z21 நாட்கள் தனிமைப்படுத்துதல் ஏன்? விஜயபாஸ்கர்!

public

21 நாட்கள் ஏன் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐ நெருங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 979ஆகவும், இறப்பு எண்ணிக்கை 25ஆகவும் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தன். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு, அது 5 ஆவது நாளை எட்டியுள்ளது. எனினும், பல இடங்களில் ஊரடங்கை மீறி பலரும் சென்றுவருவதைப் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஈரோட்டைச் சேர்ந்த 8 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. பெருந்துறையில் சிகிச்சை பெற்று வரும் தாய்லாந்து நபர்களின் மூலமாக இவர்களுக்கு பரவியுள்ளது. தமிழக சுகாதாரத் துறை மேற்கொண்ட தொடர்புத் தடத்தின் மூலம் இவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அனைத்து நோயாளிகளும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், “உலக அளவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு, அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை, அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி ஆகியவற்றை கவனத்தில் கொள்ளும்போது கொரோனாவின் பரவல் வேகம் அதிகமாக உள்ளது. ஒருவருக்கு இருக்கும் கொரோனா வைரஸ் 9 பேருக்கு பரவி அது அடுத்தடுத்த பாதிப்புகளை உருவாக்கி 9 கோடியை தொட்டுவிடும் நிலையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “சீனா போன்ற நாடுகளில் படிப்படியாக உயர்ந்து லட்சக்கணக்கானோரை தாக்கியது. அதுபோன்ற சூழல் இந்தியாவிற்கோ, தமிழகத்திற்கோ வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகிறது. 21 நாட்கள் எதற்காக என உலக சுகாதார அமைப்பு சொல்கிறது என்றால், கொரோனா வைரஸ் 14 நாட்கள் வரை தங்கும். இடையில் நோய்த்தொற்று ஏற்பட்டால் அதற்கு ஒரு ஏழு நாட்கள். ஆக 21 நாட்கள் நம்மை தனிமைப்படுத்திக் கொண்டால் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும்” என்று விளக்கினார்.

சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் பணியாற்றிவிட்டு 21 நாட்கள் வெறுமனே இருப்பது கஷ்டமானதுதான் எனவும் சொன்ன விஜயபாஸ்கர், “அது மக்களுக்காகத்தானே. உங்களின் பாதுகாப்புக்காகத்தானே அரசு சொல்கிறது. கொரோனாவால் அச்சம் பரவக்கூடிய சூழலில் அதை எதிர்கொண்டு உங்களின் பாதுகாப்புக்காக தூக்கம், குடும்பம், குழந்தைகளை மறந்து மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், வருவாய் அதிகாரிகள், காவல் துறையினர் என அனைவரும் போராடுகிறார்கள். ஆகவே உங்களுக்காக, நமக்காக, நமது குடும்பத்திற்காக நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் நான் வலியுறுத்துகிறேன்” என்று வேண்டுகோள் வைத்தார்.

மேலும், “இது அரசின் உத்தரவு, இதனை மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றெல்லாம் அதிகாரத்தோடு சொன்னாலும் கூட, இதை நமக்காக, நாட்டுக்காகத்தானே செய்கிறோம் என்ற எண்ணத்தில் செய்யுங்கள்” என்று குறிப்பிட்டவர்,

“இந்த நேரத்தில் 21 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டால் ஒரு பேராபத்திலிருந்து நம்மையும், குடும்பத்தையும், சமூகத்தையும் காத்துக்கொள்ள முடியும். அதன்மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் நாம் கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். ஆரோக்கியமான, சத்தான உணவுகளை சாப்பிடுங்கள், புத்தகம் படியுங்கள், நன்றாக தூங்குங்கள், இசை உணருங்கள், யோகா, உடற்பயிற்சி செய்யுங்கள், உங்களை நீங்களே தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள். குடும்பத்தோடு சந்தோஷமாக பேசி மகிழ்ந்திருங்கள். அரசின் உத்தரவு ஒரு புறம் இருந்தாலும், உணர்வு ரீதியாக இதனை நீங்கள் வெளிக்காட்ட வேண்டும்” என்று தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

**எழில்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *