்துக்கு நம்மால் ஆன ஒத்துழைப்பை பரிபூரணமாக அளிக்க வேண்டியது அவசியமாகிறது.

மற்ற கணக்குகளை பிறகு பார்த்துக்கொள்வோம் எனத் தள்ளிப் போட்டுவிட்டுத் தோள் கொடுப்பதே அறிவுலகத்துக்கு அழகு !

விவரம் அறிந்த அரசியலாளர்கள் எல்லோரும் வினயமாகத்தான் அணுகிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், விமர்சகர்கள் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள்தான் அர்த்த ராத்திரியில் ஆணி அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முன்பே சொன்னது போல கொரோனாவுக்கிடையேயான போரில் நாம் இப்போது இரண்டாம் கட்டத்தில் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

களத்தில் எங்கே புதைகுழி எதிர்ப்படுமோ தெரியாது. போக வேண்டிய தூரம் அதிகம் போலத்தான் தெரிகிறது.

ஒன்றிணைந்தால் முடியாதது ஒன்றுமில்லை என்பதைப் பாரத தேசம் பல முறை நிரூபித்திருக்கிறது. அந்த ஒன்றிணைவுக்கு பாதகம் – பங்கம் ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்வது ஒவ்வொருவரின் பொறுப்பு!

நல்ல சேதிகள் விரைந்து வரட்டும்!

இதுவும் கடந்து போக, இந்தியா எழுந்து நிற்கட்டும்!

**கட்டுரையாளர் குறிப்பு**

விநாயக் வே.ஸ்ரீராம் – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *