மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 13 ஆக 2020

ரேஷன் கடைகளில் பைப் மூலம் பொருட்கள் வழங்கல்!

ரேஷன் கடைகளில் பைப் மூலம் பொருட்கள் வழங்கல்!

கொரோனா பரவல் எதிரொலியால் ரேஷன் கடைகளில் பைப் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில்தான் மக்கள் வெளியே வரவேண்டாம் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்குக் கூட மக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

எனவே ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கூடுதலாக உணவுப் பொருட்கள் வழங்கப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், "சந்தையில் 27 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் கோதுமை 2 ரூபாய்க்கும், 32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் அரிசி 3 ரூபாய்க்கும் மானிய விலையில் பொது வினியோகத் திட்டத்தின் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்ப அட்டைக்கு மாதம் 5 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது. தற்போது இது கூடுதலாக இரண்டு கிலோ சேர்த்து ஏழு கிலோவாக வழங்கப்படும். இந்த உத்தரவை பின்பற்றி உணவுப் பொருள்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்படுகிறது” என்று தெரிவித்திருந்தார்.

அதுபோன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 1000 ரூபாய் பணம் , அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் ஆகியவை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இதனிடையே, ரேஷன் கடைக்கு செல்லும் மக்களுக்கும், கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் நோய் தொற்று ஏற்படாத வண்ணம் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

அந்த வகையில், ஒருவருக்கு ஒருவர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு பிவிசி குழாய் வழியாக ரேஷன் பொருட்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி உட்பட பல்வேறு இடங்களில் பிவிசி குழாய் வழியாகப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கூட்டுறவு பண்டகசாலை கடையில் அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை ஆகிய பொருட்கள், எடை போடும் மிஷின் முதல் மக்கள் நிற்கும் இடம் வரை தாழ்வாக பிவிசி குழாய் அமைத்து அதன் வழியாக வழங்கப்பட்டது. இந்த முறை பல்வேறு இடங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இம்முறை பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

கவிபிரியா

வியாழன், 26 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon