மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 26 மா 2020

கொரோனா எதிரொலி: முதல்வர் முக்கிய அறிவிப்பு!

கொரோனா எதிரொலி: முதல்வர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் எதிரொலியாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடத்தி முக்கிய அறிவிப்புகளை இன்று (மார்ச் 26) வெளியிட்டுள்ளார்.

முதல்வர் பழனிசாமி இன்று (மார்ச் 26) தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார். இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், தமிழக டிஜிபி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் சிரமமின்றி கிடைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதன் முடிவில் முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது, அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தடையின்றி கிடைத்திட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் தலைமையில் இப்பணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

உணவகங்கள், மளிகைக் கடைகள் ஆகியவற்றில் பொருட்கள் நேரவரம்பு ஏதுமின்றி நாள் முழுவதும் கிடைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31 வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள் சுய உதவிக் குழுக்கள் ஆகியவை தினசரி/வாராந்திர/ மாதவட்டி மற்றும் அசலை வசூல் செய்கின்றன. தற்போது ஊரடங்கு உத்தரவினால் யாரும் வேலைக்குச் செல்ல இயலாததால், இது போன்ற பணவசூலை உடனடியாக மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் .இந்த உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்

அதிக மக்கள் வாழும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், பொதுமக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள் சந்தைகள், பெரிய தெருக்கள் போன்ற இடங்களில் அவ்வப்போது தீயணைப்பு இயந்திரங்கள் மூலமாகக் கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும்.

விவசாயம் தொடர்பான எந்த போக்குவரத்துக்கும் தடையில்லை. அவசர உதவி தேவைப்படுவோர் 108 எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம். இறைச்சி, கோழி, மீன் போன்ற உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்குத் தடையில்லை. அனைத்து வகையான கடைகளிலும் மக்கள் 3 அடி இடைவெளிவிட்டு நிற்க வேண்டும்

பெரிய காய்கறி சந்தைகளில் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்திட, விசாலமான மைதானங்களில் மார்க்கெட்டுகள் மாற்றி அமைக்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, காச நோய், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 மாதங்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளால் வழங்கப்பட வேண்டும்.

அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி மற்றும் நகர்வுகள் தடையின்றி நடைபெற, சென்னை மாநகராட்சி அலுவலகம் உட்பட ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் உதவி மையம் அமைக்கப்பட வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து வந்த 54,000 பேர்களின் பட்டியல் மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களை அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தவும், அவர்கள் வெளியே வராதவாறு தீவிரமாகத் தனிமைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டோர் குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை மாவட்ட ஆட்சியர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டோர் விதிமுறைகளை மீறி வெளியே வந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு நிவாரணங்கள் முழுமையாகப் பயனாளிகளைச் சென்றடைய ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினை தடுக்க கை ரேகை பதிவு செய்து பொருட்கள் வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

வேளாண்துறை அத்தியாவசிய துறை என்பதால், விவசாய தொழிலாளர்கள், அறுவடை இயந்திரங்களின் நகர்வு அனுமதிக்கப்படுகிறது. வேளாண் விளை பொருட்களை சந்தைக்கும் தொழிற்சாலைகளுக்கும் எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்படுகிறது.

காய்கறிகள், பழங்கள், முட்டைகள் போன்ற விளை பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் பிற நபர்களுக்கும் தேவையான அனுமதி சீட்டை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்க வேண்டும்.

கொரோனா வைரசின் தீவிரத்தையும், மனித சமுதாயத்திற்கு இது பேரழிவு ஏற்படுத்தும் என்பதையும் மக்களுக்கு உணர்த்தும் வண்ணம்,

ஒலிபெருக்கி, தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், துண்டு பிரசுரங்கள் மூலம் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ” என்பது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

மேலும், ஆன்லைன் வணிக நிறுவனங்களான கிராஃபர்ஸ், அமேசான், பிக் பேஸ்கட், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் மூலம் மளிகைப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்கனவே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கவிபிரியா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வியாழன் 26 மா 2020