வீதியில் வசிப்பவர்களுக்கு உணவு வழங்கும் இந்தியன் ரயில்வே!

public

ஊரடங்கு உத்தரவின் காரணமாக உண்ண உணவின்றி வீதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இந்தியன் ரயில்வே உதவி செய்ய முன்வந்துள்ளது.

134 கோடி மக்கள்தொகை கொண்ட நமது இந்திய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப்பரவலாக மாறிவிட்டால் அதனால் நமக்கு பேரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தான் மக்கள் சமூக விலகலைக் கையாண்டு தனித்திருக்கும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 21 நாட்கள் ஊரடங்கைக் கடைபிடிப்பது மிகப் பெரியதொரு நன்மைக்கான பாதையாகவே கருதப்படுகிறது. ஆனால், இந்த உத்தரவின் காரணமாக பல்வேறு தொழில்கள் முடக்கப்பட்டு, கோடிக்கணக்கான மக்கள் பெரும் பண நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

வைரஸ் குறித்த அச்சத்தை விடவும், உணவுக்கான போராட்டமே இவர்களுக்குப் பெரும் கவலையளிப்பதாக உள்ளது. இத்தகைய ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கி உதவி செய்ய இந்தியன் இரயில்வே முன்வந்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சியின் அனைத்து மண்டல ரயில்வே தலைமையகங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு மொத்தமாக உணவு தயாரித்து விநியோகம் செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர். பல்வேறு ஐ.ஆர்.சி.டி.சி அலுவலகங்கள் வாயிலாக ஒரே நேரத்தில் 3000 முதல் முதல் 5000 ஆதரவற்ற மக்களின் பசியைப் போக்குவதற்கான முயற்சியில் அவர்கள் களமிறங்கியுள்ளனர். ஏற்கனவே ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால் முன்பதிவு செய்தவர்களுக்கு அபராதமின்றி ரயில் கட்டணத் தொகையை ரயில்வே நிறுவனம் திருப்பி அளித்துவரும் நிலையில், உணவு வழங்கும் சேவையிலும் ஈடுபடவுள்ளனர்.

இந்த சேவையை ஐ.ஆர்.சி.டி.சி தனது ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததார பணியாளர்கள் மூலமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளது. ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பெரும்பான்மையான ரயில்வே பணியாளர்களும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர். பிற தினக்கூலி வேலைகளும் கிடைக்காமல் இருக்கும் நிலையில் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனினும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்திய ரயில்வே முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது.

ஏற்கனவே இரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தலுக்கான அறைகளாக மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார். அதற்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அத்துடன் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்ல சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மக்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் சிறப்பாக செயலாற்றி வரும் இந்திய ரயில்வே துறைக்குப் பலரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *