மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 29 மா 2020

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000: வழங்கும் தேதி அறிவிப்பு!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000: வழங்கும் தேதி அறிவிப்பு!

குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு அறிவித்த ரூ.1,000 வழங்கப்படும் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக விலகலைக் கடைப்பிடித்து வீட்டிலேயே தங்கியிருங்கள் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அன்றாடப் பணியாளர்கள் உட்பட பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.1,000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அத்துடன் இலவச அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் பொருட்கள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்காக ரூ.2,187 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கூட்டுறவுத் துறை நேற்று (மார்ச் 26) வெளியிட்ட அறிவிப்பில், “அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் 2 முதல் 15ஆம் தேதி வரை ரூ.1000 ரொக்கம் மற்றும் இலவசமாக அரிசி, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்படும். ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும். ரேஷன் கடை ஊழியர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 பயணச் செலவுக்காக வழங்கப்படும். ஊழியர்களுக்குத் தேவையான மாஸ்க், கிருமிநாசினிகள் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2 கோடியே 1 லட்சத்து 46,993 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், நியாய விலைக்கடைகளில் கூட்டத்தைத் தவிர்க்க டோக்கன் முறையில் ஒதுக்கப்பட்ட நாளிலும், நேரத்திலும் ரூ.1,000 மற்றும் பொருட்கள் விநியோகிக்கப்படும். மேலும் மார்ச் மாதத்தில் வாங்க இயலாதவர்கள் ஏப்ரல் மாதத்தில் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம். ரூ.1,000 மற்றும் இலவசப் பொருட்களைப் பெற விரும்பாதவர்கள், ‘www.tnpds.gov.in’ மற்றும் tnepds செல்போன் செயலி மூலம் அட்டை எண்ணைக் குறிப்பிட்டு விருப்பத்தை அறிவிக்கலாம்.

எழில்

வெள்ளி, 27 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon