மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

போலீசாரின் குமுறல்கள்: கண்டுகொள்வாரா முதல்வர்!

போலீசாரின் குமுறல்கள்: கண்டுகொள்வாரா முதல்வர்!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருக்கும் மருத்துவர்கள், தன்னலம் பார்க்காமல் போராடி வருகின்றனர். அதுபோன்று தமிழக காவல் துறையினரும் தினம் தோறும் பொதுமக்களுடன் போராடி வருகின்றனர்.

மருத்துவர்களை பொறுத்தவரையில் அவர்கள் பணியில் ஈடுபடும் போது மாஸ்க், கையுறைகள், ஹேன்ட்வாஷ், சானிட்டைசர் ஆகியவை வழங்கப்படுகிறது. அதோடு மட்டுமின்றி காப்பீடு மற்றும் ஒரு மாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படுகிறது. மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள ஒரு வாரம் சுழற்சி முறையில் விடுப்பு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் காவல்துறையினரைப் பொறுத்தவரை, இந்த சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் முதலில் ஆஜராபவர்கள் காவல்துறையினர்தான். பணி முடிந்து வீட்டுக்குப் போனாலும் அவசரத்திற்கு அழைத்தால் சீருடையை மாட்டிக்கொண்டு உடனடியாக மீண்டும் பணிக்குத் திரும்புகின்றனர்.

தற்போது, கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், காவல்துறையினர் பொதுமக்களிடம் போராடி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் அதனையும் தாண்டி பலர் வெளியில் வந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

அவர்களுக்கு கொரோனா அறிகுறி அல்லது வேறு எதாவது நோய்த் தொற்று இருக்கிறதா என்று கூட போலீசார் அறிய முடியாது. எனினும் அவர்கள் அருகில் சென்று அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்ப அன்றாடம் மன்றாடி வருகின்றனர். அவ்வாறு பணிகளில் ஈடுபடும் பெரும்பாலான போலீசாருக்கு மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போதிய அளவு வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு சில போலீசார் முகத்தை கை குட்டையால் மூடிக்கொள்வதையும் நம்மால் காண முடிகிறது.

ஏற்கனவே காவல்துறையில் போலீசாருக்கு பணிச்சுமை இருப்பதாகக் கூறப்படும் நிலையில் தற்போது கொரோனா எதிரொலியாக அவர்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் பணியில் இருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்த 12 மணி நேர பணி முடிந்ததும் அவர்கள், வீட்டுக்குச் செல்கிறார்கள்.

அப்படி வீடு செல்பவர்கள், தங்களது குழந்தை, மனைவி உட்பட குடும்பத்தினருடன் கூட நெருங்கிப் பேச முடியாமல், தங்களைத் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொள்கின்றனர் என்பதை அறியமுடிகிறது.

இதுகுறித்து டிஜிபி அலுவலக வட்டாரத்தில் மின்னம்பலம் சார்பில் பேசியபோது, சில போலீசார் கூறுகையில் “ஆரம்பக் காலத்திலிருந்து அப்படியே பழகிப்போச்சு, ஆட்சியாளர்களும் செய்யமாட்டார்கள், தற்போது கொரோனா வைரஸ் பிரச்சனையில்கூட, கீழ்மட்ட அதிகாரிகளிடம் சொல்லி, மாஸ்க், சானிட்டைசர், யாரிடமாவது ஸ்பான்ஸர் கேட்டு வாங்கி கொடுங்கள் என்று விலகிக் கொள்கிறார்கள் உயர் அதிகாரிகள்.

மாவட்ட எஸ்.பி,கள், மாநகராட்சி காவல்துறை ஆணையர்கள் ஆகியோர் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பர்ச்சேஸ் செய்தால் டெண்டர் அறிவிப்பு செய்துதான் பர்ச்சேஸ் செய்ய முடியும். அப்போது லட்சக்கணக்கில் பில் வந்துவிட்டால், அதனை க்ளைம் செய்வது குதிரைக்குக் கொம்பு முளைத்த கதைதான், அதற்கு உயர் அதிகாரிகள் உதவ மாட்டார்கள். முதல்வரிடம் நற்பெயர் வாங்குவதற்கு, போலீஸ் நன்கு சம்பாதிக்கிறார்கள் அவர்கள் சமாளித்துக்கொள்வார்கள் என்று பிரச்சனையை முடித்துக்கொள்வார்கள்.

அதனால்தான் மாவட்டத்தில் உள்ள முக்கிய பெரும் புள்ளிகள், சமூக விரோத தொழில் செய்பவர்களிடம், அல்லது அந்தந்த காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட முக்கியஸ்தர்களிடம் அதிகாரிகள் போய் கையேந்துகிறார்கள்.

கடந்த நான்கு நாட்களாக, தினம்தோறும் மாஸ்க் ஒருவரிடம், சானிட்டைசர் ஒருவரிடம், பாதுகாப்புப் பணியில் உள்ளவர்களுக்குச் சாப்பாடு ஒருவரிடம் என்று பிச்சையெடுக்காத குறையாகக் கேட்டுப் பெற்று வருகிறார்கள்.

ஏட்டு, எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி, ஏன் எஸ்.பி,கள் கூட சில முக்கிய நபரிடம் பேசி ஸ்பான்சர் கேட்கிற அவல நிலை காவல்துறையில் உள்ளது . வேறு வழிதெரியாமல் நேர்மையான அதிகாரிகளும் சிலரிடம் வளைந்து நின்று கேட்கக்கூடிய சூழ்நிலைகளுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

இதனால் தான், காவல்துறையினர், யார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அவர்களிடம் இருந்தே ஸ்பான்சர் பெறும் அவலமும் ஏற்படுகிறது.

காவல் துறையினர்களை கை நீட்டச்சொல்வது யார், இந்நிலையில் அவர்கள் எப்படி நேர்மையாகப் பணி செய்யமுடியும், ஸ்பான்சர் கொடுப்பவர்களுக்கு சில சலுகைகள் செய்துகொடுத்துத் தான் ஆகவேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவல்துறையைச் சீர்செய்ய முன்வருவாரா?” என்று குமுறுகிறார்கள்.

-வணங்காமுடி

திங்கள், 30 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon