மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

தமிழகத்தில் நான்கு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சோதனை!

 தமிழகத்தில் நான்கு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சோதனை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் சோதனை நடத்த தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதியளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று (மார்ச் 26) இரவு அகில இந்திய மருத்துவக் கவுன்சில் நாடு முழுவதிலும் 35 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று பற்றிய சோதனை நடத்த அனுமதி அளித்துள்ளது.

இதன்படி தமிழகத்தில் நான்கு மருத்துவமனைகளுக்கு கொரோனா சோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

1. சிஎம்சி மருத்துவமனை வேலூர்

2. அப்பல்லோ மருத்துவமனை சென்னை

3.நியூபர்க் எல்ரிச் லேப் (Neuberg Ehrlich lab) பாலாஜி நகர் சென்னை

4 ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி- ஆய்வு நிலையம், போரூர்

ஆகிய நான்கு தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சோதனை இனி செய்யப்படும். இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாது மேற்கண்ட தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்று பற்றிய சோதனை நடத்தப்படும்.

கடந்த மார்ச் 17 ஆம் தேதி மின்னம்பலம் இதழில், கொரோனா: தமிழகத்தில் நடப்பது என்ன? என்ற கட்டுரையில்,

“கொரோனா அறிகுறிகள் தங்களுக்கு இருப்பதாகக் கருதுபவர்கள் கூட அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று சோதனை செய்வதற்கு அஞ்சுகிறார்கள். அப்படி அஞ்சுபவர்கள்தான் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுகிறார்கள். இப்போதைய நிலவரப்படி கொரோனா இருப்பதை அறிகுறிகள் மூலம் உறுதி செய்யும் ஆற்றல் தனியார் மருத்துவமனைகளுக்கு இருந்தாலும் அவர்களுக்கு அந்த அதிகாரம் இல்லை. அரசு மருத்துவமனை மூலம் செல்லும் சாம்பிள்கள் மட்டுமே கிங்ஸ் லேபுக்கு செல்கின்றன. எனவே தனியார் மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் உண்மையிலேயே கொரோனா தாக்கப்பட்டிருந்தால் கூட அதை சான்று மூலம் உறுதிப்படுத்தவும் முடியாமல் அதேநேரம் தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டுமானால் கொரோனா பரிசோதனை செய்ய தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதியளிக்க வேண்டும். அவ்வாறு அளித்தால்தான் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்ற உண்மையான கணக்கீட்டை அறிய முடியும்” என்று தமிழகத்தின் எதார்த்த நிலையை படம் பிடித்துக் காட்டியிருந்தோம்.

சுமார் பத்து நாட்கள் கழித்தே தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் தனியார் மருத்துவமனைகள் கொரோனா சோதனை செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது தாமதமான நடவடிக்கை என்றாலும், அரசுக்கு கொரோனா தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக அறிந்துகொள்ள இது துணை புரியும்!

-வேந்தன்

வெள்ளி, 27 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon