மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்க்குகளுக்கு நேரக் கட்டுப்பாடு!

public

தமிழகத்தில் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. சுமார் 38 பேர் தமிழகத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும், மக்கள் அதனை மீறி வெளியே செல்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காகவும் வெளியே செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.

இதனிடையே நேற்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வளாகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். இதன் பின் தமிழகத்தில் 2ஆவது கட்டத்தை நோக்கி கொரோனா வைரசின் தாக்கம் நகர்வதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்க்குகள் ஆகியவை முழு நேரமும் திறந்திருக்கும் என்ற அறிவிப்பில் மாற்றம் கொண்டு வந்து, நேரக் கட்டுப்பாடு விதித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், ”கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி, பழ அங்காடிகளுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள், மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் பொருட்களை இறக்கி விட வேண்டும்.

வாகனங்களுக்குக் கிருமி நாசினி தெளித்தல், சுமை தூக்கும் பணியாளர்கள் முறையாகப் பாதுகாப்பு, சுகாதார முறைகளை கடைப்பிடித்தல் போன்றவற்றைச் சென்னையில் மாநகராட்சி ஆணையரும் பிற ஆட்சியர்களும் ஒரு சிறப்புக் குழு அமைத்துக் கண்காணிக்க வேண்டும். மேலும், இந்த சந்தை பகுதிகளில் பொதுச் சுகாதாரம் பேணப்பட்டு, நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

கோயம்பேடு காய்கறி அங்காடி மற்றும் பிற காய்கறி விற்பனை கடைகள், அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடு, தேவையின்றி மக்கள் வெளியே நடமாடுவதைக் கட்டுப்படுத்த எடுக்கப்படுகிறது.

பெட்ரோல் பங்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே செயல்படும். எனினும், அரசு வாகனங்கள், 108 அவசர ஊர்திகள் போன்ற ஊர்திகளுக்கான பிரத்யேக பெட்ரோல் பங்குகள் மட்டும் நாள் முழுவதும் தொடர்ந்து செயல்படும்.

மருந்தகங்கள், உணவகங்கள் (பார்சல் மட்டும்) நாள் முழுவதும் எப்போதும் போல் இயங்கும்.

வயது முதிர்ந்தோர் வீட்டில் சமைக்க முடியாதோர் போன்றோர், சமைத்த உணவுப் பொருட்களை வீட்டிற்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்கின்றனர். இத்தகையோரின் நலன் கருதி “Swiggy, Zomato, Uber Eats” போன்ற நிறுவனங்களின் மூலம், காலை 7 மணி முதல் 9.30 மணி வரை காலை சிற்றுண்டியும், மதியம் 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மதிய உணவும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரவு உணவும் எடுத்துச்சென்று வழங்க அனுமதிக்கப்படுகிறது.

எனினும் இத்தகைய பணியில் ஈடுபடும் நபர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் மூலமாக காவல்துறையிடம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும், சம்மந்தப்பட்ட நிறுவனங்களே அவர்களின் உடல்நிலையைத் தினம்தோறும் பரிசோதித்து, பின்னர் பணியில் ஈடுபடுத்த வேண்டும்” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடு இன்று (மார்ச் 28) முதல் அமலுக்கு வருகிறது.

**கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *