மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 14 ஆக 2020

ஊரடங்கை மீறுபவர்களுக்குத் தேர்வு: மதிப்பெண் குறைந்தால் தோப்புக்கரணம்!

ஊரடங்கை மீறுபவர்களுக்குத் தேர்வு: மதிப்பெண் குறைந்தால் தோப்புக்கரணம்!

ஊரடங்கு உத்தரவையும் மீறி வெளியே சுற்றிய இளைஞர்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு தேர்வு வைத்து, அதில் பெயிலானால் போலீஸார் தோப்புக்கரணம் போடச் சொல்லி நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.

கொரோனாவால் உலகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தொற்று தற்போது இத்தாலியை அதிகமாகப் பாதித்துள்ளது. சீனாவைவிட இத்தாலியில் உயிரிழப்பு அதிகமாக இருக்கிறது. இத்தாலி போன்று இந்தியாவும் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்த நோயைக் கட்டுப்படுத்த ஒரே தீர்வு ஊரடங்கு உத்தரவுதான் என்று கூறி நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதை மீறி பலர் வெளியே சென்று கொண்டுதான் இருக்கின்றனர். இவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் போலீஸார் பல இடங்களில் லத்தியடி கொடுத்தாலும், ஒரு சில இடங்களில் கெஞ்சியும் வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இதுவொரு பக்கம் என்றால், மறுபக்கம் நூதன தண்டனையாகத் தோப்புக்கரணம் போடச் சொல்வது, கொரோனா குறிப்பு வினாத்தாள் தயாரித்து வெளியே சுற்றுபவர்களிடம் தேர்வை நடத்தி மதிப்பெண் குறைந்தால் தண்டனை கொடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைச் சரக டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் காவல் துறையினர் தமிழக கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித் திரியும் இளைஞர்கள் மற்றும் பொது மக்களைத் தடுத்து நிறுத்தித் தேர்வு வைத்தனர்.

அந்த வினாத்தாளில், கொரோனா வைரஸ் முதலில் பரவிய நாடு எது, கொரோனா வைரசின் காதலி பெயர் என்ன, கொரோனா வைரசால் அதிகமாகப் பாதிக்கப்படும் உடல் உறுப்பு எது, ஊரடங்கு சட்டத்தை அலட்சியப்படுத்தியதால் அதிகமாக உயிரிழப்பு ஏற்பட்ட நாடு எது, இந்த வைரஸ் தொற்றைத் தடுக்க நாம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், சமூக விலகல் என்றால் என்ன உள்ளிட்ட 10 கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இந்த வினாக்களுக்குத் தேர்வு எழுதி முடிந்ததும் ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வீதம் 10 கேள்விகளுக்கும் மார்க் போடப்படுகிறது. இதில் மதிப்பெண் குறைந்தவர்களுக்கு போலீஸார் தோப்புக்கரணம் போடச் சொல்லி நூதன தண்டனை வழங்குகின்றனர்.

இது மட்டுமின்றி தோப்புக்கரணம் போடும்போது 10 கேள்விகளுக்கான பதில்களைச் சொல்லிக் கொடுத்தும், ஊரடங்கு சட்டத்தை மீறுவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் விளிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

கவிபிரியா

வெள்ளி, 27 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon