மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

144: பொதுமக்கள் மீறலாமா? போலீஸ் தாக்கலாமா?

144: பொதுமக்கள் மீறலாமா?  போலீஸ் தாக்கலாமா?

உலகத்தையே உலுக்கும் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக மார்ச் 25ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

அதற்கு முன்பே மார்ச் 24ஆம் தேதியிலிருந்து மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு தமிழகத்தில் 144 ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதை இப்போது நீட்டித்துள்ளது. இந்தத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய விதத்தில் ஒரே நாளில் தமிழகத்தில் சலசலப்புகளும் விவாதங்களும் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் இந்தத் தலைமுறை உட்பட பெரும்பாலான பேருக்கு 144 தடை உத்தரவை மாநிலம் முழுமைக்கும் அமல்படுத்தி அனுபவித்த பழக்கம் இல்லை. குறிப்பிட்ட சில இடங்களில் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக மட்டுமே மிகச்சிறு பரப்பில் 144 தடை உத்தரவு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், மாநிலம் முழுமைக்கும் ஒரே நேரத்தில் 144 தடை உத்தரவு என்பது பலர் அறியாதது. அதுமட்டுமல்ல 1897ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இயற்றப்பட்ட தொற்று நோய் பரவல் தடைச் சட்டமும் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஆங்காங்கே வாக்குவாதங்களும் சலசலப்புக்களும் ஆரம்பித்துள்ளன ‌..

ஒருபடி மேலே போய் ஊரடங்கு உத்தரவின் முதல் நாளான நேற்று முன்தினம் பிற்பகலில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளில் வீதிக்கு வரும் சொற்ப வாகன ஓட்டிகளை போலீஸார் லத்திகளால் தாக்கத் தொடங்கிவிட்டனர்

சென்னை அண்ணாசாலையில் போலீஸ் அதிகாரி ஒருவர் தடை உத்தரவை மீறி பயணிப்பவர்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டு வீட்டுக்குப் போங்கள் என்று வேண்டுகிற காட்சி வாட்ஸ்அப்களில் பரவலாக பகிரப்பட்ட நிலையில்தான்... மக்கள் மீது போலீஸாரின் லத்தி சார்ஜ் வீடியோக்களும் பரவலாக உள்ளன.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி காவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்து ஓர் ஆடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில், "144 தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதை பொதுமக்கள் மீறினால் நீங்கள் வழக்கு போடுங்கள். வெளியே வருகிறார்கள் என்றால் அட்வைஸ்தான் பண்ணணும். ஆனால், அவங்களை அடிக்க போலீஸுக்கு யார் அதிகாரம் கொடுத்தா? டிஜிபி திரிபாதி கொடுத்திருக்காரா? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்திருக்காரா? ஓபிஎஸ் கொடுத்தாரா? யாருய்யா உங்களுக்கு மக்களை அடிக்க அதிகாரம் கொடுத்தது? இதை மனித உரிமை கமிஷனுக்கும், ஹைகோர்ட்டுக்கும் எடுத்துட்டுப் போனா அடிச்ச அத்தனை பேரும் வேலையை விட்டுத்தான் போகணும். அட்வகேட்ஸ் வெளியே வருவோம். அடிப்பியா?” என்று அந்த வீடியோவில் கேட்டிருக்கிறார்.

இதற்குப் பதில் தரும் வகையில் காவல் துறையின் சார்பில் ஒருவர் பேசுவதாக இன்னொரு ஆடியோவும் வாட்ஸ்அப்பில் உலா வருகிறது. இதைப் பேசியவர் காவல் துறையைச் சேர்ந்தவர்தானா, காவல்துறையின் பிரதிநிதிதானா என்பது தெரியவில்லை. அவர் பேசும் ஆடியோவில், “கிருஷ்ணமூர்த்தி அய்யா .... தடை உத்தரவை மீறி வெளியே வரக் கூடாது. வெளியே வந்தா வழக்கு பதிவு செய்ய எங்களுக்கும் தெரியும். அதை நீங்க எங்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. அது வழக்கறிஞரா இருந்தாலும் 144க்குக் கட்டுப்பட்டவர்தான். நீங்க வேணா எங்களை வேலைய விட்டு வீட்டுக்கு அனுப்புங்க. சிங்கம் படத்துல சொல்ற மாதிரி மளிகைக் கடை வெச்சுப் பிழைச்சிகிடுவோம். நாங்க ரோட்ல போற வர்ற யாரையும் அடிக்கலை. தேவைகளுக்காக வர்ற யாரையும் அடிக்கலை. தேவையில்லாம சுத்திக்கிட்டு அலையுதாங்க பார்த்தீங்களா...உங்களை மாதிரி வாய்ப் பேசிக்கிட்டு... அவங்களைதான் அடிக்கோம். நீங்க செய்யறதை செய்யுங்க ஐயா" என்று முடிகிறது அந்த ஆடியோ.

இந்த இரு ஆடியோக்களும் நாட்டின் முக்கியமான பிரச்சினையை வழக்கறிஞர், போலீஸ் மோதலாக மாற்றப் பார்க்கின்றன.

தமிழக பால் முகவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர் அணி செயலாளருமான சு.ஆ. பொன்னுசாமியிடம் பேசினோம்.

“இப்படிப்பட்ட முக்கியமான தருணத்தில் போலீஸார் இன்னும் கொஞ்சம் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும். அத்தியாவசிய பொருள் விநியோகத்தை அரசு அனுமதிக்கிறது. ஆனால். காலையில் பால் விநியோகம் செய்துவிட்டு மாலையில் அதற்கான கலெக்‌ஷனுக்காக தனியாளாக செல்லும் பால் முகவர்களை எல்லாம் போலீஸார் தாக்கியிருக்கிறார்கள். சென்னை ஆர்.கே. நகரில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. நான் சம்பந்தப்பட்ட பகுதியின் ஏசியிடம் பேசினேன். அதற்கு அவர், ‘பால் கடைங்குற பேர்ல காய்கறி விக்கிறாங்க,. அதான் அடிச்சோம்’ என்கிறார். பால் முகவர்கள் யாரும் அப்படி விற்பதில்லை என்று சொல்லியும் அவர் போலீஸின் செய்கைகளையே நியாயப்படுத்துகிறார். போலீஸாரை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் என்ன ஏதென்று விசாரிக்காமல் வெளியே வந்தாலே லத்தியால் அடிப்பது என்பது ஜனநாயகத்தை கேவலப்படுத்தும் செயல்” என்கிறார்.

இந்தப் பிரச்சினை பற்றி வடசென்னை தமிழ் சங்க தலைவர் இளங்கோவிடம் பேசினோம்.

“நோய்த் தொற்று ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இதுபற்றி பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. இது வேதனையான உண்மை. போலீஸாருக்கு தாக்குவதற்கு அதிகாரம் இல்லை என்றபோதும் அவர்கள் பொறுமை இழந்துதான் அந்த செயலில் ஈடுபடுகிறார்கள் என்று நினைக்கிறேன். படித்தவர்கள் அதிகம் இருக்கும் இடம் என்று சொல்லப்படும் சென்னையிலேயே 144 உத்தரவை மதிக்காமல் சில நூறு பேர் இன்னும் வீதிகளில் சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறார்கள்.

அதேநேரம் இவர்களை தண்டிக்கும் நோக்கத்தில் அத்தியாவசிய பணியாளர்களான பால் முகவர்கள், செய்தித் தாள் போடுபவர்களையும் போலீஸார் தாக்குவது கண்டிக்கத் தக்கது. பால் முகவர்கள், செய்தித் தாள் போடுபவர்கள் எல்லாருக்கும் சங்கம் இருக்கிறது. அவர்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை தரலாம். அதேநேரம் போலீஸார் வீதிகளில் வரும் மக்களை திருத்த வேண்டுமே தவிர தாக்கக் கூடாது. வேண்டுமென்றால் வாகனத்தைப் பறிமுதல் செய்யலாம்” என்கிறார்.

இதுபோன்ற அசாதாரணமான காலகட்டத்தில் வெறுப்புணர்வை விட பொறுப்புணர்வே நமக்கு அதிக தேவை என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும்!

-வேந்தன்

வெள்ளி, 27 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon