மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

1.7 லட்சம் கோடி ரூபாய்: நிதியமைச்சரின் ஊரடங்கு நிவாரணம்!

1.7 லட்சம் கோடி ரூபாய்: நிதியமைச்சரின்  ஊரடங்கு நிவாரணம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு பொருளாதார சலுகைகளை அறிவித்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அது இரண்டாவது நாளை எட்டியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு, அன்றாடப் பணியாளர்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, “ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கில் வைத்திருக்கும் ஒவ்வொருவரது கணக்கிலும், பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கிலும், முதியோர் உதவித்தொகை பெறும் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டவர்களின் வங்கி க் கணக்கிலும் 7,500 ரூபாய் செலுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் டெல்லியில் இன்று (மார்ச் 26) செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போன்ற உடனடி உதவி தேவைப்படும் ஏழை மக்கள் அனைவருக்கும் ஒரு தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்புத் திட்டம் 1.7 லட்சம் கோடி மதிப்பிலானது. இதனால் ஒருவர் கூட பசியோடு இருக்கமாட்டார்கள். வரும் மூன்று மாதங்களுக்கு சுகாதாரப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் தொகையாக ரூ.50 லட்சம் இருக்கும். இந்த காலகட்டத்திற்குள் கொரோனா வைரஸை முழுமையாக ஒழித்துவிட முடியும் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தில் 80 கோடி மக்கள் (இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தொகை) உள்ளடங்கியுள்ளனர். ஏற்கனவே ஒரு நபருக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அடுத்த 3 மாதங்களுக்கு கூடுதலாக 5 கிலோவும், 1 கிலோ பருப்பும் வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தரப்படும் 6,000 ரூபாயில் 2,000 ரூபாய் முன்கூட்டியே வழங்கப்படும். 8.69 கோடி விவசாயிகள் இந்த நேரடிப் பணப்பரிமாற்றத்தின் மூலமாக உடனடியாக பயன்பெறுவார்கள். ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டப் பணியாளர்களுக்கு, கூடுதலாக ரூ .2000 வழங்கப்படும். இதனால் 5 கோடி குடும்பங்கள் பயனடையும். முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், பென்சனர்களுக்கு கூடுதலாக ரூ.1,000 இரண்டு தவணைகளில் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதன்மூலம் 3 கோடி மக்கள் பயனடைவார்கள். நேரடி பணப் பரிமாற்றம் மூலம் விவசாயிகள், ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் பதிவு செய்தவர்கள், ஏழை விதவைகள், பென்சனர்கள், மாற்றுத் திறனாளிகள் பயன்பெறுவர்” என்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

மேலும், “உஜ்ஜவாலா திட்டத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள 8.3 கோடி மக்கள் உள்ளடக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவச சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும். அடுத்த 3 மாதங்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு 24 சதவிகிதத்தை மத்திய அரசே வழங்கும். வருங்கால வைப்பு நிதியில் உள்ள தொகையில் 75% தொகை அல்லது 3 மாத ஊதியத்தை பணியாளர்கள் முன்பணமாக பெறலாம். இதன்மூலம் 4.8 கோடி ஊழியர்கள் பயன்பெறுவர்” என்று தெரிவித்தவர்,

“மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அடமானம் எதுவும் இல்லாமல் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். வங்கிகளில் ஜன்தன் கணக்குகள் வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கப்படும்.மாநில அரசுகள் பயன்படுத்துவதற்காக 31,000 கோடி நிதியை விடுவிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிதியை மருத்துவ பரிசோதனை, விழிப்புணர்வு நடவடிக்கை மற்றும் சுகாதாரப் பணிகளுக்கு மாநில அரசுகள் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” என்றும் வலியுறுத்தினார்.

எழில்

வியாழன், 26 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon